இன்னார்க்கு இன்னாரென்று...!(...

By NiranjanaNepol

64.2K 3.3K 653

வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில... More

1 மாமல்லனும் பரஞ்சோதியும்
2 யாரவள்?
3 தெய்வீக அழகு
4 இருவரும் ஒன்று தான்
5 நாம் சந்தித்து விட்டோம்
6 இனம் புரியாத ஒன்று...
7 பிடித்திருக்கிறது
8 விரும்புகிறேன்
9 மனம் உடைந்த மாமல்லன்
10 நீ தான் எனக்கு எல்லாம்
11 புது இடம்
12 எதிர்பாராத திருப்பம்
13 உன்னத உணர்வு
14 வீட்டு சாப்பாடு
15 கசப்பான கடந்த காலம்
16 இதயத்தின் குரல்
17 வெறும் காகிதம் தானே?
18 நிச்சயதார்த்தம்?
19 அவள் வருவாள்
20 வரவில்லை...
21 'வீடு', 'இல்லம்' ஆனது
22 கிணற்று தண்ணீர்...
23 வேலைக்காரி
24 பாட்டிக்கு எப்படி தெரியும்?
25 எதிர்பாராத சுவாரஸ்யம்
27 அதிஷ்டம் அற்றவளா?
28 மாறுதல்...
29 அக்கறை
30 நீண்ட பயணம்
31 என்ன செய்து விட்டாள்?
32 நண்பன் யார்?
33 மனைவியாய்...
33 என்ன அது?
34 வெப்பக் கடத்தல்
35 சிறப்பான போர்வை
36 முன்னா...
37 உங்கள் திட்டமா?
39 மீண்டும் மதுரைக்கே...
40 உளவாளி
39 காத்திருந்த அதிர்ச்சி
40 வரன்
41ஷீலாவின் திட்டம்
42 ஷீலாவா...?
43 எங்கே இருந்தாய்?
44 காதம்பரியின் மகன்
45 சந்திப்பு
46 பிறந்தநாள்
47 ஆபத்தின் விளிம்பில்
48 நினைவுகள்
49 திருமதி மாமல்லன்
50 புதிய வாழ்க்கை
51 இறுதி பகுதி

26 உனக்கு என்ன ஆனது?

952 61 11
By NiranjanaNepol

26 உனக்கு என்ன ஆனது?

ஒரு கான்ஃபரன்ஸை முடித்துக் கொண்டு வீடு திரும்பினான் மாமல்லன். வீட்டிற்கு வந்தவுடன், அவனது கண்கள், அவன் மனதிற்கு பிடித்த அந்த நபரை தேடி, வழக்கம் போல் துழாவ தொடங்கின. அவள் ஏன் வரவேற்பறையில் இல்லை? அவளால் நான்கு சுவர்களுக்குள் அடைந்து, அமர முடியாதே...! இங்கும் அங்கும் அலைந்து திரியாவிட்டால், அவளது உலகம் சுழற்சியை நிறுத்தி விடுமே...! என்று யோசித்தபடி, தன் அறைக்கு  சென்றான் மாமல்லன். விரைவாய் முகம் கை கால் கழுவிக்கொண்டு மீண்டும் வெளியே வந்தான். அப்பொழுதும் இளந்தென்றலை அங்கு காணவில்லை.

சாப்பிடுவதற்காக உணவு மேஜைக்கு வந்து அமர்ந்தான். அந்த உணவு தந்த வாசம் கூறியது, அது இளந்தென்றலின் கை பக்குவம் அல்ல என்று. அவள் இன்று சமைக்கவில்லையா? ஏன்?

"தென்றல் எங்க?" என்றான் இசக்கியிடம்.

"அவங்க ரூம்ல இருக்காங்க. அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல"

அதைக் கேட்டு அதிர்ந்த மாமல்லன்,

"என்னது? உடம்பு சரியில்லையா? எதுக்காக என்கிட்ட இதை நீங்க முன்னாடியே சொல்லல? அவ ஏதாவது சாப்பிட்டாளா, இல்லையா?"

"இல்ல தம்பி... எதுவும் வேண்டாம்ன்னு   சொல்லிட்டாங்க. ஜூஸ் மட்டும் தான் குடிச்சாங்க"

"எதுக்காக நீங்க எனக்கு ஃபோன் பண்ணி சொல்லல? என்ன ஆச்சு அவளுக்குன்னு இப்பயாவது சொல்றீங்களா?"

