💚 இணை 14

701 49 18
                                    

சாம்பவியும், செல்வாவும் நிச்சயதார்த்தத்திலிருந்து புறப்பட்டு நேராக மெரினா கடற்கரைக்கு வந்து சேர்ந்திருந்தனர். செல்வா பவியை காரிலேயே இருக்கச் சொல்லி விட்டு சற்று தூரமாக சென்று சபாபதிக்கு கால் செய்து அவர்கள் நிச்சயதார்த்தத்துக்கு போய் வந்ததையும், அங்கு யாரும் பவியைக் கண்டுகொள்ளவேயில்லை எனவும் சொல்லி விட்டு, அவள் சற்றே கவலையாக தெரிந்ததால்
அவளை பீச்சுக்கு அழைத்துச் சென்று விட்டு பத்திரமாக வீட்டுக்கு கூட்டிச் சென்று விடுவதாக அவரிடம் ரிப்போர்ட் செய்தான்.

சபாபதி ஒரு செருமலுடன் அவனிடம், "ரொம்ப ஊரு சுத்திட்டு இருக்காம பவிம்மாவ சீக்கிரத்துல வீட்டுக்கு கூட்டிட்டுப் போடா..... இல்ல சப்போஸ் அவ பீச்ல ரொம்ப நேரம் விளையாடணும்னு ஆசைப்பட்டான்னா, நாளைக்கு ஒரு நாள் ஹாஃப் அ டே லீவ் போட்டுக்க சொல்லு!" என்று சொன்னதும் வந்தது அவனுக்கு அப்படி ஒரு கோபம்.

"யோவ்.... இன்னா ஆளுய்யா நீ? பெத்த புள்ள மனசுக்குள்ள என்னா நென்ச்சுக்குது; ஏது நென்ச்சுக்குதுன்னு கூட தெரியாத அப்டி இன்னத்த தான்யா வேலைய செஞ்சு கிழிச்சுனு இருக்க! ஒருநா அதுக்கு ஒடம்பு அனலா கொதிச்சுனு இருக்கு; அப்பக்கூட மாத்தரய முழுங்கினு எனக்கென்னனு இஸ்கூலுக்கு கெளம்பி போயினே இருக்கு! இஸ்கூல் விட்டு வந்தப்புறம் ஏன்டா கண்ணு லீவு எடுத்துக்கலன்னு அதாண்ட கேட்டா அட்டென்டென்ஸ் புல்லா இருந்தா, அதுக்கொரு சர்ட்டிபிகேட் குடுப்பாங்க செல்வாங்குது! நீ என்னடான்னா சொம்மா ஊரு சுத்திப் பாக்க போனதுக்கோசரம் நாளைக்கு லீவு வேணா போட்டுக்க சொல்லுன்னு பெரிய அக்கற .......ப் பேசுற! ........ நீயெல்லாம் அந்த புள்ளைக்கு ஒரு அப்பன்! ச்சைய்.........!" என்று செல்வா வெறுப்பாக பேச பேச சபாபதிக்கு அவனது பேச்சில் கோபம் வராமல் மிகவும் குற்ற உணர்ச்சியாக தான் இருந்தது.

முழு அட்டென்டென்ஸூக்கும் மகளின் பள்ளியில் இப்படி ஒரு சிறப்பான கவனிப்பு இருக்கும் என்று நிஜமாகவே அவருக்குத் தெரியாது. வருடாவருடம் அவள் மெடல்கள், கோப்பைகளுடன் வரும்பொழுது அதை அவர் பெரிதாக கண்டுகொண்டதும் கிடையாது. எண்ணிக்கை மூன்றா, நாலா என்று மட்டும் அரைக்கண்ணில் பார்த்து விட்டு அவளுக்கு கடமைக்காக ஒரு கங்க்ட்ராஸ் சொல்லி விட்டு நகர்வதோடு சரி!

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now