மீப்பேருயிரி- The Giant Creat...

BlitzkriegKk द्वारा

339 39 58

sci-fi Tamil EcoLoving .. अधिक

மீப்பேருயிரி- The Giant Creature..

339 39 58
BlitzkriegKk द्वारा


Disclaimer: All characters Incidents Names Places and corporations or establishments appearing in this document are fictitious. Any resemblance to real persons, living or dead, is purely coincidental.

இன்று, பகல் 02.00 மணி:

அதிவேகமெடுத்துப் போய்க் கொண்டிருந்தது லம்போர்கினி ஸ்பைடர் வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தை நோக்கி. வழக்கமாக மிதவேகத்தில் செல்லும் நான் அதிவேகத்தில் செல்ல சில காரணங்கள்.  

நான் அகில், சில வருடங்களாகவே தலைமைக் கணிப்பொறியாளன், வயது 28, ஆதார் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாத அமெரிக்க வாழ் இந்திய குடிமகன். என் அருகில் கலைந்த முடியை அனிச்சையாக சரிசெய்துகொண்டே களையாகவும் கொஞ்சம் களைப்பாகவும் வருபவள் என் மனைவி தண்மதி, மாநிறம்( நான் எந்த மாம்பழத்தையும் இந்த நிறத்தில் பார்த்ததில்லை என்றாலும்),  வட்ட முகம், குட்டிக் கழுத்து இதர இதர அதற்கெல்லாம் நேரமில்லை. பூமி பெரும் ஆபத்தில் உள்ளது. இல்லை இல்லை. பூமியிலுள்ள மனிதர்களுக்கு பெரிய ஆபத்து. அப்புறம் இந்தக் கதைக்கு மிக முக்கியமான தகவல் அவள் வேலைபார்ப்பது நாசாவில். ஆம் விஞ்ஞானியே தான். என்ன குறுந்தாடி பெரிய கண்ணாடி எல்லாம் இருக்காது. பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணைப்பற்றிக்கூறவெல்லாம் நேரமில்லை. இப்படி காமாசோமாவென எங்கள் அறிமுகம் இருந்திருக்கவேண்டியதில்லை தான். என்ன செய்வது? நேற்று முதல் நடக்கும் நிகழ்வுகள் அந்தமாதிரி.
நேற்று, இரவு 07.00 மணி: 

வழக்கமான ஒரு முன்னிரவில் யூட்யூபில் ஒரு காணொளியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் தண்மதி. மெரீனாவில் நடந்த மாணவர் போராட்டம், வர்தா புயல், கச்சா எண்ணெய் கடலில் கலப்பு பற்றிய மீம். வாளி வைத்து கச்சா எண்ணெயை அள்ளி அன்னப்பறவையைப் போல் பிரித்தெடுத்த செயல்திறனைக் கலாய்த்திருந்த மீம் அது. அந்த லிங்க் மெயிலில் வந்திருந்தது என்றாள். மெயிலிலா உனக்கா என்றபடியே நானும் பார்க்கத் தொடங்கினேன். 

பார்த்தவுடன் ஏதோ பிசிறு தட்டியது. வந்த மெயில் முகவரி 0250503291@i.zz என்று இருந்தது. கண்டிப்பாக அது ஸ்பாம் அல்ல. ஏனெனில் அது தண்மதியின் தனிப்பட்ட நாசா அலுவலக முகவரி. அது குறிப்பிட்ட சில மின்னஞ்சல் முகவரிகளை மட்டுமே அனுமதிக்கும். அவளது முகவரி nssc-t16384@xxxx.gov அதாவது அவளது பெயரின் முதல் எழுத்து மற்றும் பணியாளர் எண்ணை மட்டும் குறிப்பிட்டிருக்கும்.

சரி. காணொளியை நோட்டம் விடுவோம் என்று பார்த்தேன். தமிழ் நாட்டைப் பற்றி இருந்தாலும் தமிழில் இல்லை. முழுக்கவே ஆங்கிலத்திலான சிறிய மீம் தான். கடலில் கவிழ்ந்த கப்பலையும் கச்சா எண்ணெயையும் அதிரடி முயற்சிகளால் நவீன கருவிகளைக் எவ்வளவு சாவகாசமாக அகற்றுகிறார்கள் என்பது போல் இருந்தாலும் இயல்பான ஒன்றாக இல்லை. மெட்ராஸ் சென்ட்ரல் கோபி சுதாகரிலிருந்து டப்ஸ் சிணுங்கல் தம்பி வரை சகலத்தையும் அலசி ஆராயும் எனக்கு இது வழக்கமானதாகத் தெரியவில்லை.  தண்மதி தோசை ஊற்றச் சென்றுவிட்டாள்.

