கோரநாடு- 9. மஞ்சத்துறை நெஞ்சம்

38 5 17
                                    

மஞ்சத்துறை நெஞ்சம்:

அஞ்சுகச் செவ்விதழ் கொண்டவள் கண்முன்னே
நஞ்சுகொள் நாகமும் கெஞ்சிடும்- கொஞ்சிடும்
வஞ்சி யருகினில் மஞ்சத் துறைபவன்
நெஞ்சமும் பஞ்சா கிட.

இறுக மூடியிருந்த கண்ணிமைகளின் மேல் ஒரு நான்கைந்து பேர் அமர்ந்திருப்பதைப் போன்ற வலியுடன் மெல்லத் திறந்து கொண்டிருந்தான் இளங்குமரன். சுற்றி எதுவும் புலப்படாதிருந்தபோதும் தான் இருப்பது மிகவும் பாதுகாப்பான இடம் என்பதும் ஏதோ ஓர் மாளிகை நடுவே மஞ்சத்தில் படுத்திருப்பதும் தெளிவாக விளங்கியது அவனுக்கு. சற்றே கடினத்துடன் தலையைத் திருப்பி யாராவது தென்படுகிறார்களா எனப் பார்த்தான். ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லை. கடைசியாக என்ன நடந்தது என்பதும் நினைவிலில்லை. புதிதாகப் பிறந்திருப்பதைப் போன்ற உணர்வில் திளைத்திருந்தான். அவனது மனக்கண்ணில் ஒரே ஒரு முகம் மட்டும் பதிந்திருந்தது. அது கார்மேகக்குழலியின் அழகு முகம்.

சற்று நேரம் கழித்து ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. தான் யார், ஏன் இங்கு வந்தோம், எவ்வாறு காவலர்களிடம் சிக்கினோம், எப்படித் தப்பித்தோம் என்று அனைத்தும் அவன் மனக்கண்ணில் ஓடின. மற்ற புலன்களும் வேலை செய்யத் தொடங்கிவிட்டிருந்தன. மாடத்தின் வழியே மழைச்சாரல் கரைந்த மண்ணின் மணம் மெல்லக்கிளம்பி வந்தது. வளையல்கள் கலகலக்கும் ஒலி செவிகளைத் தீண்டிட, ஒற்றைத் தாழம்பூவின் வாசம் அவ்விடத்தை நிரப்பி நாசி துளைக்க, மெல்லக் கைகளைப் பற்றியபடி கண்களின் முன் வந்து நின்று மஞ்சத்தில் அமர்ந்தது அவ்வோவியம்.

“பரவாயில்லையே.. இரு நாட்களிலேயே எழுந்துவிட்டீர்களே. நல்ல திறமைசாலி தான் போலும்” என்றபடி ஒரு ஓரப்புன்னகை புரிந்தாள் கார்மேகக்குழலி.

“இரு நாட்களா? நான் இங்கு வந்து இரண்டு நாட்களாகிவிட்டதா?” எனப் பதறியபடி எழ முயன்றான் குமரன்.

“அட. வெறும் இரு நாட்கள் தானே. நான் தங்களுக்கு அளித்த வலி நிவாரணி எங்கள் கோரநாட்டின் காடுகளில் மட்டுமே தயாரிக்கப் படுகிற மது கலந்து செய்யப்படும் ஒரு வகை மருந்தாகும். வழக்கமாக இதனை அருந்தியவர்களால் ஒரு வாரம் கண்களைக் கூடத் திறக்க முடியாது. நாடித்துடிப்பு கூட பாதியாகக் குறைந்துவிடும். உடலுக்கு உணவின் தேவையே இராது. ஒரு வகைக் காட்டு முயலின் ஈரலைத் தேனுடன் கலந்து கரும்புச் சாற்றில் பலகாலம் ஊறவைத்து ப்ரத்யேகமாகத் தயாரிக்கப்படுவது. அதன் வீரியத்தையும் மீறி இரு நாட்களில் தாங்கள் எழுந்தது உண்மையிலேயே வியப்பளிக்கிறது. பெரிய ஆள் தான் போங்கள்.” என்றபடி கைகளை விட்டுவிட்டு எழுந்தாள்.

கோரநாடுWhere stories live. Discover now