தென்றலே தழுவாயோ..?

By Nuha_Zulfikar

2.3K 232 780

#4 ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார்... More

•✒•
• 1 •
• 2 •
• 3 •
• 4 •
• 5 •
• 6 •
• 7 •
• 8 •
• 9 •
• 10 •
• 11 •
• 12 •
• 13 •
• 15 •
• 16 •
• 17 •
• 18 •
• 19 •

• 14 •

85 11 25
By Nuha_Zulfikar

               கன்று விரிந்த கண்களை அடக்க வகையறியாது சிலையென உறைந்து அமர்ந்திருந்த ஆலியா என்ன பேசுவதென்று தெரியாது தன் தாயின் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தாள்.

ஆஸிமா கலங்கி இதுவரை பார்த்திராதவள் என்னவாயிற்று என்று மீண்டும் மீண்டும் கேட்க, அவரோ பதிலேதும் கூறுமாப்போல இல்லை. அஸருக்கான அதான் ஒலிக்க, அதான் முடிந்ததும் எழுந்து சென்று தன் ஹிஜாபை எடுத்து சுற்றத் தொடங்கினார் ஆஸிமா.

எங்கோ செல்வதற்காகக் கிளம்புகிறார் என்பது மட்டும் தெரியவே, தன் சந்தேகத்தைக் கேட்டாள் ஆலியா.

"Go, get ready!"

அவர் வாயிலிருந்து வந்தது அது மட்டுமே.

"ஏதாச்சும் நடக்கக்கூடாதது நடந்துட்டுதோ? என்னனு guess பண்ணவும் முடியலயே.."

மானசீகமாகத் தன் நகங்களைக் கடித்துக் குதறியவாறு இருந்தாள் ஆலியா.

கையில் இருந்த கடித உறையைப் பிரித்துப் பார்க்காது அவ்வாறே கட்டிலில் வைத்துவிட்டுத் தாயின் கட்டளையை மறுத்துக் கூறாமல் தன் அறைக்குச் சென்று தொழுதுவிட்டு அபாயாவை அணிந்து ஹிஜாபை சுற்றிக்கொண்டு வந்தாள்.

அவளது அறைக்கு வெளியே காத்திருந்த ஆஸிமா, அவள் வந்ததும் ஏதும் பேசாமல் படிகளின் பக்கமாகச் சென்றார். படிகளில் இறங்கிச் சென்ற ஆஸிமாவின் பின்னாடியே ஆலியாவும் இறங்கினாள், எங்கு செல்கிறாரென்று தெரியாமல் தன் மூளையைப் போட்டுப் பாடாய்ப்படுத்திக்கொண்டு..

சந்தனகுமாரியிடம் வெளியே சென்று வருவதாகக் கூறியவர் கதவைத் திறந்துகொண்டு வெளியேற, குழப்பமாக இருந்த ஆலியா அங்கு தன்னையே நோக்கிக் கொண்டிருந்த சந்தனகுமாரியை உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. தாயின் பின்பு நடையைக் கட்டிவிட்டிருந்தாள்.

வீட்டிலிருந்து வெளியேறியவர் நேராகக் கடற்கரையை நோக்கி சாந்தமாக நடந்து சென்றார். அமைதியே உருவாக அவர் பின்னால் நடந்து கொண்டிருந்த ஆலியாவோ நீண்ட நாட்கள் கழித்துக் கடற்கரைப் பக்கம் செல்வதனால் ஏற்பட்ட உள்மன உற்சாகத்துடன் நடந்தாள்.

உச்சி மண்டையைக் குறிவைத்து ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொண்டிருந்த பகல் வெயில் மங்கி கொஞ்சம் இதமாகியிருந்தது காலநிலை. அளவாக வீசிக் கொண்டிருந்தது கடற்காற்று. அலைகளின் அசைவும் சாதாரணமாக இருந்தது.

