கோரநாடு

By BlitzkriegKk

636 100 184

வான்நடுவே ஓடுகிற மேகங்க ளோர்குடையாய் ஆனதொரு மாமலை சூழ்நாடு- தேன்சொரியும் கானகங்க ளேயரணாய் மாறியே காக்கின்ற வா... More

கோரநாடு - 1. எழாலேறு
கோரநாடு- 2. நீர்ச்சிலை
கோரநாடு- 3. மாமன்னர் வரகுணதிருமாறன்
கோரநாடு- 4. சதியரங்கம்
கோரநாடு- 5. அரசியல் நரபலி
கோரநாடு- 6. மேகமிடை மின்னல்
கோரநாடு- 7. வேல்விழி
கோரநாடு- 8. நாகபூமி
கோரநாடு -10. மரணக்கோட்டம்
கோரநாடு-11. கனவும் களவும்
கோரநாடு 12- இதயமொழி இனியமொழி
கோரநாடு- 13. காலநெருப்பு

கோரநாடு- 9. மஞ்சத்துறை நெஞ்சம்

38 5 17
By BlitzkriegKk

மஞ்சத்துறை நெஞ்சம்:

அஞ்சுகச் செவ்விதழ் கொண்டவள் கண்முன்னே
நஞ்சுகொள் நாகமும் கெஞ்சிடும்- கொஞ்சிடும்
வஞ்சி யருகினில் மஞ்சத் துறைபவன்
நெஞ்சமும் பஞ்சா கிட.

இறுக மூடியிருந்த கண்ணிமைகளின் மேல் ஒரு நான்கைந்து பேர் அமர்ந்திருப்பதைப் போன்ற வலியுடன் மெல்லத் திறந்து கொண்டிருந்தான் இளங்குமரன். சுற்றி எதுவும் புலப்படாதிருந்தபோதும் தான் இருப்பது மிகவும் பாதுகாப்பான இடம் என்பதும் ஏதோ ஓர் மாளிகை நடுவே மஞ்சத்தில் படுத்திருப்பதும் தெளிவாக விளங்கியது அவனுக்கு. சற்றே கடினத்துடன் தலையைத் திருப்பி யாராவது தென்படுகிறார்களா எனப் பார்த்தான். ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லை. கடைசியாக என்ன நடந்தது என்பதும் நினைவிலில்லை. புதிதாகப் பிறந்திருப்பதைப் போன்ற உணர்வில் திளைத்திருந்தான். அவனது மனக்கண்ணில் ஒரே ஒரு முகம் மட்டும் பதிந்திருந்தது. அது கார்மேகக்குழலியின் அழகு முகம்.

சற்று நேரம் கழித்து ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. தான் யார், ஏன் இங்கு வந்தோம், எவ்வாறு காவலர்களிடம் சிக்கினோம், எப்படித் தப்பித்தோம் என்று அனைத்தும் அவன் மனக்கண்ணில் ஓடின. மற்ற புலன்களும் வேலை செய்யத் தொடங்கிவிட்டிருந்தன. மாடத்தின் வழியே மழைச்சாரல் கரைந்த மண்ணின் மணம் மெல்லக்கிளம்பி வந்தது. வளையல்கள் கலகலக்கும் ஒலி செவிகளைத் தீண்டிட, ஒற்றைத் தாழம்பூவின் வாசம் அவ்விடத்தை நிரப்பி நாசி துளைக்க, மெல்லக் கைகளைப் பற்றியபடி கண்களின் முன் வந்து நின்று மஞ்சத்தில் அமர்ந்தது அவ்வோவியம்.

“பரவாயில்லையே.. இரு நாட்களிலேயே எழுந்துவிட்டீர்களே. நல்ல திறமைசாலி தான் போலும்” என்றபடி ஒரு ஓரப்புன்னகை புரிந்தாள் கார்மேகக்குழலி.

“இரு நாட்களா? நான் இங்கு வந்து இரண்டு நாட்களாகிவிட்டதா?” எனப் பதறியபடி எழ முயன்றான் குமரன்.

“அட. வெறும் இரு நாட்கள் தானே. நான் தங்களுக்கு அளித்த வலி நிவாரணி எங்கள் கோரநாட்டின் காடுகளில் மட்டுமே தயாரிக்கப் படுகிற மது கலந்து செய்யப்படும் ஒரு வகை மருந்தாகும். வழக்கமாக இதனை அருந்தியவர்களால் ஒரு வாரம் கண்களைக் கூடத் திறக்க முடியாது. நாடித்துடிப்பு கூட பாதியாகக் குறைந்துவிடும். உடலுக்கு உணவின் தேவையே இராது. ஒரு வகைக் காட்டு முயலின் ஈரலைத் தேனுடன் கலந்து கரும்புச் சாற்றில் பலகாலம் ஊறவைத்து ப்ரத்யேகமாகத் தயாரிக்கப்படுவது. அதன் வீரியத்தையும் மீறி இரு நாட்களில் தாங்கள் எழுந்தது உண்மையிலேயே வியப்பளிக்கிறது. பெரிய ஆள் தான் போங்கள்.” என்றபடி கைகளை விட்டுவிட்டு எழுந்தாள்.

