உச்சி மண்டையைக் குறிவைத்து ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொண்டிருந்த பகல் வெயில் மங்கி கொஞ்சம் இதமாகியிருந்தது காலநிலை. அளவாக வீசிக் கொண்டிருந்தது கடற்காற்று. அலைகளின் அசைவும் சாதாரணமாக இருந்தது.

ஒன்றரை நிமிட நடைக்குப் பின் கடற்கரையின் மையத்துக்குச் சென்று நின்றார் ஆஸிமா. ஏதும் பேசாமல் கடலையே பார்த்தவாறு கைகட்டி நின்றிருந்தவர் அவ்விடத்திலே அமர்ந்து முழங்கால்களைக் கைகளால் கட்டிக்கொள்ள, பக்கத்தில் அவருடன் சேர்ந்து தானும் அவ்வாறே அமர்ந்து கொண்டாள் ஆலியா.

வார நாளாதலால் அங்கே ஒருவரும் இருக்கவில்லை. சற்றுத் தூரத்தில் குடிசைவீட்டு சிறுவர்கள் தங்கள் பொலித்தீன் பைக் காற்றாடிகளில் நூல்கட்டிப் பறக்க விட்டவாறு கதைத்துக்கொள்ளும் அரவம் மட்டுமே இதர இயற்கை ஒலிகளுடன் சேர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. பிரதான வீதியில் பெரிதாக எந்த சந்தடியுமின்றி சில வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருந்தன. நடைபாதைகளில் ஆங்காங்கே மனிதர்களும். ஆக, சுரத்தில்லாத, மப்பும் மந்தாரமுமான ஒரு சூழலே அங்கு நிலவியது.

இருவரது முகங்களும் தம் முன்னே நெளிந்து கொண்டிருந்த கடலையே நோக்கியவாறு இருந்தன. யாரும் வாய் திறந்து பேசக் காணோம். மௌனமே அவர்களுக்கு இடையில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தது.

அவர் ஏதாவது பேசுவார் பேசுவாரென்று எதிர்பார்த்துக் காத்திருந்தவள் கடற்கரை மணலில் தன் ஆட்காட்டி விரலால் வார்த்தைகள் செதுக்கிக் கொண்டிருந்தாள்.

என்றுமில்லாதவாறு தன் தாய் வீட்டிற்கு இவ்வளவு சீக்கிரமாக வந்தமையும் வழமைக்கு மாறாக நடந்து கொண்டமையும் அவள் மூளைக் குளத்தின் அடியிலுள்ள மண்ணை சுண்டி அவளை முழுவதும் குழப்பிவிட்டிருந்தது.

நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள் அந்தக் கடற்கரை மணலில் எல்லாருமாய் அமர்ந்து உறவுகளுடன் கதைபேசி கடக்கும் நொடிகளை மனதாற ரசிப்பதுபோலப் பல தடவைகள் கற்பனை செய்துகொண்டு அதே கற்பனையில் தனக்குத்தானே மகிழ்ந்துகொண்டு ஆறுதலடைந்து கொள்ள முயன்றுள்ளாள். முதல் தடவையாக ஆஸிமாவுடன் வந்து இவ்வாறு அமர்ந்திருக்கின்றமை அதனைத்தான் ஞாபகப்படுத்தியது ஆலியாவுக்கு.

தென்றலே தழுவாயோ..?Место, где живут истории. Откройте их для себя