இவளும் இவனும்

38 1 0
                                    

இவளுக்கு இவன் தானென
இறைவன் நிச்சயிப்பானாம்
வேலைகள் ஆயிரத்திலும்
வீண்வேலை இதை அவன்
செய்வானோ என சிரித்தேன்

மூவாண்டு முன்னர் அம்மா
முனைப்போடு சொன்னாள்
அமெரிக்காவில் ஒருவனாம்
எனக்கு பார்க்கட்டுமா என்றாள்
படிக்கிறேன் திருமணம் வேண்டாம்
என தட்டிக் கழித்து அமைதியாய்
அழைப்பேசியை வைத்தேன்
யாரென்று நான் கேட்கவுமில்லை
அவள் சொல்லவும் இல்லை!

ஓராண்டு முன்னர் அலைபேசி
அழைத்ததும் அம்மா பேசினாள்
என் ஜாதகம் பொருந்தியதாம்
மாப்பிள்ளை சிவப்பாம் என்றாள்
அதற்கு நான் என்ன செய்யட்டும்?
அமெரிக்காவில் வேலையாம்
பேசி பார்க்க வேண்டுமாம்
திருமணம் மேலுள்ள பயத்தால்
ஒரு வாரம் பேசி பார்க்கவில்லை

இருந்தும் ...

முகநூலில் நண்பர்களானோம்
முகத்தை புகைப்படம் மட்டுமே
அறிமுகம் செய்தது இருநாள் பின்
என்னோடு வாழ்நாள் வழிகளில்
தடம் பதிக்க வருவாயா என அவன்
தட்டச்சு செய்தான் இரவு மூன்று
மணிக்கு எழுந்ததும் சரி என்றேன்

அந்த தைரியம் எனக்கு பிடித்தது
ஒரு முறை கூட கண்ணோடு கண்
நோக்கவில்லை கையோடு கையும்
சேர்க்கவில்லை திருமண வாரம் முன்
ஓரிரு முறை எட்ட நின்று பார்த்தோம்

திருமண நாளன்று புகைப்படம் எடுக்க
முதல்முறை சிரித்த கண்களை நோக்கி
முத்தம் தராமல் தப்பின நான்கு கண்கள்
திணறி சந்தித்த கண்கள் அகலவில்லை
கண்கள் உருவம் நோக்காமல் கருவிழியை
ஊடுருவி உள்ளத்தில் பதிந்தன பார்வைகள்

மூவாண்டு முன்னர் அம்மா சொன்ன
அமெரிக்க பையனும் என் கணவனும்
ஒன்றென தெரிந்ததும் சிறு புன்னகை
பூத்து தொடங்கினோம் நம் காதலை!

'ன்' கவிதைகள்Όπου ζουν οι ιστορίες. Ανακάλυψε τώρα