கோரநாடு

By BlitzkriegKk

636 100 184

வான்நடுவே ஓடுகிற மேகங்க ளோர்குடையாய் ஆனதொரு மாமலை சூழ்நாடு- தேன்சொரியும் கானகங்க ளேயரணாய் மாறியே காக்கின்ற வா... More

கோரநாடு - 1. எழாலேறு
கோரநாடு- 2. நீர்ச்சிலை
கோரநாடு- 3. மாமன்னர் வரகுணதிருமாறன்
கோரநாடு- 4. சதியரங்கம்
கோரநாடு- 5. அரசியல் நரபலி
கோரநாடு- 7. வேல்விழி
கோரநாடு- 8. நாகபூமி
கோரநாடு- 9. மஞ்சத்துறை நெஞ்சம்
கோரநாடு -10. மரணக்கோட்டம்
கோரநாடு-11. கனவும் களவும்
கோரநாடு 12- இதயமொழி இனியமொழி
கோரநாடு- 13. காலநெருப்பு

கோரநாடு- 6. மேகமிடை மின்னல்

38 6 15
By BlitzkriegKk


மேகமிடை மின்னல்:

அன்று பிறந்த பூனைக்குட்டியின் மென்மையான முதுகைப் போல படர்ந்து விரிந்த பச்சை வண்ணப் பட்டுத் துணி போலவும் அடர்ந்த கிளைகளால் ஒன்றை ஒன்று தழுவி இரவும் பகலும் இன்பம் துய்த்துக் கொண்டும், தேவைப்படும் போதெல்லாம் நீரள்ளிக் குடிப்பது போல காற்றெனும் கணையை வீசி மேகங்களை அள்ளி இழுத்து மழை பெய்யச் செய்து தாகம் தீர்த்து உடல் நனைத்துப் பார்ப்பவர் உள்ளத்தையும் ஒருங்கே நனைத்தும் அடர்ந்து வளர்ந்த மரங்கள் நிறைந்த கோரவனத்தினூடாக அமையப்பெற்ற ஒற்றையடிப் பாதையானது குதிரைகளின் காலடித் தடத்தால் அதிர்வுற்றுத் தொடர்ந்தது.

எட்டு வீரர்கள் தத்தமது குதிரைகளுடன் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தனர். இருட்டுக்குள் தலைநகரை அடையவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அவர்களில் முதல் இருவரும் பின்னிருவரும் குதிரையில் அமர்ந்து வர நடுவில் இருந்தவர்கள் குதிரையுடன் கூடவே நடந்து வந்துகொண்டிருந்தனர். நான்காவதாக இருந்த குதிரையில் ஒருவன் குற்றுயிரும் குலையுயிருமாக குதிரையின் முதுகோடு சேர்த்து கட்டிவைக்கப்பட்ட நிலையில் இருந்தான். அவனது கைகளில் விலங்கொன்று பொருத்தப்பட்டு அதன் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு ஆஜானுபாகுவான உயரத்தில் ஒருவன் நடந்துவந்துகொண்டிருந்தான்.

இவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கி விரைவாகவும் அதே நேரம் பதட்டமேதுமின்றியும் குதிரை மீது பேரரசனைப் போல சென்றுகொண்டிருந்தான் அருமைநாயகன். அவன் கண்களில் தெரிந்த ஒளி அவன் ஒன்றும் சாதாரண வீரன் அல்ல என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. ஆறடிக்கு மேல் உயரமும் அடங்காத் தோள்களும் முறுக்கேறிய கால்களும் நன்கு நீண்டிருந்த விரல்களும் அவன் இடையில் தொங்கிக்கொண்டிருந்த வாளும் அவன் நிறைய போர்களில் பங்கேற்றிருப்பான் என உணர்த்தியது. திருநீறணிந்து அகண்ட நெற்றியும் நேரான கூரான நாசியும் அவனது அறிவுப் புலமையைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன. ஒரு கையில் நீண்ட எஃகாலான ஈட்டியை லாவகமாகக் கையில் பிடித்திருந்த விதம் அவனை அந்தக் காட்டுக்கே அரசன் போலக் காட்டிக் கொண்டிருந்தது.

காட்டு விலங்குகள் அடிக்கடி உலவும் வழி என்பதால் மிகுந்த கவனமாகவே சென்று கொண்டிருந்தனர். சுற்றிலும் வண்டுகளின் ரீங்காரமும் சிறு பூச்சிகளின் ஓசையும், மரம் விட்டு மரம் தாவிக் கொண்டிருக்கும் குரங்குகளின் கிறீச் கிறீச் என்ற பேச்சொலியும், பலவகையான பறவைகளின் ஒலியும் கலந்து ஒரு மாபெரும் கலப்பிசையாக மாறி ஒத்ததிர்வு ஏற்பட்டு உச்சத்திற்கு சென்று ஒரே ஒலியாகப் பின்னிப் பிணைந்து வனமகளின் தனிக் குரலாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஏழு சுரங்களில் பிறக்கும் எண்ணற்ற ராகங்களுக்கும் மூலமாக அவற்றுக்கெல்லாம் எட்டாத சுரத்தில் புதுவகை ராகமாக செவிக்கும் மனதிற்கும் இனிய அனுபவத்தைத் தந்துகொண்டிருந்தது.

