வான் சுற்றும் திங்கள் இன்றும் அவளை பிரிய மனமே இல்லாமல், இயற்கை அன்னைக்கு அவளது முகத்தை தன்னுடைய கதிர்கள் மூலம் மிளிரச் செய்ய,

என்ன திங்கள்... அவள் அழகு அந்த திங்களையே விழுங்கிவிட்டது. வெண்ணிறமாய் மிளிரிய கன்னங்கள், உதட்டு சாயம் பூசாத அவளது செவ்விதழ்களை எடுப்பாய் காட்ட, பூங்காற்று அவள் தேகத்தையும் இதழ்களையும் வருடிச் செல்ல, சிலிர்த்து அடங்கியது அவள் மேனி.

மங்கையவளின் மேனியை கடந்து சென்ற தென்றலுக்கோ அத்தனை கர்வம். அவளை உரசி சென்றதோடு இல்லாமல், தன்னுடைய தொடுகைக்கு சிலிர்க்கவும் செய்த குதூகலத்தோடு துள்ளி ஓடியது. எழிலாய் உலகம் மறந்து அமர்ந்திருந்தவள் கால்கள் மரத்துப் போயிருக்க, அருகே இருந்த மரத்தினை பிடித்து இரண்டு அடி நொண்டியபடியே நடந்து ரத்த ஓட்டத்தினை சீராக்க முயன்றாள்.

ஓரளவிற்கு ரத்தம் கால்களில் பாய்ந்திருந்தாலும், இன்னமும் கால்கள் இருப்பதன் அடையாளமே இல்லை. கால்களை முன்னும் பின்னும் ஆட்டி ஆட்டி பார்க்க, ஒன்றுமே தெரியவில்லை. ஆனால் அதையும் ரசித்தவள், மீண்டும் அப்படியே அமர்ந்து கால் சட்டையை தூக்கி, கால்களைப் பார்த்தவள் இதழ்களில் சிரிப்பு வர, ஒற்றை விரலை வைத்து அழுத்த, ஏதோ உயிரற்ற பொருளை தொடுவது போல் உணர்ச்சியே இல்லை.

மீண்டும் அழுத்தி பார்க்க, கால்களின் உள்ளே ஏதோ மீன் ஊறுவது போல், மெல்ல உணர்வு பெற்று கூச்சம் உண்டானது. வாயினை திறந்து சத்தமில்லாமல் சிரிக்க, மீண்டும் அதையே செய்து மறுபடியும் சிரிப்பு வர, அந்த உணர்வை பகிர தன்னிச்சையாக பக்கம் திரும்பி பார்த்தாள்.

ஊத காற்றும் காய்ந்த இலைகளும் மட்டுமே சுழன்று கொண்டு தன்னுடைய இருப்பைக் காட்ட, கண்களில் மின்னி மறைந்த அந்த வெறுமை, இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது ஒரே நொடியில்.

நேர அலைப்புறுதலுக்கு பிறகு மெதுவாக வெளியே வந்தவள், அங்கு நின்ற தன்னுடைய வாகனத்தை எடுத்து மீண்டும் சென்னை மாநகரை நோக்கி பயணப்பட்டாள். குறைந்தது அரை மணி நேரமாவது பயணிக்க வேண்டும், சென்னை மாநகரை அடைவதற்கே. அத்தனை தொலைவில் இருக்கும், அவள் இருந்த அவ்விடம்.

அலைபாயுதே (Completed)Where stories live. Discover now