நான் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். டங்காமாரி பாடல் ஓடிக்கொண்டிருந்தது. பாடலின் முடிவில் தனுஷ் அந்த பெண்ணை விரலில் துப்ப சொல்லிக்கொண்டிருந்தார். எச்சி தொட்டு காத்துல விட்டா தன்னால அதுவே ஆறிடும் என விளக்கிக்கொண்டிருந்தார். டிவியை ஆஃப் செய்துவிட்டேன். 

பசி நேரங்களில் மூளை வேலை செய்வதில்லை. முறுவல் வாசனை மூக்கின் வழியே நியூரான்களால் மூளைக்கு கடத்தப்பட்டுவிட்டது. மூன்றாவது தோசையைப் பிய்க்கும் போது மிஸ்டர். கதிர் வந்து அருகில் அமர்ந்தார். அவரைப் பற்றி அடுத்த பாராவில் பார்ப்போம். உன் வீட்டுக்காரி சரியான லூஸுப்பா என்ற அரதப் பழசான உண்மைத்தகவலோடு ஆரம்பித்தார். 

நீங்கள் நினைத்தது போலவே கதிர் எங்கள் பையன் தான். 5 வயது ஆனால் வயதுக்கு மீறிய ஐக்யூ. தமிழ் வெறியன். எங்கள் அப்பாவின் ஜீன் போலும். வழக்கமான ஆளெல்லாம் இல்லை. பொதுவாக பெண் குழந்தைகளுக்குத் தன் வயதை ஒத்த ஆண்குழந்தைகளை விட ஒரு 5 வருடம் அதிக மன முதிர்வு இருக்கும். திருமணம் வரை அது மிக அதிகமாக இருக்கும். 20 வயது ஆணை விட 20 வயது பெண்ணுக்கு அதிக எதிர்பார்ப்புகள், கனவுகள் உறவுகளைப் பற்றிய புரிதல் இருக்கும். ஆனால் நம்ம கதிர் இந்த வயதிலேயே நிதானமான, தீர்க்கமான தர்க்க ரீதியில் சிந்திக்கக்கூடிய பையன். சரி இருக்கட்டுமே. சோழர் பரம்பரையில் ஒரு ஐன்ஸ்டீனோ ஹாக்கிங்ஸோ.

“ஏன் அம்மாவை அப்டி சொல்றீங்க?” என்ற படியே அடுத்த தோசைக்கு காத்திருந்தேன். கதிரின் பதிலுக்கும்.

“அப்றம் எப்பப்பாருங்கப்பா அந்த கெய்ரா ஆன்டிட்டயே பேச்சு. எனக்கு ஒரு தோசை ஊத்தக்கூட மனசில்லாம. சேடிஸ்ட்”

“கெய்ரா நல்ல பொண்ணுப்பா. அவங்க தகுதிக்கு நம்மகூட பழகுறதே பெரிய விஷயம்ப்பா”

“உங்ககிட்ட போய் சொன்னேனே. கஷ்டம். கஷ்டம். நீங்களே அவங்களுக்கு ஸ்னாப்சாட்ல ரெக்வெஸ்ட் கொடுத்துட்டு ஆறு மாசமா அலையுறீங்க. என் தலைவிதி”

ஓ அப்ப ஸ்கெட்ச் அவளுக்கு இல்லையா நமக்கு தானோ என்று தலையில் அடித்துக்கொண்டு பேச்சை மாற்ற அவனிடம் “தலைவிதியா. இதெல்லாம் யார் சார் சொல்லிக்கொடுத்தது உங்களுக்கு” என்றேன் நான்.

“அப்பா, ஐம் 5 இயர்ஸ் ஓல்டு பா. அப்புறம் இந்த சார்லாம் சொல்லாதிங்க. நாம யார்க்கும் அடிமை இல்லப்பா”

“நாம கடவுளுக்கு அடிமைப்பா”

“கடவுளா? அவர் யார் உங்க ரிலேஷனா?” என்றாள் மனைவி வேகமாக.

“கடவுளே இல்லைங்குறியா அப்போ? அப்ப இந்த உலகம் யார் படைச்சது”

“யாரும் உக்காந்து படைக்கல. இது இயற்கை” என்றாள்.

“அப்போ இயற்கைக்கு நாம அடிமையாப்பா” என்றான் கதிர் சட்டென்று.

“இயற்கைக்கு யாரும் அடிமையும் இல்லை. முதலாளியும் இல்லை. எல்லாருக்கும் வாழ உரிமை உள்ளதுனு புரிஞ்சுக்கிட்டு ஒருத்தர ஒருத்தர் சார்ந்து அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ந்தாலே போதும்.” என்று ஒரு வழியாக முடித்தாள் தண்மதி.