"வயித்து வலின்னு சொன்னாங்க"

நாலு கால் பாய்ச்சலில், இளந்தென்றலின் அறையை நோக்கி ஓடினான் மாமல்லன். அவளது அறையின் கதவு, அரைவாசி திறந்த நிலையில் விடப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த மாமல்லனின் கால்கள், அவளை பார்த்தவுடன் நகர மறுத்தன. தன் வயிற்றை இறுக்கி பிடித்தபடி, இறாலை போல் சுருண்டு படுத்திருந்தாள் இளந்தென்றல். அவளது பலவீனமான நிலை, மாமல்லனை உலுக்கிவிட்டது. அவளை நோக்கி விரைந்த அவன், அவளது வெளுத்த முகத்தையும், அழுது சிவந்த கண்களையும், வறண்ட உதடுகளையும் பார்த்து நிலைகுலைந்து போனான். ஒரு காலை கட்டிலில் முழங்கால் இட்டு ஊன்றி, அவளை தூக்கி தன் மீது சாய்த்து கொண்டு,

"தென்றல், உனக்கு என்ன ஆச்சு மா? ஏன் இப்படி இருக்க?" என்றான் பொறுமை இழந்து.

"நான் நல்லா தான் இருக்கேன்" என்றாள் பலவீனமான குரலில்.

அதைக் கேட்டு பல்லை கடித்தான் மாமல்லன்.

"நீ எப்படி இருக்கேன்னு பாரு... நல்லா இருக்கேன்னு வேற சொல்றியா நீ...? உன்னை இப்படி பார்க்க எனக்கு பயமாயிருக்கு, தென்றல்..."

"இதெல்லாம் காமனா நடக்குறது தான்... ப்ளீஸ், என்னை தனியா இருக்க விடுங்க" என்ற அவளது குரல் மெல்லியதாய் ஒலித்தது.

"காமனா? அப்படின்னா ஏன் இதுக்கு நீ ட்ரீட்மென்ட் எடுத்துக்கல? எதுக்காக இந்த வலியில இப்படி கஷ்டப்பட்டுகிட்டு இருக்க?"

"ப்ளீஸ், என்னை தூங்க விடுங்க..."

"விடுறேன்... ஆனா அதுக்கு முன்னாடி, நீ என் கூட ஹாஸ்பிடல் வர..."

"தேவையில்ல"

"இங்க பாரு... தேவையில்லாம, என் ஆத்திரத்தை கிளப்பாதே... நான் ஏற்கனவே உன்னை இப்படி பார்த்து செம கடுப்புல இருக்கேன்..." என்றான் கோபமாய்.

அவள் இருக்கும் நிலையில், அவனுடன் விவாதம் செய்து கொண்டிருக்கும் திராணி அவளுக்கு இருக்க வில்லை. எழுந்து நிற்க முயன்றாள் இளந்தென்றல். ஆனால், அவளால் நிற்கக்கூட முடியவில்லை... வாடிய கொடி போல் துவண்டு விழுந்தாள்.

அவளுக்கு என்ன தான் நேர்ந்து விட்டது என்று புரியாத மாமல்லன், பரிதவித்து போனான். தங்களுக்கு இடையில் இருந்த அனைத்து வித்தியாசங்களையும் மூட்டை கட்டி ஓரமாய் வைத்து விட்டு, அவளை தன் கையில் தூக்கிக் கொண்டு நடந்தான் மாமல்லன். திகைத்துப் போனாள் இளந்தென்றல். வேற்று ஆணின் கையில் இருப்பதைப் போன்ற சங்கடம் வேறு எதுவும் இல்லை. இதற்கு முன்பு கூட, அவன் அவளை ஒருமுறை தூக்கிச்சென்றான் தான். ஆனால் அப்போது, அவள் மயக்க நிலையில் இருந்தாள். ஆனால் இப்போது, அவனது முகபாவத்தை அவளால் நன்றாக பார்க்க முடிகிறது.

