5. காதலையும் கடந்த உறவு

98 6 2
                                    

அதைத் தொடர்ந்து வந்த வாரங்களில் திரவியமும் வதனாவும் தத்தமது வேலையில் கண்ணாக இருந்தனர். தன் திறனை வெளிக்காட்டிக் கொள்வதற்காக கிடைத்த முதல் ப்ராஜெக்ட் என்பதால் வதனா தன் வேலையை அட்டவணை போட்டு ஒவ்வொன்றையும் முறையாக கொண்டு செல்வதிலேயே முழு கவனம் செலுத்தினாள். அலுவலகத்தில் இருந்தே வண்டியும் வந்து விடுவதால் ராகவை வர வேண்டாம் என்று கூறி இருந்தாள்.

அவளுடன் தினமும் பேசி பழகிய ராகவிற்கு இந்த சில தினங்கள் அவளுடன் பேசாமல் இருப்பது கடினமாக இருந்தது. அவளைத் தேடி வாரக் கடைசியில் வீட்டிற்கு சென்றாலும் அப்போதும் கணினியோடு அவள் இருந்ததால் எரிச்சலானவன் அவளாக பேசும் வரை தானும் பேசக் கூடாது என்று உறுதி மேற்கொண்டான்.

இருப்பினும் அவள் வீட்டுக்கு அடிக்கடி சென்றான். காரணம் அவளுடன் பேச முயற்சிப்பதற்காக அல்ல பேருந்தில் பயணிக்க தினமும் வரும் அந்த பெண்ணை தூரமாக இருந்து ரசிப்பதற்காக. என்னதான் வேலையை இழுத்து போட்டுக் கொண்டு செய்தாலும் ஒரு கட்டத்தில் எப்போதும் எதையாவது ஏடாகூடமாக செய்து தன்னிடம் திட்டு வாங்கும் ராகவின் மௌனம் அவளை தொல்லை செய்யத் துவங்கியது. அதை விட மேலாக அவள் பேச வரும்போதெல்லாம் வேண்டுமென்றே முக்கியமான அழைப்பு போல அவன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தது அவளை எரிச்சலூட்டியது.

அவன் யாருடன் பேசுவான் என்று அவளுக்கும் தெரியும். அனிருத், அவனது இரண்டாவது நெருக்கமான நண்பன். எப்போதெல்லாம் அவளிடம் சண்டையிடுகிறானோ அப்போதெல்லாம் அவனிடமே சென்று அவளைத் தீட்டித் தீர்ப்பான். அவள் அனிருத்துடன் இயல்பாக பழகினாலும் ராகவ் அளவு அவன் அவளுக்கு நெருக்கமான நண்பன் இல்லை. அனிருத்திற்கு இவர்கள் இருவரின் நட்பு பற்றி தெரிந்ததால் அவன் அவர்களுக்கு எப்போதும் சுமூகமாக செல்ல வழிவகுப்பான்.

தற்போதும் அவ்வாறே அவனிடம் அனிருத் கூறிக்கொண்டிருக்க இரண்டாவது லைனில் வதனா அழைத்தாள். அவனது அழைப்பை இணைப்பில் வைத்து வதனாவின் அழைப்பை ஏற்றவன் என்னவென்று கேட்கும் முன்னே, "என்ன நினைச்சிட்டு இருக்கான் அவன்? ஏன் என்கூட பேசமாட்டானாமா? ஏதோ நான் கொஞ்சம் வேலையா இருந்துட்டேன். அதுக்கு இவ்ளோ சீன் போட்றான்?" என்று ராகவை திட்டினாள்.

காதலையும் கடந்த உறவுWhere stories live. Discover now