கோரநாடு

By BlitzkriegKk

636 100 184

வான்நடுவே ஓடுகிற மேகங்க ளோர்குடையாய் ஆனதொரு மாமலை சூழ்நாடு- தேன்சொரியும் கானகங்க ளேயரணாய் மாறியே காக்கின்ற வா... More

கோரநாடு - 1. எழாலேறு
கோரநாடு- 2. நீர்ச்சிலை
கோரநாடு- 4. சதியரங்கம்
கோரநாடு- 5. அரசியல் நரபலி
கோரநாடு- 6. மேகமிடை மின்னல்
கோரநாடு- 7. வேல்விழி
கோரநாடு- 8. நாகபூமி
கோரநாடு- 9. மஞ்சத்துறை நெஞ்சம்
கோரநாடு -10. மரணக்கோட்டம்
கோரநாடு-11. கனவும் களவும்
கோரநாடு 12- இதயமொழி இனியமொழி
கோரநாடு- 13. காலநெருப்பு

கோரநாடு- 3. மாமன்னர் வரகுணதிருமாறன்

44 9 22
By BlitzkriegKk

கோரநாட் டிற்கோர் குணமிகு கோவென
ஈரநெஞ் சங்கொள் இறையென- வீரமுடன்
போரது தான்வரின் பொங்கிடும் வில்லவன்
தீரன் வரகுணமா றன்.

ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோரநாடு பாண்டியநாட்டிற்குத் தலைவணங்கிய ஒரு மலைப்புற சிற்றரசாக மட்டுமே இருந்துவந்தது. அந்த நிலையை மாற்றி மலைக்குக் கீழே இருந்த சமவெளிப்பகுதி முழுவதையும் தொடர்ச்சியான போர்களால் வெற்றிகொண்டு இத்தகைய பேரரசாக நிறுவி, மேலும் அப்பகுதியில் மலையையும் ஒரு புறம் சேர்த்துப் பிறநாட்டினர் அவ்வளவு எளிதில் உட்புகாதவாறு சிறந்த கோட்டையையும் உருவாக்கி அகழிகள் விற்பொறிகள் எனப் பல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து, பாண்டிய நாட்டுடன் திருமண உறவையும் ஏற்படுத்திக்கொண்டு அந்நாட்டின் சிற்றரசு என்ற அவப்பெயரையும் நீக்கி நெடுநாள் ஆட்சிபுரிந்தவர் மாமன்னர் வரகுண திருமாறன்.

இதற்கு முன் இருந்த அனைத்து அரசர்களையும் வரிசையில் நிற்கவைத்துப் பார்த்தால் இவரது ஆட்சி நான்கைந்து படிகள் மேலே இருப்பது இவரது தனிச்சிறப்பு.

இக்காலத்தில் உழவும், அதனை ஒட்டிய பதினெண் தொழில்களும் பெருமளவில் வளர்ச்சியுற்று அதனால் உருவாக்கப்பட்ட பொருள்களைக் கொண்டுசெல்வதற்காக அமராநதியில் மனிதர்கள் கடந்து செல்லும் மரப்பாலங்களும், யானைகள் செல்லக்கூடிய கற்பாலங்களும் அமைக்கப்பட்டன.

கோவில்கள் அதிக அளவில் கட்டப்படவில்லையென்றாலும் மத உணர்வு மக்களிடம் வேகமாகப் பரவியிருந்தது. பல நாடுகளைச் சேர்ந்த பல சமயத் துறவிகள் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

சைவ வைணவ சமண பவுத்த சமயங்களைச் சார்ந்தோர் தங்களுக்குள்ளாக விவாதம் நடத்திக்கொள்ள நாடெங்கும் பல சொற்போர் மையங்கள் நிறுவப்பட்டு மழைக்காலத் தவளைகள் போல மாறி மாறிக் குறைகூறி மற்றவர்களின் தவறுகளையும் தத்துவக் குறைகளையும் சுட்டிக்காட்டி வந்த போதிலும் மகுடிக்கு மயங்காத மலைப் பாம்புகளைப் போல மக்கள் ஒற்றுமையுடனும், உணர்வுடனும், மன்னனுக்கும் அவன் சொல்லுக்கும் கட்டுப்பட்டவர்களாகவே இருந்துவந்தனர். இருப்பினும் மன்னனுக்கு வேறு வகையிலான சிக்கல்கள் தன் குடும்பத்தினர் மூலமாகவே வர ஆரம்பித்தன.