இப்படியான ஒரு சூழலில் அவர்கள் அனைவரும் நடந்துக்கொண்டிருந்ததை சற்று தொலைவிலிருந்த ஒரு மரத்தின் பின்புறமிருந்து குருதிவெறி கொண்ட இரு விழிகள் கவனித்துக் கொண்டிருந்ததை யாரும் அறியவில்லை. அந்தக் கொலைகார விழிகள் ஒரு வரிப்புலிக்கு சொந்தமானவை.

தனக்கு வாகான தூரம் வரும் வரை காத்திருந்த வரிப்புலி யாரும் எதிர்பாராத விதமாகப் பக்கவாட்டிலிருந்து பாய்ந்து முன்னே வந்த வீரனது கழுத்தை நோக்கிப் பாய்ந்தது. அடுத்த நொடி மின்னல் போலப் பாய்ந்த ஈட்டியொன்று அப்புலியின் விலா எலும்புகளோடு உறவாடித் தனியே அப்புலியை அவ்வீரனிடமிருந்து பிரித்துத் துண்டாகத் தூரத்தில் வீழ்த்தியது.

கோரநாட்டில் இவ்வளவு திறமையாக ஈட்டியை பயன்படுத்தக் கூடியவன் யாருமில்லை என்பதை அறிந்திருந்த வீரர்கள் உடனேயே வியப்பில் விக்கித்து நின்றனர். அத்தனை விழிகளும் அருமைநாயகனின் கைகளை நோக்கின. ஆனால் அவனது வேல் அவனது கைகளில் அப்படியே இருந்தது. அப்படியானால் புயல் வேகத்தில் வந்த புலியைக் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒற்றை வேல் வீச்சால் ஓரத்தில் எறிந்தது யார் என்று தங்களுக்குள்ளாகவே குழம்பி சுதாரித்துத் திரும்பிப் பார்த்தனர் அருமைநாயகனும் (இனி இவருக்கு இங்கு வேலையில்லை) அவனது வீரர்களும். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றது.

கொள்ளையனான தன்னை சிறைப்பிடித்து அழைத்து வந்துகொண்டிருந்தவர்களை ஏமாற்றி எப்போதோ தன் விலங்கை விடுதலை செய்துவிட்டுத் தப்பிக்கத் தகுந்த சமயம் பார்த்துக் காத்திருந்து, தூரத்திலேயே அப்புலியை இனங்கண்டுகொண்டதால் அது தாவும் நேரத்தினைக் கணக்கிட்டுத் தன்னை விலங்குடன் பிணைத்துப் பிடித்து வந்துகொண்டிருந்த மாமிச மலை போலிருந்த வீரனைக் கண்ணிமைக்கும் நேரத்தில் கை முட்டியைத் தட்டி நொறுக்கிக் கழுத்தில் ஒரு குத்துவிட்டு சிறு கல் போல கீழே உருட்டி, அவன் விழுவதற்கு முன்பாகவே அவனது வேலைப் பறித்து புலியின் விலா எலும்பை நோக்கிக் குறிபார்த்து எறிந்துவிட்டு, கீழே விழுந்த அவ்வீரனது மார்பு மீது ஒரு காலை வைத்து, தற்போது இவ்விடத்தில் எதுவுமே நிகழாதது போல் மிகவும் அனாயசமாக இடுப்பில் ஒரு கையை வைத்து, சற்று முன் புலியைக் குறிபார்த்ததால் ஒரு புறமாய் சாய்த்த தலையை மெல்லத் திருப்பியபடி அடுத்து என்ன நிகழும் என யூகித்து அதற்கேற்ப தன் உடைக்குள் மறைத்து வைத்திருந்த குறுவாளைப் பற்றிக் கொண்டு மிக இயல்பான ஒரு புன்முறுவலை முகத்தில் தவழவிட்டு மேகமிடை மின்னல் போல ஒளி வீசும் விழிகளுடன் நின்று கொண்டிருந்தான் இக்கோரநாட்டின் நாயகனான இளங்குமரன்....

தொடரும்...


Continue Reading

You'll Also Like

738 8 1
உறவின் அழகிய தேடல்..
12 0 2
அவரது தீய சக்திகள் மீது கொண்ட பயத்த்தினாலும் வெறுப்பினாலும், தீய சக்திகளின் மகா குரு வே வூ ஷான், பல சத்திவாய்ந்த குலங்களின் ஒருங்கிணைப்பின் விளைவாக அ...
42 1 1
அவள் 👩வாழ்க்கையின் பயணம் இது!
251 10 6
இக்கதை இராஜராஜ சோழனின் இளம் வயது வாழ்க்கையை பற்றி கூறும் ஓர் கற்பனை கதை ஆகும். அருள் மொழி வர்மருக்கு கொடும்பாளூர் சிற்றரசின் மீது உள்ள பந்தத்தை காட்ட...