ஆனால், மாமல்லனின் நிலையோ, முற்றிலும் வேறாய் இருந்தது. அவனது கவனம் வேறு எதிலும் செல்லவில்லை... வேறு எதிலும் கவனத்தை செலுத்தும் நிலையில் அவன் இல்லை. இப்போதைக்கு, அவனுக்கு தேவை எல்லாம், அவளை அந்த கொடுமைக்கார வலியிலிருந்து வெளியே கொண்டு வருவது மட்டும் தான்.

அழுது சிவந்த அழகிய இரு கண்கள், அவன் மீது நிலை குத்தி நின்றதை கூட அவன் கவனிக்கவில்லை. அந்த கண்கள், அவன் தன் மீது காட்டிய அதீத அக்கறையை வியந்து பார்த்துக் கொண்டிருந்தன. அவன் ஒரு பைத்தியக்காரன் என்று அவளுக்கு நன்றாய் தெரியும். ஆனால், இந்த அளவிற்கு பெரிய பைத்தியக்காரனாய் இருப்பான்  என்று அவள் அறிந்திருக்கவில்லை. அவள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வலி, அவளுக்கு ஒன்றும் புதிதல்ல. வழக்கமாய் வந்து போவது தான்...! ஆனால், இதுவரை யாருமே மாமல்லனை போல் அவளுக்காக பதறி துடித்ததில்லை...! அவளது அம்மாவும் இல்லை,  இறந்துவிட்ட அவளது தந்தையும் இல்லை...! ஒருவேளை, அவனால் முடிந்தால், அவளது வலியை அவளிடமிருந்து அவன் பெற்றுக் கொள்வான் போல, பித்து பிடித்தவனை போல் அல்லவா அவன் நடந்து கொள்கிறான்...! அந்த வலியை மீறிய மெல்லிய புன்னகை, அவள் முகத்தில் படர்ந்தது.

அவளை காரில் அமர வைத்து மருத்துவமனைக்கு விரைந்தான். அவன், அவளை ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வான் என்று எதிர்பார்த்து இருந்தாள் இளந்தென்றல். ஆனால் அவர்கள், ஒரு சிறிய மருத்துவ விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அவள் தன் காலை தரையில் வைப்பதற்கு முன், மீண்டும் அவளை தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினான் மாமல்லன், அவன் தூக்கி சுமந்து கொண்டிருப்பது ஒரு பெண் அல்ல, வெறும் மலர்ச்செண்டு தான் என்பது போல.

*டாக்டர் சாரா* என்று பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த அறைக்கு அவளைக் கொண்டு வந்தான். அங்கிருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி, மாமல்லன் ஒரு பெண்ணை தன் கையில்  ஏந்திக் கொண்டு வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

"என்ன ஆச்சி மல்லா? யார் இந்த பொண்ணு?" என்றார்.

"நான் அதையெல்லாம் அப்புறமா சொல்றேன், ஆன்ட்டி. முதல்ல அவளை ட்ரீட் பண்ணுங்க" என்றான்.

உட்காரக்கூட முடியாமல் இருந்த இளந்தென்றலை பார்த்தார் டாக்டர். மருத்துவரை, *ஆன்ட்டி* என்று மாமல்லன் அழைத்ததிலிருந்தே, அவன் எதற்காக அவளை இங்கு அழைத்து வந்தான் என்று இளந்தென்றலுக்கு புரிந்தது. அந்த மருத்துவர், மாமல்லனுக்கு வேண்டப்பட்டவராய் இருக்க வேண்டும்.

"நீ வெளியில வெயிட் பண்ணு" என்றார் சாரா, மாமல்லனிடம்.

"நான் ஏன் வெளியே போகணும்? ஸ்கிரீனை போட்டுக்கிட்டு செக் பண்ணுங்க" என்றான்.

தன் கைகளை கட்டிக்கொண்டு,

"நீ அவளுக்கு புருஷனா?" என்றார் சாரா.

அதை கேட்ட மாமல்லன் திகைப்படைந்தான்.

"நீ இங்கிருந்து போனா தான் என்னால ட்ரீட்மெண்டை ஆரம்பிக்க முடியும்"

தன் வயிற்றைப் பிடித்தபடி வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்த இளந்தென்றலை, இயலாமையுடன் பார்த்துவிட்டு, வேறு வழி இல்லாமல் அங்கிருந்து சென்றான் மாமல்லன். விட்டால் அவள் வலியை இவன் வாங்கிக் கொண்டு விடுவான் போல் இருந்த அவனது முக பாவத்தை கவனிக்க தவறவில்லை அந்த மருத்துவர். அது அவரை ஆச்சரியப்படுத்தியது என்று தான் கூற வேண்டும்.

