*

இரவு பத்து மணி.

ஆதித் ஓரிடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தான் அறைக்குள். 

கதவு இருமுறை தட்டப்பட்டு, பின் திறக்கப்பட்டு, தாரா தயக்கமாகப் புன்னகைத்தவாறே உள்ளே வர, அவன் நிமிர்ந்து முறைத்துப் பார்த்தான் அவளை.

ஒரு 'ஹாய்' சொன்னபடி கதவுக்கு அருகிலேயே நின்றாள் அவள்.

"பாட்டி உன்கிட்ட என்ன சொன்னாங்க??"

சட்டென அவன் கேட்கவும் சற்றே யோசனையாக நின்றவள், பின் தளர்வான குரலில், "எதுவும் இல்ல" என்றாள்.

நம்பாதவன்போல் கண்சுருக்கிப் பார்த்துவிட்டு, தனக்குள் கோபமாக ஏதோ முணுமுணுத்தவன், பின் தனக்குள்ளாகவே தலையசைத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தான்.

தாரா அங்குமிங்கும் பார்த்தபடி ஒன்றும் செய்யத் தோன்றாமல் அப்படியே நின்றாள். அவனோ தனது மடிக்கணினியைத் திறந்து அதில் எதையோ தட்டிக்கொண்டிருக்க, தாராவிற்கு அசதி அதிகமானது. அவன் கவனிக்கப்போவதில்லை என்பது தெரிய, எதிரே இருந்த நாற்காலியில் தயக்கமாக உட்கார்ந்து அவனைப் பார்த்தாள் அவள்.

நேரம் துளித்துளியாக நகர்ந்தது. அறையை வேடிக்கை பார்த்தபடி கொட்டக் கொட்ட விழித்திருந்தாள் அவளும். மணி பன்னிரெண்டு என்பதை கைபேசித் திரை அறிவிக்க, எழுந்த கொட்டாவியைக் கையால் வாயை மூடிக் கட்டுப்படுத்திக்கொண்டாள். ஆதியைப் பார்த்தால் அவன் இன்னும் கண்களைக் கணினிக்குள்ளாரே வைத்திருந்தான். தாரா மெல்லப் பேச்சுக்கொடுத்தாள் அவனிடம்.

"தூக்கத்தை விட, பசிதான் அதிகமா வருது.. எட்டு மணிக்கு சாப்பிட்ட எனக்கே பசிக்குது. உங்களுக்குப் பசிக்கலையா என்ன?"

"பயங்கரமா பசிக்குது.." தன்னையறியாமல் அவனும் முணுமுணுக்க, அவள் புன்னகைக்க, ஆதித் தனக்குள் திகைத்துப்போனான்.

முகத்தைத் திருப்பிக்கொண்டு அவன் அமர்ந்துகொள்ள, தாரா எழுந்து முன்புறமிருந்த மேசையில் வைத்திருந்த பழத் தட்டை எடுத்துவந்து அவனருகே வைத்தாள். அவன் திரும்பவில்லை.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now