❤ சிறுநகை 1

3.6K 56 14
                                    

நள்ளிரவு ஆரம்பித்த கனமழை அன்று அதிகாலை ஆறு மணி வரையிலும் இளம் சாரலாக பெய்து கொண்டிருந்தது. இப்படிப்பட்ட தூறல் மழையெல்லாம் எங்கள் பக்தியை தடைசெய்யாது என்று நம்மிடம் சொல்லும் வகையில் சுசீந்தரம் தாணுமாலய பெருமாள் கோவிலுக்கு முன்னால் இருந்த கார்பார்க்கிங்கில் தன்னுடைய பலீனோ காரை நிறுத்தியிருந்தான் ரேஷ் என்று எல்லோராலும் அழைக்கப்படும் நம் கதையின் நாயகன் கதிரேசன்.

கடவுளைப் பார்க்க செல்லும் முன் தன் தாயிடம் பேசுவோம் என்று நினைத்தவன் அலைபேசியில் அவர்களை அழைத்தான்.

"யய்........யா! என்னய்யா காலங்காத்தால கூப்ட்ருக்க? வாடக்காத்துல நனைஞ்சு ஒங்காதுக்கு ஏதும் பிரச்சனையா சாமி?" என்று கேட்ட தன்னுடைய அன்னையிடம்,

"ம்ப்ச்! கூப்டுற நேரமெல்லாம் கை வலிக்குதா? காலு வலிக்குதா? காது வலிக்குதான்னு தான் கேப்பீங்களா நீங்க..... எப்டிம்மா இருக்கீங்க? உங்க நியாபகம் வந்துச்சு; அதாம்மா கூப்ட்டேன்!" என்று முதலில் அவர்களை கடிந்து கொண்டும், பின்பு அன்பை நிரப்பியும் பேசியவாறு.

"இல்லய்.....யா; கூதக்காலமுல்ல? அதான் ஒனக்கு பனி சேராதேயின்னு யோசிச்சு அப்டிக் கேட்டுப்புட்டேன்; நீயி நல்லாயிருக்கயின்னா ரொம்ப நல்லது..... அடுத்து ஊருக்கு எப்பய்யா வார? அக்கா, புள்ளைக ரெண்டும் நீ எப்ப வாரன்னு எங்கிட்ட கேட்டுக்கிட்டே இருக்குதுக!" என்று சொன்னவரின் குரலில் நானும் தான் உன்னை இங்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ற மறைமுக ஏக்கம் நன்றாகவே தெரிந்து.

"வர்றேன்ம்மா! இங்க கொஞ்சம் வேலைய முடிச்சுட்டு ரெண்டு மூணு நா இருக்குற மாதிரி வாரேன்.... வச்சிடவா?" என்று கேட்டவனிடம்,

"சரி தங்கம்! எப்பவும் மகராசனா இருக்கணும்!" என்று சொல்லி விட்டு அலைபேசியை வைத்தார் கதிரின் தாய்.

"எப்பவும் மகராசனா இருக்கணும்!" இதுதான் அவனுடைய அன்னை "போன வச்சிடாவாம்மா?" என்று அவன் கேட்கும் போதெல்லாம் கடைசியாக சொல்லும் வார்த்தை.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now