உறை - 1

941 16 4
                                    

 

காலை புலர்ந்து சில மணி நேரங்கள் தான் ஆகியிருந்தது. அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து, சில்லென்ற நீரில் குளித்து முடித்தாள். தலையில் தனக்கு பிடித்த வான நீல நிறத்து துண்டை கட்டிக் கொண்டு, தனது அறையிலுள்ள அலமாரியைத் துலாவத் தொடங்கினாள்.


  தன்னிடம் உள்ள புடவைகளிலேயே விலையுயர்ந்த புடவை அது. அவளுடைய மேனியின் நிறத்தை, இன்னும் அழகுபடுத்தும், முத்து நிறத்து காஞ்சிபுரத்து பட்டுப் புடவை. அம்மாவிடமும் அப்பாவிடமும் அடம்பிடித்து வாங்கிய பட்டுப் புடவை.

"உனக்கு கல்யாணமா என்ன? இவ்வளவு விலையுயர்ந்த பட்டு புடவைய நான் என்னோட கல்யாணத்துக்கு கூட கட்டிக்கிட்டது இல்ல" என்று அம்மா அந்த பட்டுப் புடவையை வாங்கி கொடுக்கும் போது கேலி செய்திருந்தாள். சில சமயங்களில் தற்செயலாக வேடிக்கையாக சொல்லும் வார்த்தைகள் கூட, வாழ்க்கையில் பலித்துவிடுகின்றன.

 புடவை கட்டுவது ஒரு கலை. அதில் ஜெயஸ்ரீ கைதேர்ந்தவள் தான். ஆனால், மனதில் வேதனை ஒரு பக்கமும் சந்தோஷம் மறுபக்கமும் சண்டை போட்டுக் கொண்டு இருந்ததால், அவளும் புடவையுடன் இரண்டு மணி நேரம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். முழு திருப்தி ஏற்படவில்லை. மனதில் இருக்கும் வலிகள், நம்முடைய அங்கங்களில் பிரதிபலிப்பது, மிகவும் ஆச்சரியமான விஷயம் தான்.

அம்மாவும் அப்பாவும் இவளிடம் கொள்ளை ஆசை கொண்டிருந்தார்கள். அது மட்டுமல்லாமல், அப்பாவுக்கு ஊரில் ஒரு தனி கௌரவம் இருக்கிறது. ஆனால், தான் செய்யும் காதல் திருமணம், இதை எல்லாம் அழித்துவிடும் என்று தெரிந்தும் ஜெயஸ்ரீ அதற்கு துணிந்துவிட்டாள்.

அம்மா அப்பாவைப் பற்றி எண்ணிக் கொண்டே, காதில் தோடுகளையும், கழுத்தில் ஒரே ஒரு தங்க சங்கிலியையும், கையில் கண்ணாடி வளையல்களையும் போட்டுக் கொண்டிருந்த சமயத்தில், செல்போன் முனங்கியது.

செல்போனை எடுத்து காதில் வைத்தாள். அப்போது தான் ஜன்னலுக்கு வெளியே சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது.

வாழ்த்து அட்டைகள்Where stories live. Discover now