அவளை விழாமல் நிற்கவைத்துவிட்டு அவன் விலக, அவள் அவனையும் கைபேசியையும் மாறிமாறிப் பார்த்தபடி அதை எடுக்க ஓடினாள்.

அம்மாதான் அழைத்திருந்தார் ஊரிலிருந்து.

"ஹ..ஹலோ.. அ..அம்மா?"

"தாரா, என்னடா குரல் ஒருமாதிரி இருக்கு? குளிர்ல நிக்கிறியா என்ன? ஏன் நடுக்கமா பேசற?"

"அ.. அதெல்லாம் இல்ல.. சொல்லுங்க, எப்டி இருக்கீங்க? தன்னு என்ன பண்றான்?"

"தன்னுவுக்கு எக்ஸாம் வந்தாச்சு. ஆனா இன்னும் படிக்காம திரியுறான்.. நானும் சொல்லிட்டே இருக்கேன், கேக்க மாட்டேங்கிறான். அப்பா வந்து நாலு அடி போட்டாத் தெரியும்!"

ஆதித் தலையைத் துவட்டியபடி வெளியே சென்றுவிட, தாரா அவனையே பார்த்தவாறு நின்றாள். பதில் வராததால் எதிர்முனையில் தேவி உரக்க அழைத்தார்.

"தாரா.. தாரா கேக்குதா?? சிக்னல் சரியில்லையா?"

"ஹான், கேக்குதும்மா.. சொல்லுங்க"

"என்னம்மா, ஒருமாதிரி பேசற.. எனக்கு மனசே கேக்கல. உன்னை யாராச்சும் எதாச்சும் சொன்னாங்களா? இல்ல, தனியா இருக்க கஷ்டமா இருக்கா?"

"ஐயோ அதெல்லாம் இல்லம்மா.. எம்டி பாட்டி, அத்தை, மாமா எல்லாரும் வீட்டுக்கு வந்திருக்காங்க. இங்க வீடே கலகலன்னு தான் இருக்கு."

"அட, பர்வதம்மா வந்திருக்காங்களா? எங்கிட்ட சொல்லியிருந்தா உனக்கு ஒப்புட்டும் அதிரசமும் பண்ணித் தந்துவிட்டுருப்பேனே..? ப்ச்.."

"அ.. அவங்க அப்பாகிட்ட சொன்னதா சொன்னாங்களேம்மா?"

தேவி சிலநொடிகள் மவுனமானார். பின் தயக்கமாக, "ஹும்.. அவரு மறந்திருப்பார்" என்றுவிட, தாராவிற்கு ஏமாற்றமும் ஆயாசமும் பிறந்தன.

இணைந்து வாழ்ந்து குடும்பம் நடத்தும் நோக்கத்துடனே திருமணம் செய்திருந்தாலும்கூட, சிறிதுகூட மனைவி மீது அக்கறையோ மரியாதையோ இல்லாமல் இருக்கும் சீனிவாசனை நினைக்கையில், அவர்களுக்காக உழைக்கும் நல்ல தந்தையாக இருந்தாலும், அன்னை தேவிக்கு ஒரு நல்ல கணவனாக இல்லை என்று தோன்றியது. அதேகணம் ஆதித்தை நினைத்துப்பார்க்க, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்மீது அன்பும் அக்கறையும் கொண்டிருக்கும் அவன் தன் தந்தையைவிட எத்தனையோ மடங்கு சிறந்தவன் என மெச்சிக்கொண்டாள் அவள்.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now