இறகாய் இரு இதயம்

By d-inkless-pen

8.7K 391 526

வாழ்வில் மறக்க முடியாத பதின் பருவ காதலை பேசும் கதை தான் இது, இறக்கை முளைக்கும் வயதில் இறகாய் பறக்கும் இரு இதய... More

முன்னுரை
கலைந்த கனவு
மை விழி தீண்டல்
பார்வையின் ஸ்பரிசம்
அறிந்தும் அறியாமலும்

வார்த்தை விளையாட்டு

549 26 26
By d-inkless-pen

"அம்மா போதும்மா..."

“ரெண்டு தாண்டி சாப்பிட்ட, நீ வாயாடுறதுக்கே அது போதாது..” மேலும் இரண்டு இட்லியை ஜனனியின் தட்டில் போட்டபடி நகன்றாள் அவள் தாய்.

“ராஜி வேற வாசல்ல நிக்குறாம்மா.. சொன்னா கேக்க மாட்டியே..” மாத்திரை போல இட்லியை முழுங்கியவாறே முனகினாள் ஜனனி.

“ஏன்டி சாயங்காலம் சீக்கிரம் வந்துடுறியே.. பக்கத்தாத்து மாமி பாட்டு கிளாஸ் வச்சுருக்காளாமே.. போயிட்டு வாயேன்... அக்கம் பக்கத்து வீட்டு பொடுசுங்க எல்லாம் போறதுகள்..”

“பாட்டா... அதெல்லாம் எனக்கு வராதும்மா..”

“வராதுன்னு தான் போக சொல்றது.. நாளை பின்னே மாப்பிள்ளை ஆத்துக்காரா பாட சொன்னான்னா பேந்த பேந்த முழிக்க கூடாதோன்னோ?”

“அவா ஏன் பாட சொல்றா.. இப்போதான் டிவி எல்லாம் இருக்கே.. அதுல கேட்டுண்டு போகட்டும்..” கடைசி இட்லியை விழுங்கி தண்ணியை குடித்து முடித்தாள்.

“பொண்ணுன்னா இதெல்லாம் தெரியனும்டி..”

“ஓஹோ.. அப்போ நானும் பையனை ஜாக்கிசான் மாதிரி பல்டி அடிக்க சொல்லேன்..” என்றவள் தேடிய புத்தகங்கள் அகப்பட்டதும் சிட்டாய் பறந்தாள். தொலைவில் அவள் தாய் “பெருமாளே இவளை வச்சுண்டு என்னென்ன அவப்பெயர் வாங்க போறோமோ..” என பகவானுக்கு தந்தி அடிப்பது பாதி கேட்டது.

“எவ்ளோ நேரம்டி நிக்குறது.. சீக்கிரம் வர மாட்டியோ?” சிலுத்துக்கொண்டாள் அவள் தோழி ராஜி.

“விடு விடு.. கொஞ்சம் தான் லேட் ஆச்சு.. ஆமா இன்னைக்கு டெஸ்டுக்கு படிச்சுட்டியா?” லாவகமாக பேச்சை மாற்றி தப்பிக்கொண்டாள் ஜனனி.

பேசிக்கொண்டே சிறிது தூரம் கடந்திருப்பர். தேர்வை பற்றி தொடங்கிய பேச்சு, புலம்பலாகி, புலம்பல் தேம்பலாக மாறும் வேளை, தொலைவில் எதேச்சையாக பார்த்தவளது முகம் லேசாக மாறி போக அதனை இனம் கண்டுக்கொண்டவளாக ராஜி, “ஏய், நான் இங்க புலம்பிட்டு இருக்கேன், அங்க என்னத்த பாக்குற?”

“நான் சொன்னேன்ல.. அந்த பையன் அங்க நிக்குறாண்டி...”

“ஓ.. அந்த புது பையனா.. யாருடி இதுல.. ரெண்டு மூணு பேரு நிக்குறாங்க...”

“அந்த மாங்கா மணி பக்கதுல கருப்பு சட்டை போட்டுருக்கான் பாரு..”

" பரவாயில்ல.. பாக்க ஆளு நல்லா தான் இருக்கான். "

“ஆமா.. போய் அவனுக்கு அவார்ட் குடு.. நீ வேற.. இவன் எங்க போனாலும் வந்துடுறான்.. என்னைக்கு இவனால வீட்ல அடி வாங்க போறேன்னு தெரியல..” பேசி கொண்டிருக்கையில் தொலைவில் தெரிந்தவன் இப்போது மிக அருகில் வந்திருந்தான். அதாவது இவர்கள் வந்திருந்தார்கள். ‘பரவால்ல.. பாக்க நல்லாதான் இருக்கான்..’ என மனதுக்குள் மட்டும் சொல்லிக்கொண்டாள் ஜனனி.

