💚 இணை 1

3.4K 66 16
                                    

அதிகாலை ஏழு மணியளவில் சென்னை வடபழனி முருகன் கோவில் தன்னைத் தேடி வரும் நிறைய பக்தர்கள் மற்றும் அவர்களுடைய ஏகப்பட்ட ப்ரார்த்தனைகளுடன் உங்கள் வேண்டுதல்களில் சிலவற்றை எங்கள் வேலன் அருளால் நிறைவேற்றித் தர சித்தமாக இருக்கிறோம் என்று மானசீகமாக நம்மிடம் சொல்லும்படி நித்தியப்படி பூஜை, இன்று காலை முஹுர்த்த வேளையில் அங்கு நடக்கப்போகும் திருமணங்களின் ஆயத்தம் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

இந்த பரபரப்பான இயக்கம் எல்லாம் எனது ஸ்திரமான சிந்தனைக்கு எந்த இடையூறும் விளைவிக்க முடியாது என்ற பாவத்தில் பிரகாரத்தில் கம்பீரமாக பத்மாஸனத்தில் அமர்ந்து கந்தகுரு கவசத்தை உளமுருகிப் பாடிக் கொண்டிருந்தார் திருவாளர் சபாபதி.

அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருளின்பம் வீடுமே தந்தருள்வாய்

தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா
சண்முகா சரணம் சரணம் ஸ்கந்தகுரோ

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா

போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி

என்று ஸ்தோத்திரத்தின் அடுத்த வரி என்ன வரும் என்றெல்லாம் தலையை சொறியாமல் திடீர் மழையால் புறப்படும் வெள்ளம் போன்ற வேகத்துடன் 
தன்னுடைய இஷ்ட தெய்வத்தை பாடி வணங்கியபடி ஒரு தனி உலகிற்குள் சஞ்சரித்தவரை சலித்த பார்வை பார்த்து அரை உறக்கத்தில் தலையைச் சொறிந்து கொண்டு கொட்டாவி விட்டான் நம் கதையின் நாயகன் வாகை செல்வன். பசி கொண்ட முதலை போல வாயை பெரிதாக திறந்திருந்தவன், தன்னுடைய வாய் துர்நாற்றத்தை தானே சகித்துக் கொள்ள முடியாமல் வேகமாக வாயையும், வாயுடன் முக்கையும் சேர்த்து மூடிக் கொண்டான்.

புருவத்திற்கும் கீழே வளர்ந்து விட்ட தன்னுடைய சிகையை கைகளால் கோதிக் கொண்டவன், இங்கு தான் வரப்போகிறேன் என்று சொல்லியிருந்தார் என்றால்  வீட்டில் இருந்து கிளம்பும் போது அவசரமாக ஒரு சிட்டுக்குருவி குளியலை மட்டுமாவது போட்டு வந்திருக்கலாம் என்று நினைத்தான். எப்போதும் நம் நாயகன் குளியலுக்கும் சோம்பி அதை ஒதுக்கும் ரகத்தினன் தான்! ஆனால் இந்த ஒரு வார காலமாக அவனுக்கு குளியல் மிகவும் பிடித்துப் போயிருந்தது.

இளையவளோ என் இணை இவளோ✔Onde as histórias ganham vida. Descobre agora