கோரநாடு- 4. சதியரங்கம்

Start from the beginning
                                    

சில நேர அமைதியை அல்லிமுனி கலைக்கலானார். "இளவரசே! தாங்கள் கோபப்படுவது நியாயம்தான் என்றாலும் தளபதி கூறுவதிலும் பொருள் உள்ளது என்பதைத் தாங்கள் மனதில் இருத்த வேண்டும். முட்டாள் தனம் நிறைந்த இடங்களில் கலவரமும் போராட்டங்களும் நிகழும். அதேபோன்ற மனநிலையில் தான் மக்களும் உள்ளனர். நம் ஒற்றர்கள் தெரிவித்திருப்பதும் அதுவே. ஆகவே இந்த நிலையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டி உள்ளோம்."

"அப்படியென்றால் முன்பே தாங்கள் ஒரு முடிவெடுத்துவிட்டீர்?" என வினவினான் கரம்பன் மெல்லிய நகைப்புடன்

"நான் மட்டுமல்ல. நாங்கள் எல்லோரும்."

"எல்லோருமா? என்ன முடிவு?"

"இளவரசே! தாங்கள் அறியாததல்ல. இந்நாட்டைச் சேர்ந்த ஒரு மன்னன் மறைந்ததும் அவரது வழித்தோன்றல் அரியாசனம் ஏறுதல் வழக்கம். ஆயினும் கோரநாட்டைச் சார்ந்த ஐந்து சிற்றரசுகளின் அரசர்களில் நால்வர் தங்கள் பதக்கங்களைச் சேர்த்து அதை ஆரமாக்கி ஐந்தாவது அரசரது பதக்கத்தை நடுவிலிட்டு அதை புதிய மன்னனின் கழுத்தில் அணிவிக்கவேண்டும். இதுவே ஐம்பேராயம் அணிவிக்கும் வழக்கமாகும். ஆக நமது சிற்றரசர்களான கொடுங்கண்ணான், கோட்பறையான், அமுதமறவன் மற்றும் தனிக்கோவேள் ஆகிய நால்வரும் மறைந்த நம் மன்னரது வாரிசு அதாவது தங்களைத் தம் மன்னராக ஏற்று இவ்வைம்பேராய வழக்கத்தை நிறைவேற்றுதல் அவசியமாகும். ஆனால் மன்னரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அனைவரும் நம்புகிறார்கள். ஆகவே மக்களுக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட ஐயத்தை நிவர்த்தி செய்து ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டியது தங்கள் கடமை. ஏனெனில் நம் நாட்டின் அரசன் யாராக இருப்பினும் மக்கள் துணை மிகுந்த அவசியம்." என்று முடித்தார் அல்லிமுனி.

"சந்தேகங்கள் எப்படிக் கிளம்புகின்றன என்றறிவீரா மகாமந்திரியாரே?" என்று ராஜகீர்த்தி ஆச்சாரியாரை வினவினான் கரம்பன் கழுத்தை அவர்புறம் திருப்பாமல் கண்களை மட்டும் சுழற்றி.

கோரநாடுWhere stories live. Discover now