கனவில் பூத்த அழகே

3 2 1
                                    

கண்ணாடியிலும் நீயே!
என் நாடியிலும் நீயே!
கனவில் பூத்த அழகே!
மதியில் வடித்த மெழுகே!

விடை கூற வந்த தேவதையே!
புன்னகை சூடி வந்த வெண்மதியே!
தடைகள் உடைத்திடும் உன் காதலே!
மண்ணகத்தில் என் மறு-தாய் அவளே!

பேசும்போதும், நீ பேசாதபோதும்,
உந்தன் நினைவே போதும்,
என் நெஞ்சம் படபடக்க;
ஏனோ இயலவில்லை, அதைத் தடுக்க!

வெண்முகிலின் மாசில்லா நிறமோ?
தாய்ப்பாலின் குற்றமில்லா குணமோ?
நேசத்தில் நனைத்து எடுத்த நெஞ்சமோ?
இதழ் சிணுங்க எழும் சொற்களிலே விழுந்தேனோ?

நீ கவிக்குயிலாக கரையோரம் நின்றிருக்க,
நீரலைகள் உனைப் பற்றிக் கொள்ள ஆர்ப்பரிக்க...
மாலை வானில் ஊர்ந்து செல்லும் மேகம்,
உன்னைக் கண்டதும், வழி மறந்து, தொலைந்தே போகும்!

எனது விடியல்களை மூட்டை கட்டிச்சென்றவளே!
கனவுகளில் கேட்காமல் கட்டிப்போட்டவளே!
பூக்கள் இதழ் திறக்கும், உன் மூச்சினிலே!
முட்கள் தேன் சுரக்கும், உன் பேச்சினிலே!

வருடிப் போகும் மெல்லிசைக் காற்றில்,
திருடிப் போவேனே, உன் இன்வாசனையை!
உன் விரல் கோர்த்து நடந்தால் போதும்,
கடுங்காட்டுப் பயணம் கூட சுகமாகும்!

இளம்பூவே! நீ என்னோடு சேர,
தவம் இருந்தேனே நாட்கள் பல ஓட,
விரைவாக எனக்குள் வந்துவிடு!
குறையாமல் உன்னை தந்துவிடு!

நகராமல் நிற்கிற தென்காலம்,
சுற்ற மறந்து போகிற திஞ்ஞாலம்!
தேடாமல் தேடினேன், உனை நானும்,
விடாமல் துரத்துதே நின் கண்ணும்!

அன்போடு அணைத்துவிடு!
அழகோடு நனைத்துவிடு!
விளக்காக ஒளிர்ந்துவிடு!
விலகாமல் சேர்ந்தே இரு!

உயிரே! என் சுவாசம் தொட்டு,
விழியோடு விளையாடுகிறாய்!
புதிதாய் விரிந்த காதல் மொட்டு,
வழி மறித்து, கவித்தூறல் போடுகிறாய்!

கவிக்கிளை Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin