"அர்ஜுன் சாரோட ரூம் எங்க இருக்கு?" என்றாள் மரியாதையுடன்.

அவளை ஏற இறங்க பார்த்தாள் அந்த பெண்.

"ரூமா...? அது ரூம் இல்ல... கேபின்..." என்று எகத்தாளமாய் கூறினாள், இந்துவின் எளிமை தன்மையை பார்த்து.

"சரி, அர்ஜுன் சாரோட கேபின் எங்க இருக்கு?"

"நீங்க யாரு? எதுக்காக அவரை பார்க்கணும்?"

"நான் அவருடைய வைஃப்... "

அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. அவளுடைய ஆள்காட்டி விரல், முதல் மாடியில் இருந்த, கண்ணாடி சுவர்களால் ஆன, அர்ஜுனுடைய அறையை நோக்கி அனிச்சையாய் உயர்ந்தது. அங்கு செல்ல இந்து எத்தனித்த போது அவளை அந்தப் பெண் தடுத்தாள்.

" சார், வீடியோ கான்ஃபரன்ஸ்ல இருக்காரு"

"வீடியோ கான்ஃபரன்ஸா?"

" ஆமாம் "

கீழ்தளத்தில் இருந்த ஒரு அறையை சுட்டிக்காட்டி,

"அங்க தான் இருக்காரு. கொஞ்சம் லேட் ஆகும். நீங்க அவர் கேபின்ல காத்திருங்க" என்றாள்.

"அவர் வர்ற வரைக்கும் நான் இங்க உட்காரலாமா?"

"நீங்க சாரோட கேபினுக்கு போகலாமே..."

"இல்லை, பரவாயில்லை... நான் இங்கேயே காத்திருக்கேன்"

அங்கிருந்த ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டாள் இந்து. அர்ஜுனுடைய அனுமதியின்றி அவனுடைய கேபினுக்கு செல்லும் தைரியம் அவளுக்கு இருக்கவில்லை.

அரை மணி நேரம் கழித்து, சில பேர் பின்தொடர, அந்த அறையிலிருந்து வெளியே வந்தான் அர்ஜுன். எதிர்பாராத அந்த ஒரு நபரை... இந்துவை அங்கு பார்த்த பொழுது,  தரையில் ஒட்டிக் கொண்ட அவனுடைய கால்கள், சந்தோஷத்தில் தரையிலிருந்து மேலே எழுவது போல் தோன்றியது அவனுக்கு. அவன் பறப்பதைப் போல் உணர்ந்தான். கிரியின் முகம் பளிச்சிட்டது.

அவளைப் பார்க்காதது போல், தன் கையில் இருந்த கோப்பை பிரித்து பார்த்துக் கொண்டு நடந்தான் அர்ஜுன். அவனைப் பார்த்து எழுந்து நின்றாள் இந்து. வரவேற்பறையை கடந்து, தன்னுடைய கேபினை நோக்கி நடந்தான் அர்ஜுன். அவன் அவளை பார்க்கததால், இந்துவின் முகம் தொங்கிப் போனது. மறுபடியும் அங்கேயே அமர்ந்து கொண்டாள். அவனை பார்க்காமல் போவதில்லை என்ற முடிவில் இருந்தாள் அவள்.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now