“கிட்ட வந்துட்டோம்.. எக்காரணம் கொண்டும் தலையை அவன் பக்கம் திருப்பிடாத என்ன...” என எச்சரித்தாள் ஜனனி.

“நான் ஏன்டி பாக்க கூடாது.. உனக்கு தானே பிரச்சனை?”

“லூசு.. நீ பாத்தாலும் நான் சொல்லித்தான் பாக்குறன்னு நினச்சுப்பானுங்க இவங்கெல்லாம்...  வந்துட்டோம்... வந்துட்டோம்.. ரெடி...” இருவரும் ஒரே நேரத்தில் தலையை தரையில் ஆணி அடித்தது போல மண் பார்த்து நகர, அந்த புதியவனோ இவர்களை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் எழுந்து சென்று விட்டான்.

“என்னப்ல.. பாப்பான்னு சொன்ன.. அவன் பாட்டுக்கு போயிட்டு இருக்கான்” என ராஜி கிசுகிசுக்க, “இது ஒரு பழைய டெக்னிக்.. இப்போ பாரு இன்னொருத்தன் இவன் பேரு சொல்லி கூப்புடுவான்.. இவன் உடனே திரும்புவான்.. அதாவது அவன் பேரை நாம தெரிஞ்சுக்கணுமாம்... ஹையோ..” என கிசுகிசுப்பிலே சலித்துக்கொண்டாள் ஜனனி.

சரியாக அவர்களை கடந்த நேரம், ஜனனிக்கும் ஒரு எதிர்பார்ப்பு ஒட்டிக்கொண்டது. அவன் பெயர் என்னவாயிருக்கும்.. சில நொடிகளில் அவன் நண்பன் மாங்கா மணி அழைக்க தொடங்கினான். இவளும் காதால் பிடிக்க தயாராயிருந்தாள்.

“ஏலேய்... பாவாடை சாமிமிமிமிமி........ இங்க வா...” என்றான் மாங்கா.

அதை கேட்டதும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ராஜி சற்று பலமாகவே சிரித்துவிட்டாள். சிறிது தூரம் நகன்றதும் தான் லேசாக கண் விழியை ஓரத்திற்கு விரட்டி நோட்டமிட்டாள். அங்கே புதுபையன் மாங்காவை கூறுப்போட்டுகொண்டிருந்தான்.

“அர்ஜுன்.. சாரில.. அர்ஜுன் .. அர்ஜுன்...” என மாங்கா இவளை பார்த்து ஏலம் விட வெடுக்கென திரும்பி கொண்டாள்.

டெஸ்ட் முடிந்ததும் இதுதான் இன்றைய அரட்டை டாப்பிக். எத்தனை முறை சிரித்தாலும் போதவில்லை ஜனனிக்கு...

“அவன் மூஞ்ச நீ பாத்துருக்கனுமே..” என முப்பதாவது முறையாக அவள் மீண்டும் தொடங்கிய பொழுது அனைவருக்கும் அலுத்து போய்விட்டிருந்தது.

“இருந்தாலும் நீ கொஞ்சம் ஓவர் தான்.. அந்த பையன் பாவம்.. கொஞ்சம் சிவப்பா இருந்துட்டா போதுமே, சீனை போடுவீங்களே..” சலிப்புடன் ராஜி..

“சீன் போடலாம் இல்ல லூசு.. நானும் பாத்தேன்.. பையன் பரவால்ல தான். ஆனா பொறுமையா இருக்கனும் இந்த விஷயத்துக்கெல்லாம் இப்போவே அவசரப்பட்டா, நம்ம அம்மாக்கள் மாறி அடுப்பாங்கரை.. வீடு, சுத்திபார்க்க    குளத்தாங்கரைன்னு நம்மளையும் தள்ளிடுவாங்க. நல்லா படிச்சு பெங்களூர், மெட்ராஸ், டெல்லின்னு வேலைக்கு போய்ட்டோம்ன்னா இவன் என்ன? க்ருத்திக் ரோஷன் மாறி பசங்களே கிடைப்பாங்க தெரியும்ல...”  இல்லாத காலரை கெத்தாக தூக்கிக்கொண்டாள்.

“அது யாருப்ள தையா தையா .. பாடுவானே அவனா?” என தோழிகளில் ஒருவள் கேட்க, “அவன் இல்லடி.. அது சல்மான் கான். பூனை கண்ணு வச்சுருப்பான்ல.. ஹிந்தி நடிகன் ஒருத்தன் அவன்..” இது இன்னொரு புத்திசாலி தோழி, தலையில் அடித்துக்கொண்டாள் ஜனனி.

