22. காதலையும் கடந்த உறவு

68 6 4
                                    

பூங்கொத்துடன் அங்கே சென்ற திரவியம் அவளை அங்கே காணாமல் குழப்பமானான். அவள் எங்கே இருக்கிறாள் என்று புரியாமல் அலுவலகம் முழுவதும் தேடினான். பின், அவள் எண்ணிற்கு அழைக்க அது ஏற்படாமலேயே இருந்தது. அங்கேயே‌ நள்ளிரவு காத்திருந்தவன் பின் ஏமாற்றத்துடன் அந்த ஏற்பாடுகளை எல்லாம் நிறுத்த சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றான். செல்லும் வழி முழுக்க அவன் மனம் அதைப்பற்றியே சிந்தித்து கொண்டிருந்தது. ஒருவேளை தான் அவளை பதில் கூற விடாமல் நாட்கள் கடத்தியதால் கோபித்துக் கொண்டிருப்பாளோ என்று நினைத்து குழம்பியது. என்னென்னவோ அவன் திட்டம் போட்டிருக்க அது எல்லாம் இப்படி முடிந்ததில் கோபத்தோடு வண்டியை ஓட்டினான். வீட்டிற்கு சென்றதும் அவனை எதிர்நோக்கி காத்திருந்த அன்னையிடம் கூட எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று கோபத்தை கதவை அழுந்த சாத்துவதன் மூலம் வெளிப்படுத்தினான்.

வதனாவோ முகத்தை தன் கைக் குட்டையால் அழுந்த துடைத்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அவள் முகத்தில் இருந்த வேறுபாட்டை உணர்ந்து கொண்ட பரமேஸ்வரி என்னவென்று பேசுவதற்குள் தன் அறைக்குள் சென்றவன் குளியலறைக்குள் சென்று தலைக்கு குளித்தாள். அந்த தண்ணீரோடு தண்ணீராக அவள் கண்ணீரும் கலந்தது. பின் உடை மாற்றி வந்தவள் தலையை கூட துவட்டாமல் அப்படியே தன் கட்டிலில் அமர்ந்து கொண்டு தன் அன்னை மற்றும் தந்தையின் படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவனது வார்த்தைகளே அவள் காதுகளில் கேட்டது. தன் பெற்றோர் இறந்ததில் இருந்தே தன்னைப் பற்றி இளக்காரமாக பலரும் பேசும் போது அவளுக்கு மிகுந்த கோபம் வரும். அதிலும் கடனை அடைக்க எளிய வழி என்ன சிலர் அபத்தமாக அவளிடம் தனித்து வந்து கூறிய போது அவளுக்கு கொலை கூட செய்து விடலாமா என்றளவு தோன்றி உள்ளது. ஆனால், தன் நேர்மையான உழைப்பின் மூலம் வரும் பணத்தால் அவர்களின் கடனை அடைத்து தன் செயலால் அவர்களை காரி உமிழ வேண்டும் என்றே மனதில் வைராக்கியமாக இருந்தாள். அப்போது கூட அவள் கலங்கியது இல்லை. காரணம் அவள் மீது அவள் கொண்ட தன்னம்பிக்கை. அவர்கள் கூறுவதால் எந்த விதத்திலும் தான் இழிவாகி விட போவதில்லை என்பதை அவள் ஆழமாக நம்பினாள். முள் மீது சேலை என்ற எடுத்துக்காட்டை அவள் சட்டை செய்தது இல்லை.

காதலையும் கடந்த உறவுWhere stories live. Discover now