இளந்தென்றலிடம் சென்ற மருத்துவர், அவளை பரிசோதித்தபடியே, அவள் உடல்நிலை குறித்த சில கேள்விகளை கேட்டு தெரிந்து கொண்டார். அவளுக்கு ஊசி போட்டு, மாத்திரை எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்தார். மனைவியை பிரசவ அறைக்கு அனுப்பிவிட்டு, வெளியே தவித்துக் கொண்டு நிற்கும் கணவனைப் போல் இருந்த மாமல்லனைப் பார்த்து புன்னகைத்தார் மருத்துவர். அவரைப் பார்த்தவுடன், ஓடி வந்து அவர் கரத்தை பற்றிக் கொண்டான் மாமல்லன். 

"ஆன்ட்டி தென்றல் எப்படி இருக்கா? நல்லா இருக்கா இல்ல? அவளுக்கு வலி குறைஞ்சிடுச்சு தானே? அவளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே? அவளுக்கு திடீர்னு என்ன ஆச்சு?" என்றான்.

அவனது பதற்றத்தை உள்வாங்கியபடி நின்றிருந்த மருத்துவருக்கு, ஒன்றும் புரியவில்லை. தன் முன்னாள் நின்று பதறிக் கொண்டிருப்பது மாமல்லன் தானா என்ற சந்தேகம் ஏற்பட்டது அவருக்கு. இதற்கு முன்பு, அவன் எதற்காகவும் இப்படி பதறி துடித்து அவர் பார்த்ததில்லை.

"அவ நல்லா இருக்கா. இன்ஜெக்ஷன் பண்ணி இருக்கேன்"

"அவளுக்கு என்ன தான் பிரச்சனை?"

"நீ இவ்வளவு டென்ஷன் ஆக வேண்டிய அவசியம் இல்ல. இதெல்லாம் நார்மலா நடக்கிறது தான்"

அவர் சர்வ சாதாரணம்மாய் கூறியது, அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

"என்னது? நார்மலா நடக்கிறதா? நான் அவளை எப்படி பார்த்தேன் தெரியுமா? வலி தாங்க முடியாம, வயித்தை பிடிச்சுக்கிட்டு, சுருண்டு படுத்திருந்தா. நீங்க அதை நார்மல்னு சொல்றீங்களா?"

"இதெல்லாம் உனக்கு புரியாது, மல்லா"

"ஏன் புரியாது?"

"இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்"

சில நொடி திகைத்து நின்ற மாமல்லன்,

"பொம்பளைங்க சமாச்சாரம்னு சொல்லி, ஆம்பளைங்க கிட்ட இருந்து மறைச்சே வச்சிருந்தா, ஆம்பளைங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அப்படி செஞ்சா, இதெல்லாம் கடைசி வரைக்கும் பொம்பளைங்க சமாச்சாரமா மட்டுமே தான் இருக்கும். சொன்னா தானே எங்களாலயும் புரிஞ்சுக்க முடியும்?" என்ற நியாயமான கேள்வியை கேட்டான்.

"இது அவளோட *டேர்ன்ஸ்*" என்றார்.

"அப்படின்னா?" என்று முகம் சுருக்கினான் மாமல்லன். 

"மன்த்லி சைக்கிள்"

"என்னது? அப்படின்னா ஒவ்வொரு மாசமும் இந்த வலியில அவ கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காளா?" என்றான் அதிர்ச்சியாக.

"அதனால தான் இது நார்மல்னு சொன்னேன்"

"ஆனா, அம்மா இப்படி கஷ்டப்பட்டதை நான் பார்த்ததே இல்லையே" என்றான் அந்த அறியா பிள்ளை.

"அது ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும்... ஹார்மோன்ஸ்... ஜெனெடிக்... இப்படி பல விஷயங்களால வேறுபடும். சில பேர் உங்க அம்மாவை மாதிரி வரம் வாங்கி வராங்க... சில பேர் தென்றலை மாதிரி கஷ்டப்படுறாங்க"

"இதுல இருந்து அவ வெளியில வர்றதுக்கு எதுவும் ட்ரீட்மென்ட் கிடையாதா?"

