4. காதலையும் கடந்த உறவு

99 7 2
                                    

அந்த உயர்தர உணவகத்தின் முன் வண்டியை நிறுத்தியவன் அவள் இறங்கியதும் வண்டியை நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு அவளோடு உள்ளே நுழைந்தான். அங்குள்ள வண்ண வண்ண அலங்காரங்களும் அங்கிருந்த பணியாளர்கள் உபசரித்த விதமும் வதனாவிற்கு பிரமிப்பு ஊட்டியது. இது ராகவிற்கு பழகியதென்பதால் அவன் இயல்பாகவே இருந்தான். வதனாவின் மனதில் மட்டும் இதுபோல ஒரு உணவகத்திற்கு தன் பாட்டியையும் அழைத்து வந்து உண்ண வைக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. அவர் கோவில் தவிர வேறெங்கும் செல்வதில்லை. அவளுக்கு இருந்த பொருளாதார சோதனைகளை அவர் பெரிதும் அறியாவிட்டாலும் அவளுக்கு பொருளாதார பின்னடைவு இருந்ததை அவர் அறிந்தே இருந்தார்.

அதனால் வதனாவின் பெற்றோரின் இறப்புக்கு முன் குடும்ப விழாக்களுக்கு செல்வது போல அவர்கள் இறப்பிற்குப் பின் அவர் எங்கும் செல்வதில்லை. கோவிலுக்கு மட்டுமே எப்போதும் செல்வார். வதனா செலவுக்கு கொடுக்கும் பணத்தை சேகரித்து அவளுக்கு புடவை நகை என்று ஏதேனும் வாங்கிக்கொடுப்பார். எனவே, இந்த உணவகத்தின் பிரம்மாண்டத்தை கண்டதும் அவரின் நினைவு தான் வதனாவிற்கு முதலில் தோன்றியது. செல்லும் போது அவருக்கு எதேனும் வாங்க வேண்டும் என்ற முடிவோடு திரவியத்தை தேடினாள்.

அவனது எண்ணைப் பெற்றிருந்தாலும் அதற்கு அழைப்பு விடுக்க அவளுக்கு மனம் வரவில்லை. எனவே, அவனை பார்வையால் தேடினாள். அவளுக்காக காத்திருக்கும் நேரத்தில் கையிலிருக்கும் வர்த்தக வார இதழ் ஒன்றை புரட்டியவன் புடவையில் புதுமையும் பக்குவமும் கலந்து நேர்த்தியாக வந்தவளைக் கண்டு கண்களை அவள்மீது பதித்து சிலையானான். மற்ற பெண்களை விடுத்து வதனாவிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு விசையை உணர்ந்தான். பின்னர், தன்னிடம் பணிபுரியப் போகும் பெண் என்பதால் அவளைத் தவறாக எண்ணுவது உத்தமம் அல்ல என்று பார்வையை அருகில் இருப்பவனிடத்தில் செலுத்தினான்.

'ஓ இவன் தான் என்னோட க்ளோஸ் ப்ரண்டா? அதையும் என்னனு கேட்டுட்டுவோம்' என்று அவனை எடைபோட்டான். உடையை வைத்தும் அவன் நடந்து வரும் விதத்தை வைத்தும் பார்க்கும் போது இதுபோன்ற இடங்களுக்கு வருவது அவனுக்கு வாடிக்கை தான் என்பதை திரவியத்தால் கண்டுகொள்ள முடிந்தது. ஆனால், அதுவே வதனாவின் உடலில் தென்பட்ட ஒரு மெல்லிய படபடப்பு அவளுக்கு இது முதல் முறை என்பதைக் காட்டியது. திரவியம் கை உயர்த்த அவனைக் கண்டுகொண்ட வதனா ராகவையும் அழைத்துக் கொண்டு வந்தாள்.

காதலையும் கடந்த உறவுWhere stories live. Discover now