வரகுண திருமாறன் அந்நாளைய பாண்டிய மன்னனின் தங்கை மகளான வல்லவள் மாதேவியை மணமுடித்த நாள் முதல் பாண்டிய சிற்றரசு என்ற நிலை நீங்கி தனியரசாகவே விளங்கத் தொடங்கியது கோரநாடு. மேலும் பாண்டியர்களின் தமிழவைப் பேராயத்தில் கோரநாட்டிற்கென நிரந்தர இடமும் வழங்கப்பட்டது.

கோரநாட்டுப் புலவர்கள் பாண்டிய நாட்டிற்கும், பாண்டிய நாட்டுக் கலைஞர்கள் கோரநாட்டிற்கும் வந்தும் மேலும் இரு நாடுகளுக்கிடையேயான தொழிற் பரிமாற்றங்களும் சிறந்த முறையில் நிகழ்ந்துவந்தன.

மன்னன் வரகுண திருமாறனுக்குப் புகழ் திருமாறன் என்ற மகனும் செல்வத்திருமகள் மற்றும் ராணிசந்திரிகா என்ற இரு மகள்களும் பிறந்தனர். இவர்களில் புகழ் திருமாறன் இளவரசனாக முடிசூட்டப்பட்டு பாண்டியகுலத்தில் பிறந்த யாழிசைவல்லியை மணமுடித்து ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தான்.

ஆகவே பாண்டியநாட்டிற்கும் கோரநாட்டிற்கும் இடையே இருந்து வந்த மன உறவுகளும், மண உறவுகளும் மாநிலமெங்கும் பெரிய அதிர்வலைகளை வீசிவந்ததை மறுக்க இயலாது. மேலும் புகழ் திருமாறன் பாண்டிய இளவரசன் அரிகேசரி மாறவர்மனின் நெருங்கிய நண்பனாகவும் இருந்து வந்தான். கோரமலைக்காடுகளில் ஒன்றாகச் சேர்ந்து அடிக்கடி வேட்டையாடி வரும் அளவுக்கு இரு இளவரசர்களும் சொல்லும் பொருளுமாகப் பிரியாதிருந்து வந்தனர்.

அதே நேரத்தில் மூத்த மகளான செல்வத்திருமகள் சேரநாட்டைச் சேர்ந்த வணிகனான மேகவர்மன் என்பவரை மணமுடிக்க விரும்பினாள். இதையறிந்த மன்னர் செல்வத்திருமகளுக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த மணமகனைத் தேட ஆரம்பித்தார்.

இந்தச் செய்தி புகழ் திருமாறனுக்குத் தெரிந்தவுடன் தன் நண்பன் அரிகேசரி மாறவர்மன் துணையோடு தன் தங்கை விரும்பிய மேகவர்மனையே மணமுடித்து வைத்தார். இந்நிகழ்ச்சி அரசரைப் பெரிதும் கவலையும் கோபமும் அடையச்செய்தது. நடந்து முடிந்த திருமணத்தைப் பெரும் அவமானமாகக் கருதியதால் பாண்டிய நாட்டுடன் சிறிது வெறுப்பும் கொண்டார். இருப்பினும் இரு நாட்டு இளவரசர்களிடையே எந்த வெறுப்பும் நிலவவில்லை. மாறாக இன்னும் நெருக்கம் கூடியது. செல்வத்திருமகளுக்கும் மேகவர்மனுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைக் கண்ட வரகுண திருமாறன் சற்றே மனம் நெகிழ்ந்து மேகங்கள் கூடிப் பொழிந்த பெருமழைநாளில் பிறந்த குழந்தை என்பதால் கார்மேகக்குழலி எனப்பெயரிட்டு வளர்த்துவந்தார்.

நிலைமை இவ்வாறிருக்க இளையமகளான ராணி சந்திரிகா ஆய கலைகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றுப் பாரோர் போற்றும் புகழ் மிக்க இளவரசியாகப் பரிணமித்து வந்தாள். ஒருமுறை வாதாபிக் கோட்டைத்திறப்பு விழா கலைநிகழ்ச்சிகளைக் காண சாளுக்கிய நாட்டிலிருந்து அழைப்பு வந்தபோது கோரநாட்டின் சார்பாக சாளுக்கிய நாட்டிற்குச் சென்றவள் அங்கே நாடகக் கலையில் சிறந்து விளங்கிய விஜயேந்திரனின் மேல் மையல் கொண்டாள்.

