"இப்பதானே படுத்தேன்.. அதுக்குள்ளவா ஏழு மணி ஆகிடுச்சு?"

"துரந்த்! துரந்த் ஸ்னான் கர்னா!"

"ம்ம், இதோ போறேன்.. தேங்க்ஸ்.."

சோம்பல் முறித்தபடி நடந்து சென்று குளியலறைக்குள் நுழைந்தவள், வாய்பிளந்து நின்றாள் சிலையாக. ஏதோ சயன்ஸ் லேபில் வழிதவறி நுழைந்தாற்போல, திரும்பிய பக்கமெல்லாம் தானியங்கிக் கருவிகளாக இருந்தன.

கைநீட்டினால் தண்ணீர் தரும் சென்சார் கொண்ட குழாய்கள், தலைமுதல் கால் வரை தண்ணீர் பீய்ச்சும் ஜெட் ஷவர்கள், பட்டனைத் தட்டினால் சோப், ஷாம்பு மற்றும் கண்டிஷனரைத் தரும் டிஸ்பென்ஸர்கள், காலால் தட்டினால் திறந்துகொள்ளும் பாத் டப், கைகாட்டினாலே துண்டை அருகில் தரும் இயந்திரக் கை, சொடக்குப் போட்டாலே ஒளிரும் நிலைக்கண்ணாடி என அனைத்துமே தாராவை அதிசயிக்க வைத்தன. இது போதாதென கூரையில் ஸ்பீக்கர்கள் வேறு இருந்தன.

"ஹூம், இப்டி பாத்ரூம் வெச்சிருந்தா, எப்படி நான் வேடிக்கை பாக்காம ரெடியாகி காலேஜ் போறது?"

அவளுக்கு சிரமம் வைக்காமல் பத்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது.

"ஒரே நிமிஷம்.. இதோ வந்துட்டேன்!"

குரல்கொடுத்தவாறே அவசரமாக மேற்சட்டையை எடுத்து அணிந்துகொண்டு கதவைத் திறக்க, வியர்வை வழிய வெளியே நின்றிருந்த ஆதித்தைக் கண்டதும் திகைத்து நின்றாள் தாரா.

அவன் பார்வையை மாற்றிக்கொண்டு இரண்டடி விலகி அவளுக்கு வழிவிட, கையிலிருந்த துண்டை உடலோடு இறுக்கிக்கொண்டு அவளும் நகர்ந்தாள் தூரமாக.

படபடத்த இதயத்தைக் கையால் நீவிவிட்டுக்கொண்டு, அதிவிரைவில் தயாராகி அறைவிட்டு வெளியேறி கீழே உணவுக்கூடத்துக்கு அவள் வந்த நேரத்திற்கு, பர்வதம்மாள் அவளை எதிர்பார்த்துக் காத்திருந்ததைப் போலப் புன்சிரிப்புடன் அமர்ந்திருந்தார்.

"வாடா தங்கம்.. என்ன, முகமே ஏதோமாரி இருக்கு? நைட்டு சரியா தூங்கலையா?"

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now