42 ஷீலாவா...?

Start from the beginning
                                    

பாட்டியும், இளந்தென்றலும், ஆட்டோவில் கோவிலுக்கு புறப்பட்டார்கள். அவர்கள் கோவிலை சென்றடைந்த போது, கோவிலில் ஏகப்பட்ட கூட்டம் இருந்ததை பார்த்து, அங்கு என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள ஆர்வமானார்கள். அங்கு மாமல்லன், வந்திருந்தவர்களுக்கு புடவைகளை தானம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அவர்கள் முகம் மலர்ந்தது. மிக நீண்ட வரிசையில் நின்று பெண்கள் அதை வாங்கிச் சென்றார்கள். வழக்கம் போல், அவனருகில் நின்று ஒவ்வொரு புடவையாய் மாமல்லனிடம் கொடுத்துக் கொண்டிருந்தான் பரஞ்சோதி. எதற்காக அவர்கள் அதை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள அவர்களிடம் வந்தார் வடிவாம்பாள்.

"என்ன தம்பி இதெல்லாம்?" என்றார் மாமல்லனை பார்த்து.

"ஒவ்வொரு வருஷமும் அம்மாவோட பிறந்தநாளுக்கு நான் புடவை தானம் கொடுக்கிறது வழக்கம். என் கல்யாணத்துக்கு முன்னாடி அதை செய்யணும்னு நினைச்சேன். அதான் செஞ்சுகிட்டு இருக்கேன் பாட்டி"

"கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி"

"இதை எல்லாருக்கும் கொடுக்க, நீயும் ஹெல்ப் பண்றியா தென்றல்?" என்றான் மாமல்லன்.

"இல்ல இல்ல... நீங்களே கொடுங்க" என்றாள் பாட்டியை பார்த்தபடி.

"உங்க கல்யாணத்துக்காக செய்றது. நீயும் சேர்ந்து செய்யணும்னு அவர் விரும்புறாரு. போய் அவருக்கு ஹெல்ப் பண்ணு. நான் போய் ஐயர் கிட்ட பூஜைக்கு தேவையான ஏற்பாட்டை எல்லாம் செய்ய சொல்றேன். அதுக்குள்ள நீயும் முடிச்சுட்டு வா."

அவளை தன்னருகில் இழுத்த வடிவாம்பாள்,

"உனக்கு விருப்பமில்லைன்னு அவர்கிட்ட காட்டிக்கிட்டே இருக்காத... புரிஞ்சுதா உனக்கு?" என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்.

அவளிடம் புடவையை கொடுத்து *ஆரம்பி* என்பது போல் செய்கை செய்தான் மாமல்லன். சந்தோஷமாய் அதை அனைவருக்கும் வழங்க தொடங்கினாள் இளந்தென்றல். பரஞ்சோதியின் கண்கள் கோவில் வளாகத்தில் கூடியிருந்த கூட்டத்தை  துழாவி கொண்டிருந்தன. அது இளந்தென்றலை பின் தொடரும் நபருக்கு, அவளை காயப்படுத்த மிகச் சிறந்த சந்தர்ப்பம் அல்லவா?

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now