"அப்ப ரெண்டு பேரும் அடிச்சிட்டு சண்டை போடட்டும்னு பார்த்துட்டிருக்க சொல்றீங்களா?"

"இல்ல. இல்ல. அப்படி சொல்லலை. எந்த நேரமும் அவங்களை சத்தம் போடத் தேவையில்லைனு சொல்றன். கொஞ்சம் நேரம்விட்டா அவங்களே ஒத்துமை ஆகிடுவாங்க"

"ம்ம்ம்... ஹிம்னா பொம்பளப் பிள்ளை. இன்னொரு இடத்துக்கு போகப்போறவ. இப்பவே வாயாடியா இருக்கா. கண்டிக்காம விட்டா நாளைக்கு போற இடத்துல எங்களைத்தான் குறை சொல்வாங்க"

"அவ வாயெல்லாம் எங்களோடுதானே. வெளியாட்கள் யாராவது அவளைப் பத்தி சொல்லிருக்காங்களா? இல்லையே. எங்க பிள்ளைகள் ஒருநாளும் எங்களுக்கு கெட்டபெயர் வாங்கித்தர மாட்டாங்க. வீட்டோடு எங்ககூட இருக்கிறவரை இஷ்டம் போல இருந்திட்டுப் போகட்டுமே"

"நீங்க ஓவராத்தான் செல்லம் குடுக்குறீங்க. அவ காதுபட இப்படி சொல்லிறாதிங்க"

"அவகிட்ட சொல்ல முடியாதுன்னு தான் உங்கட்ட சொல்றன். ஹிக்மாவும் இந்த வீட்ல இருக்கும்போது இப்படித்தானே இருந்தா. ஆனா பழைய ஹிக்மாவ இனி தேடித்தான் எடுக்கனும். இன்னொரு வீட்டுக்கு போனதுமே சிறுபிள்ளை தனமெல்லாம் எல்லாம் போய் பொறுப்பானவங்களா மாறிடுறாங்க. நினைக்கிறப்ப பேசக்கூட முடியிறதில்லை"

ஹாலித்தின் பேச்சில் மூத்த மகளை பலநாள் காணாத வருத்தம் தெரிந்தது. மேலும் கேட்டு அவரை வருத்தப்பட வைக்க வேண்டாமென நினைத்து

"சரி வாங்க சாப்பிடலாம்" என்றார்.

"பிள்ளைகளையும் கூப்பிடுங்க. சாப்பிட்டு போய் படிக்கட்டும்"

சுலைஹா இருவரையும் சாப்பிட அழைக்க இருவரிடமும் பதிலில்லை.

'திட்டியதால் கோபித்துக்கொண்டு இருக்கிறார்களோ' என நினைத்தார்.

'ஹிம்னா வேண்டுமானால் அப்படி செய்யக்கூடும். ஆனால் ஹிஜாஸ் ஒருபோதும் அப்படி செய்யமாட்டானே'

எனவே நேரடியாக அறைக்குள்ளே போய்ப் பார்த்த பிறகுதான் தெரிந்தது இருவருமே தூங்கிப் போயிருப்பது.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now