அத்தியாயம் 41

7.6K 271 101
                                    

அடுத்து வந்த ஒருமாதமும் இவளுக்கு சோதனை காலமாகத்தான் இருந்தது. ஆணுக்கும் இருக்கும் அத்தனை ஆசா பாசங்களை வைத்துத்தான் பெண்களையும் கடவுள் படைத்திருக்கிறார். ஆனால் அத்தோடு சில கட்டுப்பாடு உணர்வையும் சேர்த்து வைத்து படைத்திருக்கிறார் போல. அதனால் பெண்கள் அந்த அளவுக்கு தங்கள் தேவையை வெளிப்படையாக காட்டுவது இல்லை. ஆனால் அவர்களுக்கு தெரியுமே அவர்கள் தேவை என்னவென்று.

நெருங்கி வந்தால் விலகவும், விலகி சென்றால் நெருங்கி வரவும் சொல்லும் மனம் மனிதனின் மனம். மனைவிக்கு கொடுத்த வாக்கின்படி சாய்வேதன் அவளிடம் வேறு எந்த உறவையும் தேடவில்லை. ஆதிக் எப்படி அவன் தாயிடம் சலுகை கொண்டாடினானோ அதைத்தான் சாய்வேதனும் செய்தான். யாரும் கேட்டால் இது என் மூத்த குழந்தை என்று தாராளமாக சாய்வேதனை இவள் கைகாட்டலாம்.

இந்த ஒருமாதமும் அவள் முன்புபோலத்தான் எங்கும் தனியே சென்றாள். ஆனால் இவனின் பெயர் அவளுடன் சென்றது. முக்கியமான பார்ட்டிக்கு செல்லும் போது குடும்பமாக சென்றார்கள். அதுவே இவளை அண்டி வந்த அத்தனை பிரச்சனைகளையும் பின்னுக்கு தள்ளியது. கணவன் வீர தீரனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவனின் பெயரே ஒரு பெண்ணை காக்கும் வேலியாக இருக்கும் . இந்த விசயத்தில் அனுமித்ரா திருப்தியாகிவிட்டாள். ஆனால் தங்கள் இருவருக்குள்ளும் இருந்த உறவுதான் அவளுக்கு கோபத்தை உண்டு பண்ணியது.

திருமணம் ஆன பெண்கள் அலங்காரம் செய்துகொள்வது அவர்களின் கணவனுக்காகத்தான் இருக்கும். கணவனின் மனதை மட்டும் அல்ல கண்ணையும் கவரும் விதத்தில் இருக்கவேண்டும் என்று அந்த கால பாட்டிகள் சொல்வார்கள். ஏனென்றால் எல்லா ஆண்களுக்கும் இல்லாவிட்டாலும் சில ஆண்களுக்கு அங்கே இங்கே என்று மனதை அலைபாய விடும் புத்தி உண்டு. அதனால்தான் இத்தனை ஷாப்பிங், இவ்வளவு பர்சஷிங்.

அனுமித்ரா கணவனுக்காக என்று விசேஷமாக எந்த அலங்காரமும் செய்யவில்லை. அதற்காக அவள் மோசமாகவும் காட்சி தரவில்லை. அவள் எந்த உடை உடுத்தினாலும், அலங்காரம் செய்து கொண்டதாலும் எல்லாவற்றுக்கும் உதட்டை தாண்டாத ஒரு புன்னகையை மட்டும் கொடுத்துவிட்டு போகும் கணவனை பார்க்க பார்க்க அவளுக்குள் சிறு கோபம் தலைதூக்கியது. அவள் மனம் சுனங்க தொடங்கியது. 'என்னை கண்டு கொள்ளவே மாட்டேங்கிறான், அவனுக்கு என்னை பிடிக்கல, அவனின் லவ் யூ எல்லாம் பெயர்க்குத்தான்' என்று அவள் புத்தி அவளுக்கு தூபம் போட இவளுக்கு கோபம் அதிகரித்துக்கொண்டே போனது. கணவன் மனைவி மேல் காட்டும் காதல் பார்வைதான் அவர்கள் உறவை இன்னும் ஆழமாக்கும் என்பது எழுதப்படாத விதி. அது இவர்கள் வாழ்க்கையில் மட்டும் மாறிவிடுமா என்ன?

கடிவாளம் அணியாத மேகம் Where stories live. Discover now