16 ஒரு தோழியாய்

319 26 2
                                    

16 ஒரு தோழியாய்

அமுதனின் சினத்தை பார்த்த தன்மயா, தன் மனதிற்குள் அவசர ஆலோசனை நடத்தி அதை குறைப்பதற்கான வழியை தேடினாள்.

"நான் தங்களிடம் ஒன்று கூறலாமா?"

"என்ன வேண்டுமானாலும் கூறலாம்"

"சினம் கொள்ளாதீர்கள். மனதை ஆறவிட்டு தங்கள் தாயைப் பற்றி சிந்தியுங்கள். நியாயத்திற்கு புறம்பான விடயங்களில் அவர் இதற்கு முன்பு எப்படி நடந்து கொண்டார்?"

"அவரும் சினம் தான் கொண்டிருக்கிறார்" என்றான் யோசிக்காமல்.

"அப்படி என்றால் அவர் நிச்சயம் இதையும் புரிந்து கொள்வார். அவர் தங்களின் தாயார். தாங்கள் நாட்டின் நலன் குறித்து தாம் எந்த அளவிற்கு சிந்திக்கிறீர்களோ, அந்த அளவிற்கு அவரைப் பற்றியும் சிந்திக்க வேண்டியது அவசியம் அல்லவா? தனது சகோதரனை பற்றிய உண்மை தெரிய வரும் போது, அவரும் தானே காயப்படப் போகிறார்? மேற்கொண்டு தாமும் அவரை காயப்படுத்த போகிறீர்களா? அவர் நிற்கவே சிரமப்படும் நேரத்தில், அவருக்கு ஆதரவு  அளித்து, அவருக்கு தோள் கொடுத்து தாங்க வேண்டியது, அவரது மகனான தங்கள் கடமை அல்லவா?"

அவளை அதிசயமாய் பார்த்துக் கொண்டு நின்றான் அமுதன். நாடு என்று வரும்போது, அவன் வேறு எதைப் பற்றியும் சிந்தித்ததே இல்லை... அவனது தாயாரை பற்றியும் கூடத்தான்.

"தங்கள் தாயாருக்காக, தங்கள் கோபத்தை சிறிது கைவிட்டு, நிதானமாய் யோசித்துப் பாருங்கள். 'தங்கள் சகோதரர் தவறு செய்திருக்கிறார்' என்று அவரிடம் முகத்தில் அறைந்தது போல் கூறினால், அவர் உடைந்து போவார். அப்படிச் செய்யாமல், அவரை காயப்படுத்தாமல், அவருக்கு புரிய வையுங்கள். தங்கள் தந்தையை சந்திப்பதற்கு பதிலாக, முதலில் அவரை சந்தியுங்கள். தங்கள் நாட்டின் எல்லையில் நடக்கும் கொடுமைகளை அவரிடம் எடுத்து கூறுங்கள். அங்கு பெண்கள் படும் அவதிகளை தெரியப்படுத்துங்கள். தங்களிடமிருந்து மக்கள் நியாயத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை எடுத்துரையுங்கள். எத்தனை பெண்கள் தங்களை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கூறுங்கள். அதன் பிறகு, மெல்ல இந்த விளைவுகளுக்கு பின்னால் இருப்பது யார் என்று கூறுங்கள். அவரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவதற்கு பதிலாக, விடயத்தின் வீரியத்தை அவருக்கு புரிய வையுங்கள்" என்றாள்.

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Where stories live. Discover now