☘1☘

5.7K 163 190
                                    

"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்துதே..." என்று தெருமுனையில் உள்ள பெருமாள் கோவிலில் காலை ஐந்து மணிக்கே சுப்ரபாதத்தை போட்டு விட்டு விடியலுக்கு அறிகுறியாக அந்த இடத்தை சுற்றி குடியிருந்தோரை எழுப்ப முயன்றார் அக்கோவில் குருக்கள்.

"ஓ காட்!" என சற்று எரிச்சலோடு படுக்கையில் திரும்பி படுத்தாள் அஸ்வதி.

எவ்வளவு தான் தலையணையை வைத்து காதை அடைத்துக் கொண்டாலும், பாட்டின் ஒலி சற்று குறைந்ததே தவிர ஆழ்ந்து உறங்க முடியவில்லை.

புரண்டு புரண்டு பார்த்தவள் பின் சலிப்போடு எழுந்தமர்ந்து தலைமுடியை கோதி விட்டு இரண்டு கைகளையும் உயரே தூக்கி உடல் நெளித்து சோம்பல் முறித்தாள்.

மொபைலை எடுத்து நேரம் பார்க்க ஐந்து பத்து. கை மறைவில் கொட்டாவி ஒன்றை வெளியேற்றியவள் படுக்கையிலிருந்து இறங்கி ரெஃப்ரெஷ் செய்து விட்டு அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தாள்.

வீடே அமைதியாக இருந்தது, பூஜையறையில் லைட்டும், விளக்கும் ஒளி வீசிக் கொண்டிருந்தது.

'ஓகே... இது மார்கழி மாதம், இந்த அம்மா நான்கு மணிக்கே எழுந்து வாசலை பெருக்கி கோலம் போட்டு குளித்து கோவிலுக்கு கிளம்பியிப்பார்கள் போலிருக்கிறது. அப்பா வழக்கமான வழக்கமாக ஐந்து மணிக்கு வாக்கிங் கிளம்பியிருப்பார்!' என்றெண்ணியவளுக்கு பசி வயிற்றை கிள்ளியது.

அஸ்வதி! இருபத்திநான்கு வயது ஐடி யுவதி, டெக் மஹேந்திராவில் வேலை. மதியம் ஷிப்டுக்கு போய்விட்டு இரவு பதினோரு மணிக்கு மேல் வீடு திரும்புபவள் உறங்க செல்வதற்கு பன்னிரெண்டு மணி ஆகி விடும். காலை குறைந்தது ஏழு எட்டு மணிக்கு மேல் தான் எழுவாள்.

வருடத்தில் இந்த மார்கழி மாதம் பிறந்தால் மட்டும் அவளுக்கு தொல்லை. கோவிலில் விடியற்காலை பூஜை வேளையிலேயே பெருமாளின் கீர்த்தனைகள், பஜனைகள் என்று ஐந்து மணியிலிருந்து அலற ஆரம்பித்து விடும்.

பொதுவாக இவளும் கடவுளை விரும்பி வணங்குபவள் தான், என்ன ஒன்று மணிக்கணக்கில் அமர்ந்து ஸ்லோகங்கள் சொல்லி கொண்டிருக்க மாட்டாள். காலையில் குளித்து முடித்தவுடன் பூஜையறையில் ஒரு அட்டன்டென்ஸை போட்டு, தனக்கு பிடித்த இரண்டு ஸ்லோகங்களை கடகடவென்று ஒப்பித்து விட்டு வெளியே வந்து விடுவாள்.

அழகே அழகே... எதுவும் அழகே!حيث تعيش القصص. اكتشف الآن