புதிதாகக் கிடைத்த சுதந்திரம் வேறு கண்ணைக் கவர, கைகால்கள் துறுதுறுக்க, ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்று முனைந்தது அவள் மனம். சிறுவயதில் சுற்றுலாக்கள் செல்ல மிகுந்த ஆவல் கொண்டிருந்தாள். ஆனால் குடும்ப சூழலால் பள்ளிச் சுற்றுலாக்களில் கலந்துகொண்டதே இல்லை. பணம் நாங்களே தருகிறோம் என்று நண்பர்கள், ஆசிரியர்கள் முன்வந்தபோதும், சீனிவாசன் மறுத்துவிட்டார், பெண்பிள்ளை என்றால் வீட்டோடுதான் இருக்க வேண்டும் எனக் கூறி.

இன்று அதை நினைத்தபோது ஏனோ தாராவிற்குக் கோபம் வந்தது. ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்த தைரியத்தில் அப்பாவை மானசீகமாக முறைத்தாள்; அவரை எதிர்த்து முரண்டு பிடிக்கவும் துணிந்தாள்.

என்ன செய்யவேண்டுமென இப்போது தெளிவாகப் புரிந்துவிட, கைப்பையை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே கிளம்பினாள் அவள். கேட்டின் அருகே இருந்த காவலாளி, இவளைப் பார்த்ததும் எழுத்து நின்று வணக்கம் வைத்தார்.

அவருக்குக் கையசைத்துவிட்டுத் தெருவில் இறங்கினாள் அவள். ஆளரவமற்ற தெரு, அழகழகான வீடுகள், அமைதியான சூழல்.

வெய்யில் மிதமாய் இருந்தது. காற்றில் ஒருவித மென்குளிர் இருந்தது. மழையே பெய்யாமல் மழைபெய்து ஓய்ந்ததுபோன்ற ஒரு சாந்தம் இருந்தது.

வீடுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்துவந்து, தெருக்களை இணைக்கும் சற்றுப்பெரிய சாலைக்கு வந்தாள் அவள். அங்கும் பெரிதாக கூச்சல்களோ நெரிசல்களோ எதுவுமே இல்லாமல், இரண்டொரு வாகனங்கள் மட்டுமே சாலையில் செல்ல, பாதசாரிகளும் பெரிதாக ஒருவருமில்லாமல் தெருவே வெறிச்சோடி இருந்தது. ஆனாலும்கூட, அதுவும் ஒருவித அழகோடுதான் இருந்தது. சுவர்களில் எங்கெங்கும் வண்ணமிகு சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.

மான்கள், புலிகள், காடுகள், பூக்கள், பெண்கள், பெரிய கண்கள் என என்னென்னவோ வரைந்திருந்தனர் சுவரெல்லாம். புரியவில்லை என்றாலும் புதுமையாக இருந்தது.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now