எறும்பு வந்துரும்

89 14 45
                                    

சமையல் கட்டிலிருந்து ஈரம்படிந்த கைகளை தன் கால்களின் முட்டிவரை தள்ளாடிய wrap around skirtஇல் துடைத்தவாறு கூடத்தை அடைந்தாள் அபூர்வா.

கூடத்தின் ஓரத்தில் கால்கள் மடித்து அமர்ந்திருந்தது குட்டி கௌன் போட்ட, உச்சி மண்டையில் ஒற்றை கொண்டையோடான அந்த உருவம்.

புருவ நெறிப்பிலுடனான சிரத்தையோடு தன் சின்ன, மெத்தென்ற விரல்களால் அந்த அகண்ட எவர்சில்வர் கிண்ணத்தை கவனமாய் பற்றியிருக்க தன் முன்னால் படுத்துக்கிடந்த கோல்டன் ரெட்றீவரிட்ஃம் நீட்டியபடி, அதனிடம் எதையோ சொல்லிக்கொண்டிருந்த தன் அண்ணன் மகள் துனியை அப்பு கவனித்தாள்.

துனி அந்த கிண்ணத்தில் மீந்திருந்த சாதத்தினை கோல்டன் ரெட்றீவதின் முகத்தில் நீட்டி அதனோடு பேசி கொண்டிருந்தாள்.

"இட்லி, இது உனக்குதான். சாப்டு," என்றாள் அதனை பார்த்து.

கோல்டன் ரெட்றீவரின் பெயர் தான் இட்லி. வைத்தது துனி தான். அதற்கு பெயர் வந்த கதையும், காரணமும் மற்றொரு snippetஇல்.

இட்லியோ சிறிதும் ஆர்வமில்லாது கிண்ணத்தை கண்டுகொள்ளாது, தலையை திருப்பிக்கொண்டான்.

சின்ன முறைப்போடு எழுந்த துனி, அவன் தலையை திருப்பிக்கொண்ட பக்கத்திற்கு திரும்பி அமர்ந்தாள். "உனக்கு அது போதுமா? பசிக்காதா?"

மீண்டும் பழைய படி தலையை திருப்பினான் இட்லி. சாப்பிடச்சொல்கிறாளே என்ற அலுப்போடு.

துனியின் சின்னஞ்சிறு முகத்தில் இருந்த முறைப்பு இப்போது ஆழ்ந்த அச்சானது. எழுந்து கொண்டவள் அந்த கிண்ணத்தை ஏந்தியவாறு அப்பூவிடம் சென்றாள்.

"அப்பு அத்தை!" மெல்லிய ஆனால் அழுந்திய குரல். "இட்லி சப்டலை!"

அப்பு குனிந்து துனியின் கைகளில் இருந்த கிண்ணத்தை வாங்கிய நேரம் சமையல் உள்ளிருந்து வெளிபட்டாள் துனியின் அம்மா ஶ்ரீ.

அத்தையும், பெறாமகளும் எதையோ பேசிக்கொண்டிருப்பதை பார்த்துச் அவர்களை நெருங்கியவளின் ஈரக்கை லேசாக துனியின் தலையின் கோதியது. "இட்லி இப்போ சாப்டலையானா அப்பறமா சாப்டுவான், கண்ணம்மா. நீ இதை அங்கேயே வெச்சுடு, அவன் பக்கத்திலேயே!" என்றாள்.

"ஐயோ, அப்படியே வெச்சா எறும்பு வந்துரும்!" அப்பு பதற்றமாய் சொன்னாள்.

இத்துனூண்டாய் பிளந்திருந்து மெல்லிய ஆச்சரியம் கலந்த ஒரு சிரிப்பு வெளிபட்டது, நிமிர்ந்து அப்பு அத்தையையும் அம்மாவையும் பார்த்து கொண்டிருந்த துனியின் முகத்தில்.

"ஐ! ஜாலி! அப்போ எறும்பு சாப்டும்ல?" என்றது அந்த குட்டி வாய்.

இப்படிப்பட்ட ஒரு பதில் துனியிடம் இருந்து வருவது புதிதல்ல. இது ஶ்ரீக்கு பழக்கப்பட்ட ஒரு perspective. மகளின் எண்ணங்களை கண்டு சில நேரங்களில் எப்படி கண்ணம்மா உனக்கு இப்படி பேச தெரிகிறது என்று அவளை கட்டியணைத்து, உச்சி முகர்ந்து முணுமுணுத்துக்கொள்வாள்.

அதற்கு துனியோ ஒவ்வொரு முறை ஒவ்வொரு பதில் சொல்வாள். ஒரு முறை, பேசினா தெரியுமாம்மா? பென்சில்ல எழுதினா தானே தெரியும்? பேசினா ரப்பர் வெச்சு அழுச்சா மாறி இருக்கும், என்றாள். ஐந்து வயது இப்படி பேசுமா என்று பார்த்திருந்தாள் ஶ்ரீ.

அன்றிரவு துனி உறங்கிப்போன பிறகு, அப்பு ஶ்ரீயிடம் சொல்லியிருந்தாள். "நம்மலாம் எறும்பு வந்துருச்சுன்னு தானே சொல்லுவோம்! துனி மட்டும் ஐ! எறும்பு சாப்டும்னு சொல்றா... எப்படி ஶ்ரீ?"

"எம்பொண்ணு தான் பதில் இல்லாத கேள்வியெல்லாம் கேக்கறான்னா... நீயும் இப்படி கேக்கறியே அப்பு... நான் என்ன சொல்லுவேன்?"

Kamu telah mencapai bab terakhir yang dipublikasikan.

⏰ Terakhir diperbarui: Apr 15, 2020 ⏰

Tambahkan cerita ini ke Perpustakaan untuk mendapatkan notifikasi saat ada bab baru!

கதை கதையாம் காரணமாம் Tempat cerita menjadi hidup. Temukan sekarang