இத்தனை நாள் தன்னை ஒரு நொடியும் பிரியாது பணிவிடை செய்து வந்தாளாகிலும் இப்போது விழிப்பு வந்ததும் ஒரு நொடியும் அருகிலமர அஞ்சுவதைக் கண்டு வியப்புக்கும் பெருமிதத்துக்கும் உள்ளானான் இளங்குமரன். இருப்பினும் கொள்ளையனான தன்னிடம் இத்தனை அன்பு காட்டுதல் சாத்தியமா என்றும் விளங்கவில்லை அவனுக்கு. அதைத் தாங்க இயலாது கேட்டும் விட்டான் “என்னைப் பார்த்ததும் காவலர்களிடம் ஒப்படைக்காது இங்கு கொண்டுவந்து வைத்திருக்கக் காரணம் என்ன? மேலும் தாங்கள் யாரென்றும் அறிந்தகொள்ள விழைகிறேன். நன்றி கூறக்கூட தங்கள் பெயர்கூடத் தெரியாது எனக்கு. அந்த மதிற்சுவர் தாண்டி இருந்த குளத்திற்கு வந்த என்னை இப்படி தனியறையில் வைத்துப் பார்த்துக்கொள்வதன் காரணமென்ன?”

“காரணமின்றி எதுவும் நிகழ்வதில்லை. காரணங்களுக்காக மட்டுமே கூட எதுவும் நிகழ்வதில்லை. பெயருக்கு நன்றி கூறப் பெயர் எதற்கு?” என்று நிதானமாக வினவினாள்.

“அதுவும் சரிதான். ஆனால் தாங்கள் யாரென்று நான் தெரிந்துகொள்ள வேண்டாமா?”

“ஓ. அதற்கென்ன. நான் கார்மேகக்குழலி. இந்நாட்டு இளவரசி. ஆனால் எனக்கு அதிலெல்லாம் பெரிய ஆர்வமில்லை. இருப்பினும் என் அனுமதியின்றி என் அந்தப்புரப் பகுதிக்குள் நுழைந்த நீங்கள் யார் என்பதையும் அதற்கான காரணத்தையும் கூறலாமே. அதன்பிறகு தங்களை நான் ஏன் சிறைக்கு அனுப்பாமல் இங்கு வைத்து சீராக்கி சீராட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்” என்றாள்.

இதை எதிர்பாராத இளங்குமரன் ஒரு நொடி சிந்தித்துப் பின் தன்னைப் பற்றிக் கூறலானான்.” இதுவரை என்னைப் பற்றி நான் யாரிடமும் கூறவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அப்படிப்பட்ட நிலைகளிலும் நான் உண்மைகளைக் கூறியதில்லை. ஆனால் உன்னை மன்னிக்கவும், உங்களைக் கண்டதும் எனக்குப் பொய் கூறத் தோன்றவில்லை. என் பெயர் இளங்குமரன். கோரமலைக் காடுகளே என் பிறப்பிடம். எனக்கு தாய் தந்தையர் என்று யாருமில்லை. ஆனால் தாயினும் மேலாக என்னைக் கவனித்துக் கொள்பவர்கள் எனது குரு வெண்முகில்வேள் அடிகளும், என் நண்பன் மதிமாறனுமே.

இரு வாரங்களுக்கு முன் என் குருவானவர் என்னை அழைத்து தலைநகருக்குச் சென்று இங்கு நிகழ்ந்து வருவனவற்றை அறிந்து வருமாறு கட்டளையிட்டார். அதன்படி நானும் மதிமாறனும் இங்கு வந்து இந்நாட்டு மன்னரின் மறைவும் அதைத் தொடர்ந்த அரசியல் குழப்பங்களையும் அறிந்துகொண்டோம். இப்படியானதொரு சூழலில் தான் நான் என் ஆசானின் ஆணைப்படி வேண்டுமென்றே கொள்ளையர் தலைவனைப் போல் உங்கள் நாட்டுக் காவலர்களிடம் சிக்கிக் கொண்டு பின் இவ்விடத்தை அடைந்தேன். இதற்குப் பின் என்ன செய்வதென்று எனக்குக் கூறப்படவில்லை. ஆனால் உன்னைக் கண்டதும் என் ஒட்டுமொத்த வாழ்வும் வேறுவழியில் திரும்பிவிட்டது போல் உணர்ந்தேன். அதன்பிறகு நடந்தது உனக்கே தெரியும்.” என்று முடித்தான்.

“அப்படியென்றால் மூன்று தினங்களுக்கு முன் எனக்கு வந்த செய்தி உண்மைதான் போலும்” என்றாள்.

“செய்தியா? என்ன அது?”