"நிறைய இருக்கு... மெடிக்கல் ஃபீல்டு ரொம்ப முன்னேறிடுச்சு... உன்னை மாதிரி இல்ல" என்று கிண்டல் செய்த அவரைப் பார்த்து முறைத்த மாமல்லன்,

"நீங்க தான் சொன்னீங்களே, இது பொம்பளைங்க சமாச்சாரம்னு, அப்பறம் இந்த மாதிரி விஷயமெல்லாம் எனக்கு எப்படி தெரியும்?"

அவன் கூறுவது சரிதானே? அவனுக்கு இந்த விஷயம் எல்லாம் எப்படி தெரியும்? உடன் பிறந்த சகோதரிகளும் இல்லை, அம்மாவும் அவனுக்கு விவரம் தெரியும் வயதில் தவறிவிட்டார். இது தான் முதல் முறை, அவன் இப்படிப்பட்ட விஷயங்களில் எல்லாம் அனுபவம் பெறுவது.

இது பற்றி, அவன் அறிவியல் பாடங்களில் படிக்க வேண்டிய வயதில், அவன் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டு இருந்தான். அப்பொழுது தான் அவனது அம்மா இறந்திருந்தார். அதனால், அவனது மனம் வேறு எதிலும் செல்லவில்லை.

"நீ அவளை கூட்டிகிட்டு போகலாம்" என்றார் சாரா.

"ஃபாலோ பண்ண வேண்டிய இன்ஸ்டிரக்ஷன்ஸ் ஏதாவது இருக்கா?"

"வேலா வேலைக்கு கரெக்டா மருந்து சாப்பிட சொல்லு. அப்போ தான், அடுத்த மாசமும் நீ அவளை தூக்கிக்கிட்டு வர வேண்டிய அவசியம் இருக்காது" என்றார் சிரிப்பை அடக்கியபடி.

"ஒருவேளை, அடுத்த மாசமும் நான் அவளை தூக்கிக்கிட்டு வந்தா, அதுக்கு நான் தான் காரணம்னு என்னை நீங்க தப்பா நினைக்காதீங்க" என்றான் மாமல்லன்.

"வாவ்... மாமல்லன் எப்போதிலிருந்து கவுண்டர் எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சான்?"

"நான் அவளை கூட்டிக்கிட்டு போறேன்" என்றான் மாமல்லன் சிரித்தபடி.

இன்னும் சற்று நேரம் அங்கு நின்றால், தன்னிடமிருந்து அனைத்து விஷயத்தையும் வாங்கி விடுவார் சாரா என்று அவனுக்கு தெரியும்.

சரி என்று தலையசைத்தார் சாரா. இளந்தென்றலை பார்க்க உள்ளே சென்றான் மாமல்லன். அவனைப் பார்க்கவே சங்கடமாய் இருந்தது இளந்தென்றலுக்கு. இந்நேரம் அவன் அனைத்தையும் தெரிந்து கொண்டிருப்பான் என்பது தான்  அவளது சங்கடத்திற்கு காரணம்.

"நம்ம கிளம்பலாம்" அவள் எழுந்து நிற்க உதவும் எண்ணத்துடன் அவளை நெருங்கினான்.

அவன் தன்னை மீண்டும் தூக்கிக்கொள்ள வருகிறான் என்று எண்ணிக்கொண்டு,

"என்னால நடக்க முடியும்" என்றாள்.

அவள் எண்ணத்தை புரிந்து கொண்ட அவன், புன்னகையுடன் தலையசைத்தான். மெல்ல எழுந்து நின்றாள் இளந்தென்றல். தன் கரத்தைப் பற்றிக் கொள்ளுமாறு அவளை நோக்கி நீட்டினான். சற்றே தயங்கிய இளந்தென்றல், மெல்ல அவன் கரத்தைப் பற்றிக் கொண்டாள், அவன் மனதிற்கு சந்தோஷம் அளித்து.

தொடரும்...

Continue Reading

You'll Also Like

154K 6.4K 25
அவள் உள்ளங்கவரப் போகும் கள்வன் அவன்..
51.4K 2.9K 100
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால்...
49.3K 1.3K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r