உரத்த குரலும், தடித்த புருவமும், உணர்ச்சிகளைக் குவித்து வெளிப்படுத்தும் கண்களும், நெடிய உருவமும், நெற்றி வகிடும், நேர்கொண்ட பார்வையும் கொண்டு கோபியர் கொஞ்சும் கோமகனாக சந்திரிகாவை சகல விதங்களிலும் மயக்கிவிட்டான் விஜயேந்திரன்.

அங்கிருந்த மூன்று நாட்களும் ஒவ்வொரு நாடகங்களிலும் வந்த நாயகன் நாயகியாகத் தங்களிருவரையும் வரித்து மனமகிழுமளவு இருவருக்கிடையில் மலரிடை மணம்போல மகளிர் குணம் போலக் காதல் வேகமாக வளர்ந்து வந்தது. பல கலைகளிலும் சிறந்து விளங்கிய விஜயேந்திரன் சந்திரிகாவை ஈர்த்தது பெரும் வியப்பிற்குரியதேயாகும். ஏனெனில் அவள் தன் மனதில் இதுநாள் வரையில் எந்த ஓர் ஆடவனையும் இருத்திடத் தலைப்பட்டதில்லை.

புதுமலர் பூத்த சோலையாக மாறிய அவள் மனம் கலைந்த கோலத்தால் ஒவ்வொரு நாளும் தன் ஒவ்வொரு அணிகலன்களால் பரிசென்ற பெயரில் பாச மழைக்குள் அவனை முழுவதும் நனைத்தாள். நேரடியாக ஒரு சொல்லும் கூறாத போதும் நெஞ்சில் அவனை நிறுத்திக் காதல்மொழிகள் பேசி வந்தாள். யாரொடுமேனென்ற காரணங்களேதுமின்றி முளைவிடு வேரே காதலன்றோ?

அனைத்து நிகழ்ச்சிகளும் இனிதே நிறைவுற்று சாளுக்கிய நாட்டிலிருந்து தன்நாடு திரும்பும் நேரத்தில் விஜயேந்திரனிடம் பார்வையிலேயே பிரியாவிடை பெற்றுப் பிரிய மனமின்றி ராணி சந்திரிகா தன் பட்டாளங்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தாள். மெல்லிருட்டு சூழ்ந்திருந்ததால் வண்டினங்களின் ஒலி இரைச்சலாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் அவளது மனமோ அதைவிடப் பெரும் பேரிரைச்சலுக்கு உள்ளாகி இருந்தது.

"கவனித்தாயா சந்திரிகா? அப்பப்பா. என்னை எப்படியெல்லாம் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தார் அவர். கண்களா அவை? குத்திக்கிழிக்கும் கூரம்புகள். பார்வையிலேயே என்னைப் பனித்துளியாக உருகவைக்கும் கதிரவன் கணைகள். இல்லை இல்லை காமன் கணைகள்.

அடிப் பைத்தியக்காரி. நாடகக் கலைஞர்கள் அனைவரும் பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் பார்ப்பது போலத்தானே நடிப்பார்கள். உன்னை மட்டும் தான் பார்த்தார் என எப்படித்தெரியும்?

அப்படியென்றால் நான் ஒவ்வொரு முறை என் அணிகலன்களை அவரிடம் அளித்த போதும் என்னையே தாரை வார்த்துக் கொடுப்பதை இன்முகத்துடன் பெற்றுக் கொண்டது போலக் கண்களால் காதல் புரிந்தாரே அது பொய்யா? இல்லை இறுதி நாளன்று நான் புறப்படுகிறேன் எனத் தெரிந்ததும் கண்களில் சோக முத்திரை திகழ சோர்வடைந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தாரே அது பொய்யா?

ஆனால் ஆசை இருந்திருந்தால் இப்படி அரையிருட்டில் அவரது நினைவுகளைச் சுமந்து கொண்டு நீ தனியே இந்தப் படைவீரர்களுடன் பல்லக்கில் செல்ல விட்டிருப்பாரா? ஆண்களெல்லோரும் ஆசைத் தீயை மட்டும் அணையாமல் ஏற்றிவிட்டு அதன்பிறகு ஏதும் பேசாமல் பேதை மனதை அலைக்கழிக்கும் கோழைகள் தானே. இவர்மட்டும் என்ன விதிவிலக்கா?"

