4. குழந்தைகள்

29 4 5
                                    

அங்கே சிசுவை மார்போடு அணைத்து நின்றிருந்த பெண்ணொருவள்  சொன்னாள், "குழந்தைகளைப் பற்றி எங்களுக்குக் கூறுவீராக".

அதற்கு அவர்:

உங்கள் குழந்தைகள் உங்களுடைய குழந்தைகள் அல்ல.

அவர்கள், வாழ்வு  தன்னைத்தானே நிகழ்த்திக் கொள்ளும் பேரவாவின் மைந்தர்களும் மகள்களுமாக இருக்கிறார்கள்.

அவர்கள் உங்கள் வழியாக வந்தார்களே தவிர உங்களிடமிருந்து வரவில்லை,

எனவே அவர்கள் உங்களுடன் இருப்பினும் உங்கள் உடைமை ஆவதில்லை.

நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பைத் தாருங்கள், உங்கள் எண்ணங்களை அல்ல,

ஏனெனில் அவர்களுக்கு என்று சுயசிந்தனை உண்டு. அவர்கள் உடலுக்கு  உங்கள் இல்லம் அடைக்கலம் தரலாமே தவிர அவர்கள் ஆன்மாவுக்கு அல்ல,

அவர்கள் ஆன்மாவோ, நாளை எனும் இல்லத்தில் வாசம் செய்வது,  கனவிலும் உங்களால் அங்கே செல்ல இயலாது.

நீங்கள் அவர்களைப்போல இருக்க விழையலாம், ஆனால் அவர்களை உங்களைப் போல் ஆக்க எண்ணாதிருங்கள்.

ஏனெனில் வாழ்க்கையோ பின்னோக்கி செல்வதில்லை மேலும் அது நேற்றைய பொழுதில் நீடிப்பதில்லை.

உங்கள் குழந்தைகள் முன்னோக்கிப்  பாயும் அம்புகள்,  நீங்கள் அவர்களைச் செலுத்தும் வில்.

மகத்தான வில்லாளி ஒருவன் முடிவிலியின் பாதையில் ஒன்றைக் குறிவைத்து, அம்புகள் விரைவாகத் தூரங்களைக் கடக்கும் பொருட்டு,
தன் வல்லமையால் உங்களை வளைக்கிறான்.

அவ்வில்லாளியின் கைகளில் நீங்கள் மகிழ்ச்சியோடு வளைந்து கொடுப்பீராக;
ஏனெனில் அவன் பறந்து செல்லும் அம்பை நேசிப்பது போலவே குறி தவறாத ஸ்திரமான வில்லையும் நேசிக்கிறான்.

You've reached the end of published parts.

⏰ Last updated: Jul 28, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

தீர்க்கதரிசிWhere stories live. Discover now