“ஓ.... உனக்கு ஆலிவுட்டு கேக்குதோ...” என சீண்டினாள் ராஜி.

“அது பாலிவுட்டு லூசு..” என அவளை ஜனனி கொட்ட, “ப்ளேம்ஸ் போட்டு பாப்போமா, உனக்கும் கார்த்தி மோசனுக்கும்..” என்றாள் ரம்யா. அவளுக்கு இன்னும் க்ருத்திக் வாயில் கூட பிடிபடவில்லை. அவள் நோட்டு புத்தகம் நிறைவதே இந்த ப்லேம்ஸ் விளையாட்டில் தான். மாதவன் முதல் பக்கத்து வீட்டு மாரியப்பன் வரை அனைவரிடமும் போட்டு பார்த்துக்கொள்வாள் ரம்யா. பாவம் அவளுக்கு தான் எல்லாம் எதிர்மறையாய் வந்து விடியும்.

“அவனை எதுக்கு போட்டு பாத்துக்கிட்டு... அர்ஜுனை போடு பாப்போம்...” ராஜி கண்ணடிக்க சீறினாள் ஜனனி.

“அதெல்லாம் ஏன் பண்றீங்க.. உனக்கு வேணா உன் பேரை போட்டு பாத்துக்கோ..”

“உனக்கு தான் அவனை பிடிக்கலேல.. அப்பறம் என்ன வந்தா என்ன.. நீ  போடுப்ள..” என ராஜி கொடுத்த உத்வேகத்தில் ரம்யா இருவர் பெயரையும் எழுத தொடங்கினாள்.

இந்த விளையாட்டு கொஞ்ச காலமாகவே ஜனனிக்கும் தெரியும். இருவர் பெயரையும் எழுதிகொள்வார்கள். அதில் இருவருக்கும் பொதுவான எழுத்துக்களை அடித்துவிட்டு எஞ்சிய எழுத்துக்களை கூட்டி ஓர் எண்ணை குறித்து கொள்ள வேண்டும். அதன் பின் FLAMES என எழுதி முன்பு கூட்டிய  எண்ணை வைத்து இந்த எழுத்துக்களை ஒவ்வொன்றாக அடிப்பார்கள். எஞ்சியது தான் இருவருக்குமான உறவுமுறையாம். முட்டாள் விளையாட்டு தான் என்றாலும் ரம்யா தூண்டுதலில் இதுவரை மாதவன் அஜித் புதிதாக வந்த ஆர்யா என நடிகர்களோடு இவளுக்கு வந்ததெல்லாம் வெற்றிதான்..

“a க்கு a போச்சு, j க்கு j போச்சு. N க்கு n போச்சு. மீதி இருக்குறது 5 என முதல் கட்டத்தை முடித்தாள் ரம்யா.

ஜனனி கையில் புத்தகத்தை எடுத்து திரும்பி கொண்டாள்  “என்னவும் பண்ணிகோங்கப்பா”

“1...2...3...4..5.. e போச்சு.. ஹே.. எனிமி இல்லடி...” கண்ணடித்தாள் ராஜி.. ஜனனி கண்டுக்கொள்ளவில்லை.

அடுத்த ரெண்டு நொடிகளில் சிஸ்டரும் மேரேஜும் அடிபட்டு போக, லவ், பிரண்டு, அபெக்க்ஷன் மட்டும் தான் இருக்கு..” என ரன்னிங் கமன்ட்ரியை தொடர்ந்தாள் ராஜி.

இம்முறை ஜனனியால் கவனத்தை திசை திருப்ப முடியவில்லை. மனதிற்குள் அந்த நோட்டு புத்தகம் திறந்து எழுத்துக்கள் விழுந்தன.ஒன்றையொன்று ஒன்றையொன்றை அடித்துக்கொண்டும் ப்லேம்ஸ் நின்றது. L, A மட்டுமே பாக்கி.. என்னவாக இருக்கும்.. சில நொடிகளில் தெரிந்து விடும்.
1...2....3...

“அங்கே என்னடி சத்தம்.. டெஸ்ட் முடிஞ்சா அடுத்த டெஸ்டுக்கு படிக்க மாட்டிகளோ..” வாத்தியார் குரல் கேட்டதும், நோட்டு புத்தகம் பைக்குள்  ஒளிந்து கொண்டது. சிந்தனைகள் கூட சிதறி விட்டன..அதன்பின் அடுத்த பரிட்சைக்கான பாடங்கள் , வீட்டுக்கு வந்ததும் அம்மாவை சமாதான படுத்த பாட்டு கிளாஸ் என நேரம் ஓடி விட்டது. இரவு பாத்திரங்கள் கழுவும் பொழுது தான் மீண்டும் முடியாத ப்லேம்ஸ் மனதிற்குள் எட்டி பார்த்தது.

