கோரநாடு- 5. அரசியல் நரபலி

Start from the beginning
                                    

அதற்குள்ளாகப் பின்புறமுள்ள வழியின் வழியாகவும் காபாலிகர்கள் உட்புகத்தொடங்கியதும் மேகவர்மன் உடைவாளை உருவிக்கொண்டு அவர்களை நோக்கிப் பாய்ந்தான். வணிகத் தொழில் புரிந்துவந்தவன் என்றபோதிலும் வேணாட்டுப் படைத்தளபதிகளில் ஒருவராக வழிவழியாக வந்த தலைமுறை என்பதாலும் அனைத்துப் போர்முறைகளையும் சிறு வயதிலேயே கற்றவன் என்பதாலும் எதிர்ப்பட்டவர்களை ஒவ்வொருவராகத் தன் வாளுக்கு இரையாக்கிக் கொண்டே முன்னேறிச் சென்றான்.

சிறிது நேரத்தில் போரிட்டுக் கொண்டே குகையை விட்டு முற்றிலும் வெளியே வந்ததும் குகைக்கு வெளியே வைக்கப்பட்ட தீ மெல்ல மெல்ல உள்ளேயும் எரியத் தொடங்கியதைக் கண்டபிறகுதான் அவர்களை விட்டுவிட்டு வெளியே வந்தது எத்தகைய பெருந்தவறு என உணர ஆரம்பித்தான்.

அரசனையும் அரசியையும் பாதுகாப்பதற்காகத் தன் கையிலிருந்த குழந்தையை அல்லிமுனியிடம் கொடுத்து அவரைத் தப்பிச் செல்லவிட்டு உள்ளே நுழைந்த காபாலிகர்களைத் துணிச்சலுடன் எதிர்த்துப் போராடத் துவங்கினாள் செல்வத்திருமகள். இந்த ஆசுவாசத்தைப் பயன்படுத்தி அல்லிமுனி கையில் குழந்தையுடன் வெளியே தப்பித்து ஓடிவந்தார்.

குகைக்கு வெளியே நின்றிருந்த பாதுகாவலர்கள் அனைவரும் எதிரிகளால் முற்றிலுமாகக் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு முன்பே இளவரசனைத் தூக்கிக் கொண்டு போன மேகவர்மனும் காபாலிகர்களால் கொல்லப்பட்டிருப்பார் என உணர்ந்து கொண்டதால் தன் உயிரைத் தற்காத்துக் கொள்ள வனத்திற் புகுந்து மறைந்தார்.

அவரைத் துரத்திப் பிடித்துவர ஒரு நான்கு பேரை மட்டும் அனுப்பிவிட்டு கோவிலுக்கு முற்றிலுமாகத் தீ வைத்துவிட்டுப் பின்புறக் கதவையும் அடைத்துவிட்டு வந்த வேலை முடிந்த மகிழ்ச்சியில் பெரிதாய் இடி இடியெனச் சிரிக்கத் தொடங்கினான் அந்தச் சதிகாரக் குழுவின் தலைவன்.

வழக்கமாக நரபலி கொடுப்பதில் பெரு விருப்பம் கொண்ட காபாலிகர்கள் இந்த முறை அரசபலியே கொடுத்ததால் கொக்கரிக்கத் துவங்கினர். இதற்குள் முக்கால் நாழிகை முடிந்தபோதும் வெளிவர வழியின்றி இருபுறமும் அடைக்கப்பட்ட கோவிலுக்குள் நெருப்பின் கனலிலும் புகையிலும் சிக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் துறந்தனர் புகழ் திருமாறனும் அவன் மனைவி யாழிசைவல்லியும். குகைக்கு வெளியே நடந்த நிகழ்வுகளை அறியாமல் தன் மகளையும் கணவனையும் அவர்களுக்கெல்லாம் மேலாக இந்த நாட்டின் இளவரசனையும் காப்பாற்றிய பெருமிதத்தில் வீரமரணமடைந்தாள் செல்வத்திருமகள்.

ஒருவழியாக சதிகளால் பின்னப்பட்ட சிலந்திவலைக்குள் சிக்கிய சிறு பூச்சிகளின் அகால மரணத்தைப் போல பூஜை என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் அரசியல் நரபலியை எண்ணிப் பெருமூச்சுவிட்டவாறே அந்த மலைப்பகுதியின் ஒரு பகுதியைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியது அக்கழுகு...

கோரநாடுWhere stories live. Discover now