என்றெல்லாம் மாறி மாறி மனங்குழம்பித் தனக்குத்தானே வருத்தமுற்றுக் கூடவே ஆறுதலும் கூறியவாறு வந்துகொண்டிருந்தாள்.

பல்லக்கில் அவளை வீரர்கள் சுமந்துகொண்டிருக்க அவளது மனமோ விஜயேந்திரனைப் பற்றிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டு வந்தபோது திடீரென எங்கிருந்தோ பாய்ந்து வந்த காட்டுவாசிக்கூட்டம் காட்டுமரங்களினூடே மறைந்திருந்து தாக்கத் தொடங்கினர். அத்தாக்குதலில் தங்களது போர்க்கருவிகள் பலனளிக்காது போகவே அவர்களின் விஷ அம்புகளில் சிக்கி எந்த எதிர்ப்புமின்றி உயிர் துறந்தனர் உடனிருந்த வீரர்கள்.

வேறு வழியின்றிப் பல்லக்கிலிருந்து வாள் கொண்ட கையுடன் ராணிசந்திரிகா வெளிவரும் வேளையில் அவளது இடையைக் கீறிச் சென்ற அம்பு உடையைக் கிழித்ததால் பளீரென்ற நிலவொளியை எதிரொளித்துக் கொண்டிருந்தது அவளது பொன்னிற இடை.

காட்டு மரங்களைப் பிளந்து கொண்டுவந்த இடிமுழக்கத்தைப் போன்ற பெரும் சிரிப்பொலியுடன் மரங்களின் மறைவிலிருந்து வெளிப்படத் தொடங்கினார்கள் சாளுக்கியக் காட்டுவாசிகள். யாரிவர்கள் ஏன் இங்கு வரவேண்டும் என்று சிந்திக்கக்கூடிய நிலையிலும் இளவரசி இல்லை.

கிட்டத்தட்ட இருபத்தைந்து பேர் சுற்றி வளைத்துக்கொண்டிருந்த நிலையிலும் சற்றே ஓர் இகழ்ச்சிப் புன்னகை வீசிக்கொண்டிருந்த அவள் பூநிலவு முகத்தைப் பார்த்ததும் அந்தக் கொடுங்கூட்டத்தின் தலைவனுக்குத் தன்னையறியாமல் கோபம் தலைக்கேறியது.

தன் கையிலிருந்த ஈட்டியை நீட்டி, கிழிந்த அவளது மேலாடையை மேலும் மேலே உயர்த்த எத்தனித்த போது மின்னலெனச் சுழன்ற அவளது வாள் அந்தக் கயவனது ஈட்டியைக் காட்டுக்குள் வீசியெறிந்தது. உடனே நாகமெனச் சீறிய பத்து வாட்கள் அவளது ஒற்றை வாளைச் சிதறடித்தன.

கையிலே எந்த ஆயுதமும் இல்லாத போதிலும் கண்களாலேயே எத்தனை பேரையும் எரித்துக் கொல்லும் துணிவு தெறித்துக் கொண்டிருந்தது அவள் முகத்தில். இருப்பினும் அவளைச் சூழ்ந்து நின்றவர்களில் ஒருவன் அவளது மேலாடையின் மேல் கைவைக்க நீட்டியபோது பாய்ந்து வந்த ஒரு வளையெறி அந்தக் கையை முறித்துப்போட்டு விட்டு வீசியவனிடமே திரும்பிச் சென்றுவிட்டது.

வளையெறி வந்த திசையை அனைவரும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த போது அதன் எதிர்த்திசையிலிருந்து மெல்ல நிதானமாக நடந்து வந்தான் விஜயேந்திரன். அந்த இருளிலும் சூரியன் எழுந்து வருவதைப் போல ஒளிவீசும் கண்களுடனும் வலிமிகுந்த தோள்களுடனும் மந்தகாசப்புன்னகையுடன் இரு கைகளிலும் வாளுடன் வந்து கொண்டிருந்தவனைக் கண்டதும் வழிவிட்டு நிற்பது போல் பிரிந்து நின்ற காட்டுவாசிக்கூட்டத்தினர் கையில் வாட்களுடன் அவனைச் சூழ்ந்துகொண்டனர் இப்போது.

