"ஐயோம்மா. ஒவ்வொரு முறை வரும்போதும் சாப்பிட்டுத்தான் போகணும்னு எந்தக் கட்டாயமுமில்ல. நீங்க சும்மா கஷ்டப்பட வேணாம்" என்று கொஞ்சம் காரமாகவே சொல்லிவிட சுலைஹா

"எனக்கொரு கஷ்டமும் இல்ல. இடியாப்பம் அவிச்சு ரெண்டு கறி செய்றதொன்னும் பெரிய வேலையில்ல"

'வந்ததே அவனுக்கு பிடிக்கவில்லை. இதில் சாப்பிட்டு போக விரும்புவானா' என்றுதான் ஹிக்மா மறுத்தது.

அவளுக்கு இருந்து தாயாரின் கைச்சமையலை சாப்பிட்டுப் போக ஆசைதான். ஆனால் ரய்யான் விருப்பமின்றி அவளுக்காக வந்திருப்பதை நினைக்கையில் அவளாலும் இயல்பான சந்தோஷத்துடன் இருக்க முடியவில்லை.

"உங்க மருமகன் என்ன சொல்லுவாரோ தெரியாதும்மா. அவரும் காலைல கடைக்கு போகணும்" அதை மேலோட்டமாக தாயிடமும் சொன்னாள்.

சுலைஹா நேரே ரய்யானிடமே சென்றுவிட்டார். ஹிக்மா அவருக்கு பின்னே ஓடினாள்.

"மகன் இருந்து நைட் சாப்பிட்டுப் போங்களே. டக்குனு சமைச்சிடுவேன்"

"இல்ல மாமி. உங்களுக்கு எதுக்கு கஷ்டம். இன்னொரு நாள் வாரோமே" என்று ஹிக்மாவைப் போலல்லாமல் அவன் தன்மையாக மறுத்தான்.

ஹிக்மா எண்ணிய பதிலையே அவனும் முன்வைக்க 'வந்தது அவனுக்கு பிடிக்கவில்லை' என்ற அவளது கணிப்பு சரிதான் எனத் தீர்மானித்து மேலும் மனம் சோர்ந்தாள்.

"ஐயோ ஒரு கஷ்டமும் இல்லை. இடியாப்பம்தான் செய்யப்போறன். மாவையும் கிண்டி வெச்சிட்டன். லேட்டாகாது. எட்டு மணிக்கு சாப்பிட்டு போயிடலாம்" சுலைஹா விடவேயில்லை.

தாயாரிடம் திரும்பியவள்
"நான்தான் சொன்னேனேம்மா. அவர் விருப்பப்பட மாட்டார்னு. இன்னொரு நாள் வாறோம்மா" என்றிட அவனோ

"சரி மாமி. நீங்க இவ்வளவுதூரம் கேட்கும்போது எப்படி மறுக்கிறது. இருந்து சாப்பிட்டே போறோம். ஆனால் அதுக்காக நிறையசெய்து சிரமப்பட வேணாம்"

"சந்தோஷம் மகன். நீங்க பேசிட்டு இருங்க. அதுக்குள்ள சாப்பாடு ரெடி பண்ணிர்றன்" என்று அவர் மகிழ்ச்சியுடன் சமையல் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now