1.அத்தியாயம்

1.7K 24 4
                                    

ஆதவன் உதயமாகாத அதிகாலை வேளை வீட்டின் மாடியில், இயற்கையின் அமைதியோடு கலந்து தியானம் செய்துக்கொண்டிருந்தாள் ஒளிர்மதி. சரியாக மணி நான்கு நாப்பதாக, கைகளை பரபரவென தேய்த்து கண்கள் மீது ஒற்றி எடுத்தவள், மூடியிருந்த மொட்டு திறந்து வானத்தை நோக்குவது போல், கருநீலமாக காட்சியளித்த வான் அழகை கிரகித்தபடி, காலை மலரும் மலராக விழிதிறந்தாள் ஒளிர்மதி.

சில நிமிடங்கள் அந்த ஏகாந்த நிலையை ரசித்தவள், பின் மாடியிலிருந்து கீழிறங்கி, வாசலை கூட்டி பெருக்கி, சானத்தை தண்ணீரில் சேர்த்து தெளித்து கோலமிடத்துவங்கினாள். செவ்வாயும், வெள்ளியும் நிச்சயம் வாசலில் சானம் கலந்து தெளித்திருக்க வேண்டும். இல்லையெனில் மகமாயி பாட்டி ஆட்டம் ஆடிவிடுவார். அவள் கோலம் போடும் அழகையும், நேர்த்தியையும் ரசித்தாலும் ஒருபோதும் அவளை பாராட்ட வாய் வராது மகமாயிக்கு.

கம்பி கோலம், படி கோலம், ரங்கோலி என கிழமைக்கு தகுந்தாற் போல் கோலமிடுவாள். எப்போது ஒளிர்மதி பருவ வயதை நெருங்க ஆரம்பித்தாளோ, அப்போதே அவ்வேலை அவள் வசமானது. அதுவரை அவளது பாட்டி மகமாயி அல்லது அன்னை சங்கீதா மட்டுமே அதை செய்தனர். முதலில் அதை செய்யவே சோம்பேறித்தனம் பட்டாள். காரணம் பாட்டிக்கு ஆதவன் வரும் முன்பே கோலம் போட்டிருக்க வேண்டும், தாமதமானால் அதற்கு அவரிடம் ஏச்சு பேச்சு வாங்க வேண்டும். மழையோ குளிரோ அதிகாலை அவ்வாசல் பளிச்சென்று கூட்டி கோலத்தில் மிளிர வேண்டும் என்பது கட்டளை. ஒளிர்மதிக்கு உடல்நிலை சரியில்லாத போது, பாட்டி செய்வார்.

வீதியில் உள்ளவர்கள் கூட ஆச்சரியப்படுவர், இந்த காலத்தில் பெண்கள் அக்காலம் போல் கோலமிடுவது இல்லை. அப்படியே செய்தாலும் அதில் பெயருக்கு மட்டுமே அவர்களது ஈடுபாடு தெரியும். ஒளிர்மதி ரசனையோடு கோலமிடுவது அப்பகுதியினருக்கு வியப்பும் ஆச்சரியத்தையும் தரும்.

கொல்லைப்புறத்திற்கு வந்தவள் அங்கு இருந்த மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். மாட்டின் சானத்தை வாரி போட்டு, கழுநீர் தொட்டியை சுத்தம் செய்து, ஆங்காங்கே விழுந்த குப்பைகளை பெருக்கி முடித்து, மாட்டிற்கு தீவனம் வைத்துவிட்டு நிமிரும்போது அவள் இடுப்பு கழுண்டு விழுவது போலவே தான் இருந்தது. மணி ஆறு ஆகியிருந்தது, சூரியன் தனது வரவை பதிவு செய்யும் விதமாக வியர்வையில் குளித்திருந்தவள் மீது இதமான வெயிலை பாய்ச்சினான்.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now