"நீங்க சொல்றது சரிதான்மா. ஆனாலும் இந்த பொண்ணு பார்க்குறது பேசிவைக்கிறது இந்தமாறி டைம்ல அப்படி காரணம் சொல்லித்தானே காயப்படுத்துறாங்க. அதுமட்டுமா?! சிலபேர் அந்த காரணத்தை சுட்டிக்காட்டி காசு நகை வீடுவாசல் சொத்தை வச்சி பேரம்பேசுறாங்களே. நினைக்கவே கேவலமா இருக்குமா. என்னசாதி மனுசங்க" ஹிக்மா அருவருப்பாய் மொழிந்தாள்.

'தான் ஒன்றும் பெரிய அழகி இல்லைதான். ஆனால் அதற்காக தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ள யாராவது பேரம்பேசி வந்தால் நிச்சயமாக எனக்கு அப்படி பட்டவன் தேவையே இல்லை' என தீர்மானத்தவள் அதை அன்னையிடமும் வெளிப்படையாக சொல்லி விட்டாள்.

***

மறுநாள் காலை பத்து மணிக்கு இலங்கை மண்ணை முத்தமிட்டு ஓய்தது அந்த விமானம்.

விமானநிலையத்தில் சோதனைகள் அனைத்தும் தேவையற்ற அசௌகரியங்கள் இன்றி முடிந்துவிட வெளியில் வந்ததும் டாக்ஸி பிடித்து ஊரை நோக்கி பயணமானான்.

ரய்யானின் எண்ண அலைகள் மட்டும் அவன் தாயாரை சுற்றியே வந்தன.

அவன் பார்த்தவரையில் ஆயிஷா ஒருநாள் கூட காய்ச்சல் தலைவலி என்று படுத்துக் கொண்டது கிடையாது.

சிலசமயம் காலநிலை மாற்றம், பனிப்பொழிவு என்றால் தடிமல் பிடிக்கும். அதற்கும் அவர் மருத்துவரை நாடியதே இல்லை. ஆவி பிடித்துப் பார்ப்பார். அதற்கும் குணமாகவில்லை என்றால் சில கைமருந்துகளை செய்வார். அள்ளாஹ்வின் கிருபையால் இரண்டு மூன்று நாட்களில் குணமாகிவிடும்.

வீட்டில் பெண் பிள்ளைகள் இல்லாததால் அனைத்து வீட்டு வேலைகளையும் ஆயிஷாவுக்கு தனியாளாகவே செய்து பழக்கமாகி விட்டிருந்தது.

ஆசிரியை என்பதால் அதிகாலையில் எழுந்தது முதல் ஏழரை மணிக்கு பாடசாலைக்கு கிளம்பிச் செல்லும் வரையிலும் காலில் சக்கரம் கட்டியதுபோல அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்து முடித்து விடுவார்.

கணவன், பிள்ளைகள் என யாருக்கும் எந்தக் குறையும் வைத்ததில்லை.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now