“ஆம். மூன்று நாட்களுக்கு முன்னர் என் மடியில் ஒரு புறா வந்தமர்ந்தது. அதை பிடித்து மரத்தை நோக்கி பறக்கவிட்டபின்னும் அது விடாது என் மடியில் வந்தமர்ந்தது. பிறகு அதன் கால்களில் ஒரு சிறிய கயிறால் கட்டப் பட்ட துணியொன்று இருந்தது. அதில்
தலைவன் வருவான்.
தக்க பணி புரிக.
நிலைமை மாறும்.
நினைவும் திரும்பும்.
என்று எழுதி இருந்தது. இதைப் பற்றி மதுரமதியிடம் கேட்டபோது அவளுக்கும் ஏதும் விளங்கவில்லை. நான் இந்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிடுவதில்லை என முடிவெடுத்துத் தவம் புரிய முடிவெடுத்திருந்தேன். இருப்பினும் இங்கு நடைபெறும் குழப்பங்களுக்குத் தீர்வும் காணவேண்டியதும் அவசியமாகும். ஆகவே கடந்த சில தினங்களாக தங்களை எதிர்நோக்கியிருந்தேன் அது தாங்கள்தான் என்றறியாமலே.” என்று விளக்கினாள்.

“தலைவன் வருவது இருக்கட்டும். ஆனால் அது நான்தானென்று எப்படி முடிவெடுத்தாய்?” என்று கேட்டன் குமரன்.

ஒருமுறை சற்று யோசித்தவள் “அதெல்லாம் அப்படித் தான்” என்று கூறி முடிக்கவும் ஒரு கழுகு வந்து இளங்குமரனது கையில் அமரவும் சரியாயிருந்தது.

உடனடியாக அதன் கழுத்துப் புறமிருந்த ஓலையொன்றைப் பிரித்துப் பார்த்ததும் குமரனது முகம் ஒருமுறை குழம்பிப் பின் தெளிவுற்றது. கார்மேகக் குழலிக்கு நடப்பது எதுவும் விளங்கவில்லை.

“இங்கு என்ன நடக்கிறது. கழுகுகளை தூதனுப்பும் வழக்கம் இல்லையே இந்நாட்டில். என்ன செய்தி அது?” என்றாள் கையிலிருந்த மருந்துக் குளிகைகளை நீர்விட்டுக் கலக்கிக் கொண்டே.

“ஒன்றுமில்லை. மதிமாறனிடமிருந்து தான். மேலும் தூதுக்கு இப்படிக் கழுகுகளைப் பயன்படுத்துவது எங்கள் வழக்கம். யவனர்களிடமும் இவ்வழக்கம் உண்டு. இக்கழுகுகள் புறாக்களை விட வலிமையானவை. விரைவானவை. ஆனால் பழக்குவது மிகக்கடினம். ஒருமுறை பழக்கி விட்டால் வழியையும் அந்த மனிதனையும் இவை எளிதில் மறப்பதில்லை. தேடிக்கூட செய்தி சேர்க்கும் திறமைவாய்ந்தவை. மேலும் தூதுப் பறவை என யாரும் நினைக்க வழியுமில்லை. இப்போது வந்த அக்கழுகின் பெயர் நவிலன். நான் எங்கு சென்றாலும் அதைக் கண்டுகொண்டு வந்துவிடுவான். இதோ அந்தச் செய்தி” என்று அவளிடம் நீட்டினான்.

அதில் ”சிறையில். விரைவில்” என்று எழுதியிருந்தது.

ஏதும் புரியாதவளாய் நின்றிருந்தவளிடம் “நான் இப்போது உடனடியாகச் செல்ல வேண்டும். விரைவில் வருகிறேன்.” என்றுகூறிச் சென்றவனிடம் இன்னும் சில நாட்கள் ஓய்வெடுத்துச் செல்லுமாறு வேண்டினாள் இளவரசி. ஆனால் நிலைமையின் தீவிரம் காரணமாகவும் சிறையிலிருக்கும் மதிமாறனை முன்னிட்டும் விரைந்து செல்ல எத்தனித்தான் குமரன்.

அவனது வாளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு வேறுவழியின்றி வழியனுப்பிவிட்டு அவன் செல்லும்போது அவனையும் அவன் முதுகிலிருந்த கழுகுவடிவ குறியையும், கையிலிருந்த முத்திரை மோதிரத்தையும் பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள் இளவரசி கார்மேகக்குழலி. நடந்தவை அனைத்தையும் ஓரமாக நின்று நிதானமாகக் கவனித்துவிட்டு குமரன் அகன்றதும் வேகமாக உள்ளே நுழைந்தது ஒரு உருவம்..

Continue Reading

You'll Also Like

13 0 3
hyunjin padrastro
943 47 8
தமிழ் மொழியின் அதிசயங்கள்
83 7 3
வரலாற்றுப் புதினம்.
7.4K 570 12
சமுத்ரா