சிறிதுநேர அமைதியான பிரயாணத்தின் பின்னர், கார் சென்று சற்றே இருட்டான பகுதியில் நிற்க, தாரா குழப்பமாக அவனைப் பார்த்தாள். அவனோ இறங்கிவந்து தாராவிற்காகக் கதவைத் திறந்துவிட்டான்.

"இ.. இது... என்ன இடம்?"

ஆதித் சிரித்தான்.
"ஏன், பயப்படறியா? டோன்ட் வரி, இது சேஃபான இடம்தான்."

தார்சாலை இன்றி மணலால் ஆன பாதையில் அவளை நடத்திச்சென்றான் அவன். மரங்கள் அடர்ந்திருந்த அப்பகுதியில் மஞ்சள் மஞ்சளாக சின்னச்சின்ன வெளிச்சங்கள் ஆங்காங்கே தென்பட்டன. சற்று நடந்துசென்றதும் வெளிச்சங்கள் அதிகமாக, தாரா தான் கண்ட காட்சியில் அதிசயித்துப் பூரித்தாள்.

கங்கையாற்றின் ஒரு கிளையாக கல்கத்தாவில் ஓடும் ஹூக்ளி நதியின் தீரத்தில், மிகமிக சாதாரணமாக ஆனால் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு குடில்போன்ற உணவகம்தான் அது. வண்ணவண்ண விளக்குகளின் ஒளி தண்ணீரில் பட்டு ஓவியங்கள்போல எழில் காட்ட, காற்றில் தவழ்ந்த பெங்காலி இசையும் சிதார் ஓசையும் கேட்போர் நெஞ்சைக் கவர, ஒரிரு சுற்றுலாப் பயணிகள் மேசைகளில் அமர்ந்து பேசிக்கொண்டே உணவருந்திக் கொண்டிருக்க, தாராவை அழைத்துச்சென்று நதியோரம் போட்டிருந்த மரமேசையில் அமரவைத்தான் ஆதித்.

கண்களின் இன்னும் அதிசயம் மாறாமல் காணும் காட்சிகளை எல்லாம் கண்களுக்குள் சேர்த்துவைக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள் தாரா. இதழ்கள் அனிச்சையாகவே ஆச்சரியத்தில் விரிந்திருக்க, அவளையே ஆதுரமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

"பிடிச்சிருக்கா?"

அதிவேகமாகத் தலையை மேலும் கீழும் ஆட்டினாள் அவளும்.

"என் வாழ்க்கைலயே இவ்ளோ அழகான, அமைதியான இடத்தைப் பார்த்ததே இல்ல நான்! இந்தக் காத்து, தண்ணி, ம்யூசிக், இந்த சாயங்கால நேரம்.. இந்த சூழல்.. ச்சே! குடுத்து வெச்சிருக்கணும் இதையெல்லாம் அனுபவிக்க! ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!!"

அவன் சிரித்தான்.
"Glad you like it"

பரிசாரகரைக் கைகாட்டி அவன் அழைக்க, அவர் வந்து பணிவாக நின்றார்.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now