குணசேகரனின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமல், சங்கர் மேடையை நோக்கி நடந்தார்... தன் மகனை நோக்கி... இந்த முறை, தன்னிடம் நெருங்காமல் அவரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அர்ஜுனுக்கு தோன்றவில்லை. அர்ஜுனை பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இந்து. அவன் முகம் கல்லாய் போயிருந்தது. அவனுடைய கண்களோ, அவனுடைய தந்தையின் மீது இருந்தது. மேடையின் மீது ஏறி, அர்ஜுனை கைகூப்பி வணங்கினார் சங்கர்.

"என்னை மன்னிச்சிடு அஜ்ஜு... ( அர்ஜுன் சிறுவனாக இருந்த போது, அவரும் சீதாவும் அவனை அப்படித் தான் கூப்பிடுவார்கள் ) என்னால தான் நீ உங்க அம்மாவை பிரிஞ்சி, யாரும் இல்லாம தனியா கஷ்டப்பட்ட... உன் வாழ்க்கையில மறுபடியும் அப்படி நடக்க நான் விடமாட்டேன். நீ சந்தோஷமா இருக்கனும்... உன்னை மாதிரி நல்லவங்கயெல்லாம் சந்தோஷமா தான் இருக்கணும்... என்னால தான் உன்னுடைய வாழ்க்கை கெட்டுப் போச்சு. அதை சரி செய்ய வேண்டிய கடமையும் என்னுடையது தான். அதை நான் செஞ்சுட்டேன்னு நினைக்கிறேன்."

அவர் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது. சீதாவின் மரணத்திற்குப் பிறகு, அன்று தான் அவரை தன்னிடம் பேச அனுமதிக்கிறான் அர்ஜுன். அர்ஜுனை கட்டிக்கொண்டு கதறி அழுதார் சங்கர். வெகுநேரம் அப்படியே நிற்க முடியவில்லை அர்ஜுனால். அன்று அவனுடைய கண்களில், சங்கர், ஒரு பாதுகாவலனாய் தெரிந்தார். அவனுடைய உயிரினும் மேலான இந்துவை அவர் பாதுகாத்திருக்கிறார், மாஷா என்ற அத்தியாயத்தை, அவனுடைய வாழ்க்கை புத்தகத்திலிருந்து கிழித்தெரிந்து...

"என்னை மன்னிச்சிடு அஜ்ஜு... தயவு செய்து என்னை மன்னிச்சிடு"

ஹீனாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி கொண்டே இருந்தது. அவளுடைய அம்மாவின் மோசமான முடிவிற்காக அல்ல... சங்கருக்காக. அவருக்கு குற்ற உணர்ச்சி இருக்கிறது என்பது அவளுக்கு தெரியும். ஆனால், அவர் குற்ற உணர்ச்சியில் தினம் தினம் செத்துக் கொண்டு இருந்திருக்கிறார்... இதோ, அதற்கான பலன்... அவர் மீது அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை. மாஷாவை வாழ விட்டால், அவர் யாரையுமே வாழ விடமாட்டார் என்பது அவளுக்கு தெரியும்.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now