மீண்டும் அதே சிரிப்பை உதிர்த்து.."தம்பிக்கு பொசுக்குனு கோபம் வராப்ல.." என்று விட்டு ஏதோ பெரிய ஜோக் கூறியது போல் சிரிக்க சக்தியோ எரிச்சலில் முகம் திருப்பிக்கொண்டான்.

"தம்பி இவ என் பொண்ணு..பாவம் புள்ளக்கி பேச முடியாது.." அவள் இழுக்கவும்.."நான் டாக்டர் இல்ல.."பட்டென வந்தது சக்தியிடமிருந்து பதில்.

அதற்கும் வெட்கமே இல்லாமல் சிரித்தவள் தன் பெரிய உடம்பை ஜன்னல் பக்கம் சாய்த்து கால்களை தூக்கி அந்த பெண்ணின் மடியில் வைத்து ஒரு பார்வை பார்க்க அவள் புரிந்தது போல் தலையாட்டி விட்டு அழுத்திவிட ஆரம்பித்தாள்.

சக்திக்கோ அவளைப்பார்க்கவே பாவமாய் இருந்தது. கண்டிப்பாக அவள் இவளது பெண்ணாக இருக்க முடியாது என மனம் கூறியது. அவள் நன்றாக குறட்டை அடித்து தூங்கிட சக்தி ஒரு பெருமூச்சோடு ஒரு புத்தகத்தில் ஆழ்ந்தான்.

இடையில் ஒரு ஸ்டேஷனில் நிறுத்தியிருக்க டீ மற்றும் சில சிற்றுண்டிகளுடன் ஒருவன் இவர்களருகில் வர சக்தி அவனை அழைத்து டீ ஒரு கப்பும் இரவு உணவையும் வாங்கிக்கொண்டான். வாங்கிக்கொண்டு அவன் திரும்பவும் தான் கவனித்தான் மீண்டும் அந்த பெண்ணை. அவளிற்கு தான் பேச முடியாதுல சட்டென நினைவு வர பெரியவளும் உறக்கத்தில் இருக்க ஒரு டீ கப்பை வாங்கிய சக்தி அவளிடம் தர அவளோ வேண்டாம் என தலையசைத்தாள். இவன் அவள் கையில் கிட்டத்தட்ட திணிக்க முயல புடவை சற்றே மேலாக அங்கு கையில் தீக்காயத்தை கண்டவன் திகைத்து அவளை பார்க்க முகம் தெரியா அவளோ சட்டென கையை இழுத்து மூடிக்கொண்டாள். அப்போது பார்த்து விழித்துக்கொண்டது அந்த பெரிய உருவம்.

பெரிய சோம்பலுடன் எழுந்தவள் அந்த சிறிய பெண்ணை முறைத்து விட்டு பிடிங்கிக்கொண்டாள் கப்பை. "அடடா தம்பி ரொம்ப நன்றி.." என்று ஒரே உறிஞ்சலில் அவள் உறிஞ்சிட.. விட்டால் கப்பையும் சேர்த்து உறிஞ்சிடும் போல நீர்யானை என மனதுள் திட்டிக்கொண்டே அந்த சிறு பெண்ணை அவன் பார்த்தான். அவளோ தலை குனிந்து அமர்ந்திருந்தாள் இப்போதும். ஏனோ அவனுக்கும் குடிக்க தோன்றாமல் போக டீ கப்பை எடுத்துக்கொண்டு வாசலிற்கு வந்தான். வந்தவனுக்கு அவள் குனிந்த தலையும் அந்த காயமுமே நினைவில் வர ஒரு முடிவு எடுத்தவனாய் அடுத்த ஸ்டேஷனிற்கு எவ்வளவு நேரம் என கேட்டு தெரிந்து கொண்டான்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now