நின்ற இடத்திருந்தே ஒவ்வொரு வாளாகப் பறக்கவிட்ட விஜயேந்திரனோடு ஈட்டியொன்றை ஏந்திக்கொண்டு அவனது நண்பன் சகாதேவனும் இணைந்துகொண்டான். அத்தனை பேரையும் புரட்டி எடுத்துக் காயங்களுடன் விரட்டிவிட அதிக நேரம் பிடிக்கவில்லை அவர்களுக்கு.

இப்படியொரு சூழ்நிலையில் எதிர்பாராது வந்த அவனது முகத்தைக் கண்ட மகிழ்ச்சியில் பேசவொரு சொல்லுமின்றி நன்றியுடன் அவனை எதிர்நோக்கினாள் இளவரசி. அதனைச் சிறு புன்முறுவலுடன் கடந்துவிட்டு அவளுக்கொரு மேலாடையை தந்து விட்டு வேறேதும் பேசாமல் குதிரையைப் பயணத்திற்குக் கிளப்பினான் விஜயேந்திரன்.

ஆளுக்கொரு குதிரையில் வந்திருந்த அவர்களிருவரும் தாமதிக்காமல் அந்த இடத்தைவிட்டு நீங்கி வேகமாகப் பயணம் செய்யத் தொடங்கினர். தனிக்குதிரையில் ஏறாது விஜயேந்திரனின் குதிரையிலேயே இளவரசியும் அமர்ந்துகொள்ள காடு மலைகள் என மேலும் ஐந்து முழு நாட்களை எடுத்தது அப்பயணம்.

ஆனால் அவனது அருகில் அமர்ந்து வந்த அவளுக்கு அரை நாழிகை நேரம் போல அவ்வளவு வேகமாகக் கழிந்தது. இடையிடையே ஓய்வெடுத்த இடங்களில் நடந்த ஒவ்வொரு இன்பநிகழ்வுகளும் சந்திரிகாவின் மனதை அசைபோடத் தூண்டின. அதன் விளைவாகப் பயணக்களைப்பு எதுவும் நிகழாத பனிமலராய் வந்து சேர்ந்தாள் இளவரசி.

நாடு வந்தடைந்ததும் நேரே மன்னனிடம் சென்று நடந்ததைக் கூறியபின் வரகுண திருமாறன் மனமகிழ்ந்து அவ்விருவரையும் தங்களது விருந்தினர் மாளிகையிலேயே தங்கவைக்க ஏற்பாடு செய்தான். இருப்பினும் அவ்விருவர் மீதும் ஒரு கண் வைக்கவும் தவறவில்லை அவன்.

அதே நேரம் ஏதோ ஒரு இளவரசன் காட்டுவாசிகளிடம் போர்புரிந்து இளவரசியைக் காப்பாற்றியதாகவும் அவனையே மன்னர் தன் மகளுக்கு மணமுடித்து வைக்க இருப்பதாகவும் வதந்திகள் நாடெங்கும் பரவின.

தன் முதல் மகள் வணிகனுக்கு மனைவியானதால் மனம்வெதும்பிப் பின் குழந்தை பிறந்ததும் தன் மனதை ஆசுவாசப்படுத்திட்டுக் கொண்ட மன்னன் இப்போது இரண்டாவது மகளும் ஒரு கூத்துக் கலைஞனை விரும்பியது கண்டு மனம் நொந்து மகள் மேலிருந்த பாசத்தின் காரணமாக அதனை வெளிக்காட்டிக்கொள்ள இயலாமல் அதனாலேயே நோய்வாய்ப்பட்டார்.

அதனால் ஆட்சிப் பொறுப்பை இளவரசர் புகழ் திருமாறனிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுப் பதவியேற்பும் நடந்தேறியது. இந்த நிலையில் எளிமையான முறையில் இளவரசி ராணிசந்திரிகாவுக்கும் விஜயேந்திரனுக்கும் திருமணமும் ஒருபுறம் இனிதே நிறைவேறியது.

நோய் முற்றிய நிலையில் மன்னர் வரகுண திருமாறன் சில மாதங்களில் மரணமடைய ஆட்சிப் பொறுப்பு முழுமையும் புகழ் திருமாறனிடமும் அவனது அரசவையிடமும் வந்தது. மைத்துனனே மன்னன் என்பதால் விஜயேந்திரனும் அவனது நண்பன் சகாதேவனும் அரசு நிர்வாகங்களில் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஈடுபட ஆரம்பித்தனர். இவையனைத்தும் மன்னனுக்குத் தெரியுமென்றாலும் பேரரசின் மருமகன் என்பதால் கண்டும் காணாதது போலவும் அதே நேரத்தில் குடிமக்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்ப்பதிலும் கவனம் செலுத்தி வந்தான்.

