❤ சிறுநகை 52

344 32 12
                                    

பாகேஸ்வரி நாகர்கோவில் வீட்டிற்கு வந்ததிலிருந்து தன்னுடைய மகனை ஒரு வேலை கூட பார்க்க விடவில்லை. ஒற்றை ஹாலுடன் இருந்த சிறிய வீட்டையே அப்படி அழகாக வைத்திருந்தவர், மகனுடைய மாளிகை போன்ற வீட்டையும் கூட்டி துடைத்து விளக்கேற்றி கோலமிட்டு என அந்த வீட்டில் பெண்ணுடைய இருப்பை அறிமுகம் செய்து வைத்தார்.

காலையில் எழுந்து பல்விளக்கியதும் அன்னையின் கையால் படுக்கையறையிலேயே கொண்டு வந்து கொடுக்கப்பட்ட திக்கான காஃபி கதிருக்கு அவ்வளவு உற்சாகம் தந்தது. இட்லிப் பொடியும், கல்தோசையும்,
கீரை மசியலும், வத்தக்குழம்பும், பருப்பு சாதமும், சுடச் சுட நெய்யும் போன்ற அன்னையின் கைப்பக்குவத்தில் தயாரான உணவுகள் அவனை தேவலோகத்திற்கே அழைத்துச் சென்றன.

அந்த வீட்டின் பரந்த பார்க்கிங்கில் நான்கு நாட்கள் சுற்றி சுற்றி வந்தவர் ஐந்தாம் நாள் தன் மகனிடம்,

"யய்யா..... இந்த வீட்லதா நெறய எடம் சும்மாக் கெடக்குதே? நீ என்னைய இங்க வந்ததுல இருந்து வியாபாரத்துக்காக வத்தலு, வடகம்னு எதையும் போடவும் உடமாட்டேங்குற...... அதேன் கடைக்குப் போயிட்டு வார நேரம் போவ நா இங்கணக்குள்ள வீட்டுக்கு தேவையான காய்கறி, பழம்னு கொஞ்சமா எதையாவது வெதச்சு உடட்டாய்யா?" என்று கேட்டவரிடம் புன்னகைத்தவன்,

"இதையெல்லாம் கேக்க வேற செய்யணுமாம்மா? இது உங்க வீடு..... உங்களுக்குப் பிடிச்சாப்ல இதுல என்ன வேணும்னாலும் பண்ணுங்க! நீங்க வாங்குற செடியோட ரெண்டு ரோஜாச் செடியையும் சேத்துக்குங்க!" என்று சொல்லி அன்னையின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டி விட்டுப் போய் விட்டான்.

சந்தனா தினமும் வந்து அவர்களை அவனுடைய துணிக்கடைக்கு அழைத்துச் சென்று இரண்டு மணி நேரங்கள் அவர்களுக்கு அந்த வாணிபத்தை எவ்வாறு லாபகரமாக நடத்த வேண்டும்; வாடிக்கையாளர்களை எவ்விதம் கவனிக்க வேண்டும் என்று நேரடி செய்கைகளாகவே கற்றுக் கொடுத்து விட்டு ரேஷ் ப்யூட்டி பார்லருக்கு கிளம்பிச் சென்றாள்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now