ஒன்றரை நிமிட நடைக்குப் பின் கடற்கரையின் மையத்துக்குச் சென்று நின்றார் ஆஸிமா. ஏதும் பேசாமல் கடலையே பார்த்தவாறு கைகட்டி நின்றிருந்தவர் அவ்விடத்திலே அமர்ந்து முழங்கால்களைக் கைகளால் கட்டிக்கொள்ள, பக்கத்தில் அவருடன் சேர்ந்து தானும் அவ்வாறே அமர்ந்து கொண்டாள் ஆலியா.

வார நாளாதலால் அங்கே ஒருவரும் இருக்கவில்லை. சற்றுத் தூரத்தில் குடிசைவீட்டு சிறுவர்கள் தங்கள் பொலித்தீன் பைக் காற்றாடிகளில் நூல்கட்டிப் பறக்க விட்டவாறு கதைத்துக்கொள்ளும் அரவம் மட்டுமே இதர இயற்கை ஒலிகளுடன் சேர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. பிரதான வீதியில் பெரிதாக எந்த சந்தடியுமின்றி சில வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருந்தன. நடைபாதைகளில் ஆங்காங்கே மனிதர்களும். ஆக, சுரத்தில்லாத, மப்பும் மந்தாரமுமான ஒரு சூழலே அங்கு நிலவியது.

இருவரது முகங்களும் தம் முன்னே நெளிந்து கொண்டிருந்த கடலையே நோக்கியவாறு இருந்தன. யாரும் வாய் திறந்து பேசக் காணோம். மௌனமே அவர்களுக்கு இடையில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தது.

அவர் ஏதாவது பேசுவார் பேசுவாரென்று எதிர்பார்த்துக் காத்திருந்தவள் கடற்கரை மணலில் தன் ஆட்காட்டி விரலால் வார்த்தைகள் செதுக்கிக் கொண்டிருந்தாள்.

என்றுமில்லாதவாறு தன் தாய் வீட்டிற்கு இவ்வளவு சீக்கிரமாக வந்தமையும் வழமைக்கு மாறாக நடந்து கொண்டமையும் அவள் மூளைக் குளத்தின் அடியிலுள்ள மண்ணை சுண்டி அவளை முழுவதும் குழப்பிவிட்டிருந்தது.

நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள் அந்தக் கடற்கரை மணலில் எல்லாருமாய் அமர்ந்து உறவுகளுடன் கதைபேசி கடக்கும் நொடிகளை மனதாற ரசிப்பதுபோலப் பல தடவைகள் கற்பனை செய்துகொண்டு அதே கற்பனையில் தனக்குத்தானே மகிழ்ந்துகொண்டு ஆறுதலடைந்து கொள்ள முயன்றுள்ளாள். முதல் தடவையாக ஆஸிமாவுடன் வந்து இவ்வாறு அமர்ந்திருக்கின்றமை அதனைத்தான் ஞாபகப்படுத்தியது ஆலியாவுக்கு.

அவளது தென்னைத்தோழி தூரத்தில் இவளைக் கண்டதாலோ என்னவோ, தலையை நன்றாக அசைத்தசைத்து ஆட்டிக் கொண்டிருந்தது. யாரது தன் தோழிக்கு அருகில்!? தன்னை விடுத்து அந்தப் புது முகத்துடன் தோழமை பாராட்ட ஆரம்பித்துவிட்டாளோ என்று நினைத்தவுடன் வந்த பொறாமைபோலும். இவர்களின் பக்கமே ஆடியபடி  குறுகுறுவென்று பார்த்திருந்தது.

இவர்கள் இருவரும் ஒரு வார்த்தையாவது பேசிக் கொள்வார்களென்று காத்துக்கொண்டு மேகமேடையில் வீற்றிருந்த சூரியனுக்குக்கூட சலித்துவிட்டது போலும். கொஞ்சம் கொஞ்சமாக வாடி வதங்கியபடி கீழே கீழே இறங்கிக் கொண்டிருந்தது.

