"அம்மா!! சீக்கிரம் வாங்க!!"

"ஷ்ஷ்!! ஏன் இப்படிக் கத்துறீங்க ரெண்டு பேரும்!? அப்பா வர்ற நேரமாச்சு! மொதல்ல உள்ள போங்க!!"
பதற்றமாகக் கிசுகிசுத்தவாறே உள்ளிருந்து வந்தார் தேவி.

தாராவோ அசராமல், தன் பைக்குப் பின்னாலிருந்த மற்றொரு துணிப்பையை உயர்த்திக் காட்டினாள் தேவியிடம். அவரோ அதிர்வான பார்வையோடு, "என்னடா இது!? காசு மிச்சமானா அதைக் கொண்டுவர வேண்டியதுதானே?? எதுக்காகத் தேவையில்லாம இன்னொரு துணி வாங்கின?? அப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்!!" என மிரள, தன்னு அவசரமாக முன்வந்து பையைப் பிடுங்கி, அதிலிருந்து ஒரு புதுப் புடவையை வெளியே எடுத்து நீட்டினான்.

"இந்த ஒல்லிப்பிச்சான் எதுக்காக புடவை எடுக்கப்போறா? இது உங்களுக்கு வாங்கினதும்மா!!"

தேவியின் விழிகள் வியப்பில் விரிந்தன.
"தன்னு!? ஏதுடா காசு இதுக்கு??"

தமக்கையும் தம்பியும் தோளைக் குலுக்கினர்.
"சேர்த்து வச்ச பாக்கெட் மணி. எங்களுக்காக நீங்க புடவை வேணாம்னு சொல்லிட்டீங்க, ஆனா உங்களுக்கு புதுப்புடவை இல்லாம எப்படி தீபாவளிய கொண்டாடுவோம் நாங்க?"

தேவி இருவரையும் கண்ணீர்மல்க அணைத்துக்கொண்டு உச்சிமுகர்ந்தார்.
"என் செல்லம்டா நீங்க!!"

"புடவை பிடிச்சிருக்காம்மா உங்களுக்கு.. தன்னு தான் உங்களுக்கு வாடாமல்லிக் கலர்னா புடிக்கும்னு அடம்பிடிச்சு எடுத்தான்..."

அவர் மகிழ்வாகத் தலையாட்டி, "ரொம்ப அழகா இருக்கு" என்றிட, அந்தச் சிரிப்பு இருவரையும் தொற்றிக்கொண்டது. கைகளைக் காற்றில் உயர்த்தி இருவரும் உள்ளங்கைகளைத் தட்டிக்கொண்டனர் உற்சாகமாக.

மேலும் வாங்கிவந்த பலகாரங்கள், பட்டாசுகள் போன்றவற்றையும் எடுத்துப் பார்த்துப் பிரித்துக்கொண்டிருந்தபோது, சீனிவாசன் உள்ளே நுழைந்தார். தனுஷ் அவரைப் பார்த்த மாத்திரத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டுத் தன்னறைக்குள் சென்றுவிட, பெண்களோ அக்கணத்தைத் தவற விட்டிருந்தனர்.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now