ஆனந்தம் - 9

462 28 5
                                    

தாத்தாவின் அறையினுள் அமர்ந்திருந்த பைரவிக்கு வெளியில் தேவா பெரியவர்களிடம் வாதாடுவது தெளிவாக கேட்டது. திருமணம் முடிந்து சில நிமிடங்களில் வீட்டிற்கு வந்திருக்க அவர்களுக்கு செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் மொத்தமும் முடிந்திருந்தன.

மதிய உணவை முடித்து இளைஞர்கள் கேரம் போர்டு ஒன்றை எடுத்து வைத்து விளையாட அந்த நேரம் தேவாவிற்கு முக்கியமான அழைப்பு ஒன்று உடனே ஊருக்கு வரும்படி செய்தி தாங்கி வந்தது.

இப்பொழுது தானே திருமணம் நடந்துள்ளது என அவன் தந்தை மறுக்க, வேலை தான் தனக்கு முக்கியமென தேவா பிடிவாதமாய் நின்றான்.

அரை மணி நேரமாக நீளும் அந்த பேச்சைக் கேட்டுக்கொண்டே கட்டிலில் அமர்ந்திருந்த பைரவி எதிலும் நுழையவில்லை. நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுடன் இருந்தாள்.

"அது எப்படி ப்பா அவன் தான் புரிஞ்சுக்காம மாதிரி பேசுறான், நீங்களும் அவன் பேசுறதுக்கெல்லாம் சரி சரின்னு சொல்றீங்க?" ரத்தினம் தந்தையிடம் சண்டைக்கு நின்றார்.

"அவன் பேசுறது என்ன தம்பி தப்பா இருக்கு? சம்பிரதாயம் எல்லாம் முடிசாச்சு, இங்கேயே நின்னு என்ன பண்ண போறான்? அவரார் பொழப்ப அவரார் பாத்தா தானே துட்டு சம்பாதிக்க முடியும். இல்ல அவசரத்துக்கு உன்கிட்ட வந்து பத்து நூறுன்னு கேட்டா அவனை ஒரு வார்த்தை பேசாம எடுத்து நீட்டிடுவியாடா நீ?" மகனை அர்ஜுனன் அதட்டி கேள்வி கேட்க மொத்தமாய் அமைதியாகிவிட்டார் அவர்.

"எனக்காக நான் சொல்லல ப்பா, நம்ம பாப்பாவ யோசிச்சு பாருங்களேன். ஒடனே கல்யாணம்னு சொன்னோம் இப்ப..."

மாமனாரின் குரல் கேட்கும் பொழுதே கதவு திறக்கும் சத்தம் கேட்டு வெடுக்கென திரும்ப, "உன் டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டியா பைரவி?" கேள்வியோடு வாசலில் நின்றான் தேவா.

இல்லை என பைரவி தலையை ஆட்டவும், "சரி வா எடுத்து வை. கிளம்பலாம்" என்றான்.

கண்கள் அவனைத் தாண்டி பெரியவர்களின் அனுமதி தேடிப் பாய, "என் அப்பாவ அய்யப்பா பாத்துக்குவார், நீ வா நேரமாச்சு" அவசரப்படுத்தியவன் பேச்சை மீறவும் முடியாமல் அன்னையின் அனுமதியும் இல்லாமல் தத்தளித்தாள்.

ஆனந்தபைரவிWhere stories live. Discover now