"ஃஹ்ம்.. ஆலியா.."

ஒருவாறு தன் கலங்கிய குரலைச் செறுமிச் சரிப்படுத்திக்கொண்டு ஆரம்பித்தார் ஆஸிமா.

மணலைத் துளாவிக் கொண்டிருந்த ஆலியாவின் விரல்கள் சட்டென்று தன் வேலையை நிறுத்திக் கொள்ள, இன்னுமே கடலை வெறித்துக் கொண்டிருந்த ஆஸிமாவைப் படபடப்போடு நோக்கினாள். பார்வையைக் கடலின் மீதிருந்து விலக்காமலே தொடர்நதார்..

கடலலைகளின் அரவம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்க, காற்றின் வீரியமும் அதனுடன் ஒத்துப் பாடத் தொடங்கியது. தூரத்தே சிறுவர்களின் சத்தம் தேய்ந்துகொண்டு சென்றது. தன் தாய்க்கு மட்டுமே காதுகொடுத்துக் கொண்டிருந்தாள் ஆலியா.

அன்று காலையில் தன் மனநிலையை மொத்தமாக மறுபக்கம் புரட்டிப்போட்ட அந்த சம்பவத்தை மன அரங்கில் மீண்டும் ஓடவிட்டுப் பார்த்து அதனை ஆலியாவிடம் சொல்ல ஆரம்பித்தார் ஆஸிமா.

தானாகவே துளிர்த்த ஆர்வத்துடன் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஆலியா.

•••

மட்டு மாநகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் ஒரு பெரிய அரச மருத்துவமனை அது. வழக்கம்போல காலை நேரப் பரபரப்புக்களுடன் ஆரம்பித்தது அன்றைய நாள்.

தரைத்தளத்தில் மருத்துவமனை வரவேற்பாளரின் மேசைகளிலும் அதற்கு அருகில் ஓரிடத்தில் வரிசைகளாகப் போடப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் கதிரைகளிலுள் விராந்தைகளிலும் என ஆட்கள் புழக்கம் ஆரம்பித்திருந்தது.

வெளியே வாகன நிறுத்துமிடத்தில் வந்து நின்ற வெள்ளைக் காரிலிருந்து இறங்கினார் ஆஸிமா. கையில் பையுடன் தன் மூக்குக்கண்ணாடியை ஒரு முறை சரி செய்துகொண்டு மருத்துவமனையின் உள்ளே நுழைந்தார்.

எதிரே வந்த மருத்துவமனை ஊழியர்களின் முகமனுக்கு ஒரு சிக்கனமான புன்னகையாலும் சிறு தலையசைப்பாலும் பதிலளித்தவாறு தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றார்.

வெள்ளைக் கோட்டும் கையில் ஸ்டெத்தும் என அன்றைய நாளின் பணிக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டவர் வழக்கம்போலத் தன்னை நாடி வந்த நோயாளர்களைப் பரிசோதிக்க ஆரம்பித்தார்.

Brunch க்காக ஒரு சிறிய இடைவேளை எடுத்துக் கொள்ளும் வரைக்கும் எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

முற்பகல் ஒரு பத்து மணியளவுதான் இருக்கும். தன் பணி அறையிலிருந்து வெளியே வந்த ஆஸிமா, கையில் உணவுப் பெட்டியுடன் மருத்துவமனையின் கேன்டீனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

நாற்புறமும் வெள்ளை நிற சுவர்கள் கொண்ட   அறைக்குள் அவ்வளவு நேரம் அமர்ந்திருந்துவிட்டு கொஞ்சம் நடந்து சென்று கேன்டீனில் அமர்ந்து அங்கு சாடிகளில் நடப்பட்டிருக்கும் தாவரங்களையும் திறந்த இடமாக இருப்பதனால் மேலே தெரியும் வானத்தையும் சக ஊழியர்களுயும் என கொஞ்சம் வேறு வேறு வர்ணங்களையாவது பார்த்து வந்தால் நல்லது என்றெண்ணயவாறே நடந்து கொண்டிருந்தவர் சட்டென்று நின்றார்.

