தனது கோட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான் அர்ஜுன்.

கண்ணிமைக்காமல் அப்படியே நின்றாள் இந்து. அர்ஜுன் மனதில் இப்படி எல்லாம் கூட நினைப்பான் என்று அவள் நினைத்திருக்கவில்லை. அவன் இன்னும் சங்கர் மீது கோபமாக இருப்பதாக அவள் எண்ணிக் கொண்டிருந்தாள்.

.....

கிரியும், ஹீனாவும், செய்ய வேண்டிய சட்ட சம்பிரதாயங்களை செய்துவிட்டு அர்ஜுனனுக்காக சிறை வாசலில் காத்திருந்தார்கள். அர்ஜுன் வந்து சேர்ந்தவுடன் உள்ளே சென்றார்கள். ஒன்றரை வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட மிகவும் மெலிந்து காணப்பட்டார் சங்கர். ஆனால், அவர் முகம் வெகு தெளிவாக இருந்தது. அவர் தன் மனைவி மகனுடன், சந்தோஷமாய் வாழ்ந்திருந்த பொழுது கற்கத் தவறிய விஷயங்களை, வாழ்க்கை அவருக்கு வெகுவாய் சிறைச்சாலையில் கற்றுக் கொடுத்துவிட்டு இருந்தது. தன் வாழ்க்கையில் என்னவெல்லாம் அவர் இழந்தார் என்பதை நன்றாய் உணர்ந்தார் சங்கர்.

அவர்கள் மூவரையும் பார்த்தவுடன் மெல்லிய புன்னகை அவர் முகத்தை ஆட்கொண்டது. அவர்களிடம் அவர் கேட்ட முதல் கேள்வி,

"இந்து எப்படி இருக்கா?" என்பது தான்

"நல்லா இருக்கா பா. உங்களைப் பார்க்க, எங்க கூட அவளும் வரேன்னு சொன்னா. நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்"

"பரவாயில்லப்பா... அவளை பார்த்துக்கோ"

சரி என்று தலை அசைத்தான் அர்ஜுன்.

"உங்களுடைய ட்ரிப் எப்படி இருந்தது?" என்றார் சங்கர்.

"பிரமாதமாக இருந்தது பா" என்றாள் ஹீனா.

அர்ஜுன் தன் கண்களை சுழற்ற, களுக்கு என்று சிரித்தான் கிரி. சென்ற முறை சங்கரை வந்து பார்த்து விட்டுச் சென்ற பின், அவர்கள் மிக நீண்ட சுற்றுலாவை முடித்துவிட்டு வந்திருந்தார்கள். அதை, இந்து வேண்டும் என்று கேட்டதால் அர்ஜுனால் மறுக்கவே முடியவில்லை. அது முழுக்க முழுக்க கோவில்கள் மட்டும் அடங்கிய சுற்றுலா. இந்து, கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் தானும் அவளுடன்  வருவதாக அர்ஜுன் ஒப்புக் கொண்டு இருந்தான் அல்லவா? அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டு விட்டாள் இந்து. ஒரு வாரம் முழுக்க சக்தி பீடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு அவள் வேண்டுகோளை வைத்தாள். தான் மட்டும் தனியே சென்று மாட்டிக்கொள்ள விரும்பாமல், தனது உயிர் நண்பனான கிரியையும் உள்ளே இழுத்து விட நினைத்தான் அர்ஜுன். அதனால், இந்துவிடம் ஹீனாவையும் அழைக்குமாறு கூற, அதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டு விட்டாள் ஹீனா. அவர்களுடன் செல்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது கிரிக்கு.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now