இதே நேரத்தில் விஜயேந்திரனுக்கும் சந்திரிகாவுக்கும் ஒரு அழகிய ஆண்குழந்தையும் பெண் குழந்தையும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தன. முறையே கரம்பத் திருமாறன் மற்றும் மதுரமதி எனவும் பெயரிடப்பட்ட அவ்விரு குழந்தைகளும் கோரநாட்டு அரச குடும்பத்தின் புதுவரவுகளாக வளர்க்கப்பட்டனர்.

இவ்வாறாக மூன்று தம்பதிகளும் இன்பமும் இனிமையுமாக வாழ்ந்து வந்த வேளையில் வடநாட்டிலிருந்து வந்து சேர்ந்தார் வடமலை அல்லிமுனி என்றழைக்கப்பட்ட துறவி. வடநாடுகள் பலவற்றிலும் அவர் சுற்றித் திரிந்திருந்தாரேயாயினும் கடந்த சில வருடங்களாகவே சாளுக்கிய நாட்டில் அவர் தங்கியிருந்து சமண மதத்தைப் பரப்பும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

சாளுக்கிய நாட்டு மன்னனையே சமண மதத்திற்கு மாற்றி விட்டதால் பிறகு மக்களை மதம் மாற்றுவதில் யாதொரு குழப்பமும் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். அவர் சாளுக்கிய நாட்டிலிருந்த நேரத்தில் சகாதேவனின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர்.

அல்லிமுனி கோரநாட்டிற்கு வந்த மறுநாளே மன்னனை சந்தித்து நாட்டில் துஷ்டசக்திகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால் கோரவனத்திற்குச் சென்று பூஜை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். புகழ் திருமாறனும் வரகுணன் மறைந்து மூன்று மாதங்களானதால் அரசகுடும்பத்தினர் அனைவரும் கோரவனத்தில் உள்ள அரசர் குலம் மட்டும் தலைமுறை தலைமுறையாக வழிபடுகின்ற பகவதி அம்மனை வணங்கிட முடிவு செய்தார்.

இவ்வாறாக நடந்த நிகழ்வுகளை எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்த கழுகானது அம்முயலைக் கவ்விக்கொண்டு மலையுச்சியிலிருந்த தன் கூட்டிற்குப் பறந்து சென்றது. கொழுத்த இரையுடன் பறந்து வந்த கழுகைக் கண்ட கழுகுக் குழந்தைகள் மகிழ்ச்சியில் உரத்த குரலுடன் வரவேற்றன. அனைத்துக் குஞ்சுகளும் தங்களுக்குள்ளாகப் பெருங்கழுகு கொண்டுவந்த இரையைப் பகிர்ந்து உண்டு முடிக்கையில்தான் அக்கழுகு கவனித்தது தன் குஞ்சுகளின் எண்ணிக்கையில் குறைவு வந்ததை.

பொதுவாகக் கழுகு இனங்களில் பெரிய குஞ்சுகள் பிற குஞ்சுகளைப் பசி நேருகையில் கொன்றுண்ணும் வழக்கமான நிகழ்வுதான் இது என்ற போதிலும் தான் வாழவேண்டும் என்பதற்காகத் தன்னைச் சார்ந்தவர்களையே கொன்று வீழ்த்தும் மனிதர்களின் துரோக மனங்களின் கொடூர குணம் கண்முன் வந்துபோகவே அந்த ஆடி அமாவாசை நாளை எண்ணிப்பார்க்கத் தொடங்கியது.

Continue Reading

You'll Also Like

89 4 2
கி.பி 1750 ஆண்டு- " வனமலை உங்களை அன்புடன் வரவேற்கிறது " என்ற பெயர் பலகையை பார்த்ததும், அந்த வழிப்போக்கன், குதிரை கடிவாளத்தை கெட்டியாக பிடித்து கொண்ட...
738 8 1
உறவின் அழகிய தேடல்..
220 5 1
அவனின் அவள்
23 0 1
பொன்னியின் செல்வன் கதையை பின் தளமாக வைத்து அதை தொடர்ந்து நான் எழுதுவது இந்த கதை "புலிக்கொடி வேந்தன்".. வந்தியத்தேவன் என்ன ஆனான்... அருள்மொழி வர்மர் எ...