தன் பின்னாலிருந்து வந்த கதறல் சத்தத்தில் கையிலிருந்த உணவுப் பெட்டியைத் தவறவிட்டவர் திரும்பிப் பார்க்க, அவர் கண்டது வெள்ளை மார்பில் தரையில் வழுக்கிச் சென்றுகொண்டிருந்த ஸ்ட்ரெச்சரும் அதன் பின்னே அழுதபடி ஓடிக் கொண்டிருந்த இருவரையும் மருத்துவமனை ஊழியர்கள் சிலரையும்தான்.

"Emergency! Emergency!"

திடீரென்று வந்த குரலைத் தொடர்ந்து அந்த ஸ்ட்ரெச்சர் அவசர சிகிச்சை அறைக்குள் கொண்டு செல்லப்பட்டது.

அந்த ஸ்ட்ரெச்சரின் பின்னே ஓடிய பெண்மணி கதறிய கதறலில் உடல் அதிர்ந்திட,  தன்னையறியாமலே அறைக்குள் நுழைந்து ஸ்டெதஸ்கோப்பை அள்ளிக்கொண்டு அவசர சிகிச்சை அறையை நோக்கி ஓடினார். எங்கும் எதிரொலித்த அந்தக் கதறல் சத்தம் கேட்டு ஏற்கனவே இரண்டு மூன்று வைத்தியர்கள் வாயருகே கொண்டுபோன உணவையும் கீழே போட்டுவிட்டு ஓடி வந்திருந்தனர்.

கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தவள் ஒரு பதின்வயதுப் பெண். வலி தாங்காது முனகிக் கொண்டிருந்தவளது இடதுகை மணிக்கட்டுப் பகுதியில் இரத்தம் பெருகி வழிந்து அவளது ஆடையை முழுவதும் நனைத்துக் கொண்டிருந்தது. வெட்டுக்காயம் போலும். அங்கு ஏற்கனவே இருந்த ஒரு வைத்தியரும் தாதியரும் வலியில் துடித்துக் கொண்டிருந்த அந்த சிறுமியின் கையை ஆராய்ந்து தக்கனவற்றை செய்து கொண்டிருந்தனர்.

வெளியேயிருந்த அந்தப் பெண்மணியின் கதறல்தான் ஓயவே இல்லை. கேட்போரை ஒரே கணத்தில் உருக்கிவிடுமாறு இருந்தது. அவரை அவரருகில் இருந்த ஒரு ஆண் சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தார். இருவரும் அந்தச் சிறுமியின் பெற்றோராக இருக்கலாம் என்று யூகம் செய்து கொண்டார் ஆஸிமா.

சில நிமிடங்கள் உணர்வுகள் மரத்துப்போனது போன்று நின்று கொண்டிருந்தவர் அருகே அவசர சிகிச்சை அறைக்குள்ளிருந்து வெளியேறிக் கதைத்துக்கொண்டு சென்ற இரு தாதியரின் உரையாடலில் தன்னிலை அடைந்தார்.

அவர்களை விளித்து என்னவென்று வினவியவர் அந்தச் சிறுமி தன் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளாள் என்று அறிந்துகொள்ளவே அதிர்ந்து நின்றார்.

"வாட்?"

அதிர்ச்சியில் கண்கள் விரியக் கேட்டவரிடம் ஆமாமென்று தலையாட்டிவிட்டு அகன்றனர் அந்தத் தாதியர் இருவரும்.

