தூது செல்

3 1 1
                                    

சாலையில்,
அவள் நடக்கையில்,
என் இதயம் படபடப்பதை,
இளங்காற்றே! அவள் கேட்க, தூது செல்!

தொலைவினில்,
அவள் வருகையில்,
எப்படியோ அறிந்த என் விழி,
காண ஏங்கும் வலி,
ஒளியே! அவள் பார்க்க, தூது செல்!

அவள் கேசம் அசைகையில்,
எனது உயிர் ஊசலாடுதே!

விளக்கம் கேட்டு, ஸ்பரிசமே!
நீ தூது செல்!

அவள் உதிர்க்கும் புன்னகையில்,
என்னுள் அருவிகள் விழுகிறதே!
ஏன்? என்றறிய, மலரிதழே!
நீ தூது செல்!

கண்களால்,
ஒரு பார்வை தூவுகையில்,
என் மனம் விண்வெளியில் அலைகிறதே!
பதில் வேண்டி, நிலவே!
நீ தூது செல்!

மௌனமாய் என்னை,
மெல்லக் கொல்லும் செயலை,
கற்றது எங்கே என்றறிய,
என் தமிழே! நீ தூது செல்!

இவன் காதல்,
புரியா மின்மினிப் பூவே!
கவிதையில் பழகும் என்னை,
மெய்யாய் ஏற்பது என்றோ?

தூது செல்ல மார்க்கம் இல்லையடி!
உன் நெஞ்சம் புரிய வழியுமில்லையடி!

உன்னில் மூழ்கிப் போன நான்,
உன் இதயத் தீவில் கரையேறிட,
காதல் பாலம் செய்தேனடி...
இரு மனம் இணைத்து,
ஓருயிராய் நம் பயணம் தொடங்கவிடு!

கவிக்கிளை Donde viven las historias. Descúbrelo ahora