பால் பாத்திரம் கழுவும் பொழுது, 'என்னதான் வந்திருக்கும் போட்டுபார்க்கலாமா?.. ' என்று கூட தோன்றியது.
டம்ளர்களை முழுக்காட்டுகையில் ' போட்டு பார்த்து என்ன பண்ண போற, உனக்கு தான் பிடிக்கலையே '...என்றது மனம்.

'சும்மா க்யூரியாசிட்டிக்காக தானே.. என்னதான் வருதுன்னு பாப்போமே' முரண்டு பிடித்தது மனது. கரண்டிக்கு வரும் பொழுது சட்டென ஒரு யோசனை தோன்ற, சுவரில் தண்ணீரில் கிறுக்கினாள். மீண்டும் ஒவ்வொன்றாக எழுதி அடித்து நீரிலேயே ப்லேம்ஸ் எழுதி பார்த்தாள். Aன்னு வந்துருக்கு..A னா அபெக்ஷன் ஒரு வேளை அவனுக்கு  நம்ம மேல இருக்கிறது அபெக்ஷனா இருக்கும். சரியா தான் வந்துருக்கு.

“எவ்வளவு நேரமா தான் பாத்திரம் தேய்ப்ப..” கனைத்தாள் அம்மா.

“முடிஞ்சுதும்மா..” என்றவள் பாத்திரத்தோடு சேர்த்து மனதையும் கழுவி கவுத்தினாள். ஒரு வழியாக புத்தகங்களோடு படிக்க திண்ணையில் வந்து அமர்ந்ததும் தான் தாமதம். சைக்கிள் பெல் கினிகினி என சிணுங்கியது. ஏறிட்டாள். அவனே தான். மாங்கா மணி பெடல் அழுத்த, பின்னால் ஸ்டைலாக அமர்ந்தபடி இவளையே வைத்த கண் மாறாமல் பார்த்திருந்தான்.

இவன் வேற.... என சலித்தபடி அடுத்த பக்கத்தை திருப்ப மீண்டும் பெல் சத்தம். முன்பை விட விரிந்தே சிரித்தான். ஆனால அத்துடன் ஓயவில்லை. மூன்றாம் முறையாக கோபுரத்தை வட்டமடிக்கும் கழுகை போல அவள் வீட்டு முற்றத்தை வலம் வந்தான். பற்றாக்குறைக்கு அவன் வருகையை அறிவிக்க சைக்கிள் பெல் வேறு.

ஜனனிக்கு இதயம் படபடக்க தொடங்கியது. அம்மா காதில் விழுந்தாள் அவ்வளவு தான் கதை. அவசர அவசரமாக வாயில் கதவை நெருங்கி அடைக்கும் நொடியில் மீண்டும் அவன் விழியில் விழுந்து தொலைத்தாள். முடிந்தவரை பார்வையில் எரித்துவிட்டு படாரென கதவை சாத்தி இவள் திரும்ப,

“யாருடி அவன்? என்ன நடக்குது இங்க?” காளியாக மாறியிருந்தாள் அன்பான அம்மா..

“அம்மா.. அம்மா.. எனக்கு தெரியாதுமா.. ப்ளீஸ்மா அப்பாட்ட சொல்லிடாதம்மா..”

“அதெப்படி உனக்கு தெரியாம போகும்.. நீ இளிச்சு வைக்காமயா அந்த பையன் இவ்வளவு தைரியமா வீட்டுக்கே வரான்.. அந்த மனுஷன் வரட்டும்.. அவராண்ட வச்சுக்குறேன்..”

“வேணாம்மா.. அப்பாட்ட மட்டும் சொல்லிடாதம்மா... அவன் வரதுக்கு நான் என்னமா....” முடிக்க கூட இல்லை.. மீண்டும் சைக்கிள் பெல். ஆனால் இது அவன் இல்லை.
அப்பா ….

-தொடரும்......





  












 


























































 
































Continue Reading

You'll Also Like

180K 14.9K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...
195K 8.7K 41
கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தா...
166K 6.7K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
109K 6K 28
'காதல்' பிரபஞ்சத்தை கட்டியாளும் மாயாவி. அந்த மாய வலைக்குள் சிக்குவது ஆறறிவு உள்ள மனிதன் மட்டுமல்ல. உலகமே காதலின் இயக்கம்தான். இயக்குவது நீயானாலும் இய...