"அந்தச் சின்னப் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளாளா? அவளைப் பார்க்கையில் அப்படியொன்றும் பெரிதாக வயதும் இருப்பதாகத் தெரியவில்லையே.. என்னவாக இருக்கும்? அதுவும் இத்தனை சிறிய வயதில்!? ஏதேனும் காதல் விவகாரமாக இருக்குமோ! ஆனால்.. இத்தனை சிறிய பெண்ணுக்கு அப்படி ஒரு பிரச்சனை இருப்பதுபோல தோன்றவில்லையே.."

நொடியில் மனம் அதையும் இதையும் எண்ணியவாறு ஒரு யூகத்துக்காக வலைவிரிக்க, உண்மையை அறியாமல் வீணாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டாமென்று எண்ணியவாறு ஒருதடவை அந்த அவசர சிகிச்சை அறைக் கதவின் அருகே சென்று கண்ணாடி வழியே உள்ளே பார்த்தார்.

இடது கை மணிக்கட்டில் பெரிதாக ஒரு கட்டுப் போடப்பட்டிருந்தது. கண்களை மூடியவாறு முனகிக்கொண்டு படுத்திருந்த அந்தச் சிறுமியின் முகத்தை ஒழுங்காகக் காண முடியவில்லை.  அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

அறைக்கு வெளியே போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்திருந்த அந்தத் தாய் தலையைப் பிடித்துக்கொண்டு இன்னுமே கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். தன் பெண்ணை அந்த நிலையில் பார்க்கத் தன்னால் முடியாதென்று பிதற்றிக் கொண்டிருந்தவரைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது ஆஸிமாவுக்கு. அங்கிருந்த எல்லோருக்கும்தான்.

கண்ணான மகளை நினைத்துக் கதறும் அந்தத் தாயைப் பார்க்கையில் அனைவருக்குள்ளும் இருந்த தாய்மை உணர்வு வெளியே எட்டிப்பார்த்தது. அதற்கு ஆஸிமாவும் விதிவிலக்கல்லவே.. மனம் கனத்துக்கொண்டு சென்றது.

கைநழுவி விழுந்த உணவுப் பெட்டி தரையிலேயே கிடக்க, அதை முற்றிலும் மறந்து மனதினுள் ஏதோ ஒரு தடக் தடக் உணர்வுடன் நடந்து தனக்குரிய அறைக்குள் வந்து அமர்ந்தார். ஏற்கனவே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த வெள்ளை சுவர்களைப் பார்த்தவாறு மீண்டும் அமர்ந்திருக்கையில் தலை விண் விண்ணென்று வலித்தது. பேசாமல் கேன்டீனுக்குச் சென்றே அமர்ந்திருந்துவிட்டு வரலாமென்று எண்ணியவர் அங்கு சென்றார்.

ஒரு ஓரமாகப் போடப்பட்டிருந்த நீண்ட மேசையில் அமர்ந்து கொண்டவர் தலை வலிக்கின்றதென்று ஒரு காஃபியை ஆர்டர் பண்ணிவிட்டு மேசையில் படுத்தவாறு காத்திருந்தார்.

அங்கு அமர்ந்திருந்த அத்தனை பேர் வாயிலும் சற்று முன்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி பற்றிய பேச்சாகவே இருந்தது.

• தென்றல் தழுவும் •

Continue Reading

You'll Also Like

737 105 10
எங்கு கீறல் விழவே கூடாதென இத்தனை வருடங்களாக ஆசைப்பட்டாளோ, அங்கு ஆணி அறைந்தாற் போல வடுவொன்று!
2.9K 284 24
#5 உருவம் பார்த்து உறவு செய்திடா உற்றார் பெருவரம். உலகத்திலுள்ள காலம் நீ உள்ள வரைக்கும் நின்று உதவிடும் சொந்தம் உதிரத்தில் கலந்த உறவுகளே - அதை ...
2 0 1
na intha kadhaiya romba intresting ha kondu poganumnu annoda friend and me right this story ithu full la rendu ponnugaloda good and bad . ellam...