மீனிடம் சிக்கிய வலை

34 3 2
                                    

நீ "நான் அழகான பெண்ணிடம்
பேசப் போகிறேன்" என்கிறாய்
கண்ணாடி முன் நின்று அழகு
சரி பார்க்கிறேன் பேசும் உன்
உதடுகளுக்கு என் முத்தங்கள்

நீ "நான் அவளையே நினைத்து
உருகுகிறேன்" என்றாய் உன்
முன்னாள் காதலிக்காக, என்
நினைவு உன்னைக் கொல்வதால்
பொறாமையால் என்னைக் கொல்ல
எத்தனிக்கும் மனத்துக்கு முத்தங்கள்

நீ "நான் அவளுடன் ஊர் சுற்றி
படங்கள் பார்ப்பேன்" எனும்போது
அவள் யாரென வினாவும் கோபம்
நெருப்பாய் புகைமூட்ட விழிகளில்
நீர்த்துளிகள் இருந்தும் படம்
பார்க்கும் கண்களுக்கு முத்தங்கள்

எவளுமே இல்லை எனினும்
எதற்கு தான் இந்த நாடகம்
தூண்டில் மீனாக சிக்கினேன்
நான் உன்னிடம் இருந்தும்
தூண்டிலை வீசியவன்
மீனிடம் சிக்கியது தான்
காதல் செய்யும் வினோதம்

'ன்' கவிதைகள்Where stories live. Discover now