"சின்ன வயசுல அவனைக் கவனிக்காம விட்டுட்டதால தானே இப்ப இப்படி எடுத்தெரிஞ்சு பேசறான்..."

"அத்தை.. நாங்க அவனுக்காகத் தானே இதையெல்லாம் செஞ்சோம்?? ஓடி ஓடி சம்பாதிச்சதெல்லாம் நாங்க அனுபவிக்கவா என்ன!? ஒரே பையன் நல்லா வசதியா இருக்கணும்னு தானே?"

"ஆமாம் உண்மைதான், இல்லைங்கல. ஆனா இப்ப அவன் உங்க பணத்தை தொடக்கூட மறுத்துட்டு, அவனா உழைச்சு சம்பாரிக்கறான். பாசத்தையும் பணத்தையும் ஒரே தராசுல வைக்க முடியாதும்மா."

பர்வதமும் எழுந்து வெளியேறினார் அத்துடன்.

*

அதிகாலையில் வழக்கம்போல விழிப்பு வந்தவுடன் எழுந்துவிட்டான் ஆதித். விடுமுறையில் இருக்கிறோமென நினைவு வந்ததும் தனக்குள் புன்னகைத்தவாறே சென்று உடற்பயிற்சிக்குத் தயாராகிக் கீழே வந்தான்.

"யாரும் எந்திரிக்கலையா இன்னும்?"

"இல்லைங்க ஐயா. பெரியம்மா எட்டரை மணிக்கு தான் எழுவாங்க. உங்களுக்கு காபி கொண்டு வரலாங்களா?"

வேண்டாமெனத் தலையசைத்துவிட்டு, "நான் ஜாகிங் போறேன், பாட்டி கேட்டா சொல்லுங்க" என்றவன், தனது காலணிகளை அணிந்துகொண்டு காம்ப்பவுண்டைத் தாண்டி வெளியே ஓடத் தொடங்கினான்.

கொல்கத்தா குளிரையே பார்த்தவனுக்குக் கோவைக் குளிரென்ன மாத்திரம்? பனிபடர்ந்த சாலையில் தன்னந்தனியாக ஓடுவதில் அவனுக்குத் தான் அலாதிப் பிரியமே! மூச்சுவாங்க ஓடியவன், ஆர்.எஸ்.புரம் தாண்டி, காந்திபுரத்தை அடைந்துவிட்டான்.

"இங்கே மார்க்கெட்ல சாத்துக்குடி கிடைக்குமா?"

"ஓ! ஏழு மணிக்குத் திறப்பாங்க சார், எல்லாப் பழமும் கெடைக்கும்"

இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்ததால், நேரம் போக்குவதற்காக அங்கிருந்த பூங்கா ஒன்றினுள் சென்று அமர்ந்தான் அவன். மூன்று நாட்களில் தீபாவளியென்பதால் அங்குமிங்கும் பட்டாசுக் கடை விளம்பரங்கள் சிவப்பிலும் பச்சையிலும் நிறைந்திருக்க, தரையிலும் ஏகப்பட்ட பட்டாசுக் குப்பை சேர்ந்திருந்தது. சாலையில் எதிரிலிருந்த ஆஞ்சநேயர் கோவில் இப்போதுதான் திறக்கப்பட்டு, பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார் மாருதி. குளிர் ஓரளவு குறைந்து, இளமஞ்சள் வெளிச்சம் பூங்காவின் ஊசியிலை மரங்களில் விழத் தொடங்கியிருந்தது. சுற்றுமுற்றும் ரசித்துப் பார்த்தவாறே அமர்ந்திருந்தவன், யாரோ அவசரமாய் ஆஞ்சநேயரிடம் ஓடிச் சென்றதைக் கண்டு திரும்பினான் அத்திசையில்.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now