“ஆல்ரைட். டூ மச் ஆஃப் லெக்சர் இஸ் அன்ஹெல்தி” என்றவாறு ஆடிக்கொண்டே கட்டிலுக்கு சென்றான் கதிர்.
இன்று காலை 08.30 மணி: 

“நீங்கள் அனுப்பிய மெயில் இன்னும் வந்து சேரவில்லை. இன்னும் மூன்று மணி நேரத்தில் அதிலிருந்து குறிப்புகளை எடுத்து பெரிய கழுகைப் பார்க்கச் செல்ல வேண்டும். நிலைமை மிக அவசரம். எவருக்கும் தெரியாமல் அனுப்ப வேண்டும். எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் இவ்வளவு தாமதம்?” தாமஸ் லின் ஃபோனில் யாரிடமோ கோபமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். 

“வாட்? இன்னும் வரவில்லையா? நான் காலையிலேயே அனுப்பிவிட்டேன். நாசாவில் இன்டர்நெட் உலகிலேயே அதிவேகம் என்கிறார்கள். இன்னுமா வரவில்லை?” நக்கலாகச் சிரித்தார் எதிர்முனை ஆள்.

“சிரிப்புக்கு நேரமில்லை. எந்த மெயில் ஐடிக்கு அனுப்பினீர்?”

“நானே என் கைப்பட டைப் செய்தேன். n for Nevada s for Sydney s for Sydney c for Colorado a hyphen t for Texas One Six Three Eight Four …..” என உச்சரித்துக் காட்டினார் அந்த ஆள்.

நாசமாப் போச்சு என்பதற்கு மாற்றான ஒரு ஆங்கிலக் கெட்ட வார்த்தையை உதிர்த்துவிட்டு “ அது ஆறு இல்லை ஐந்து. நாசாவுக்குள்ளேயே யாரிடம் போனதோ? யார் பார்த்திருப்பாரோ? சரி எதற்கும் திருப்பி அனுப்பு ஒழுங்காக” எரிச்சலில் கதறத் தொடங்கினார் லின்…

நேற்று இரவு 08.08 மணி:
கட்டிலுக்குச் சென்ற கதிர் “அப்பா… என்னப்பா வீடியோ பாஸ்ல இருக்கு” என்றான். மீண்டும் அந்த காணொளி நினைவுக்கு வந்தவனாய் “ஆமால்ல, அது என்ன மெயில் ஐடி மதி?” என்றேன். 

“தெரியலங்க” என்றாள் உள்ளிருந்துகொண்டே.

“இதென்னப்பா கோட் வேர்டா?” என்றபடி மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வந்தான்.
0250503291@i.zz-  02 50 50 32 91- 025 050 329 1- 02505 03291  என்ன இது?

போன் நம்பர், ஜம்பிள் வேர்ட், ஏதேனும் ஐடி எண் அல்லது வார்த்தை…
“மதீ, இது என்னனு உனக்கு எதாவது ஐடியா இருக்கா?”

“இருங்க. தோசையைத் திருப்பிப் போட்டுட்டு வரேன்”

“ம்ம்கும். என் தலையே வெடிச்சுடும் நீ தோசைய திருப்பிப் போட்… திருப்பிப்…. யெஸ்.. யெஸ்.. கதிர். ஒரு பேப்பர்ல அப்படியே திருப்பி ரிவர்ஸில் இந்த மாதிரி எழுது 1923050520”

“அப்பா, இது ஆல்ஃபாபெட்ஸ். இரண்டிரண்டா பிரிச்சு19 23 05 05 20 னு எழுதி ஆல்ஃபாபெட்ஸ் வரிசையில மாற்றிப்போட்டா S W E E T- SWEET- இனிப்பு. ஆனா இனிப்புட்ட இருந்து எறும்புக்கு தானப்பா தகவல் போகும். மதிக்குப் போய் இருக்கு” சிரித்தான் கதிர்.

“வாவ். சரிதான் கதிர். ஆனா ஸ்வீட் னா?”

ஒரு சின்டெக்ஸ் விட்டுப்போனால் மொத்த ப்ரோக்ராமும் லாக் ஆகும் போது வரும் தலைவலி வந்தது எனக்கு. சும்மா ஏதோ ஒரு மெயில் எனக் கடக்கமுடியவில்லை என்னால்.

“மதி, ஸ்வீட்னா என்ன? எதாவது ஐடியா இருக்கா, எங்காவது கேள்விப்பட்டிருக்கியா இதுக்கு முன்னால?”

“இல்லியேங்க. பிங்க் பண்ணுங்க இல்லேனா கூகுள்ல பாருங்க” என்றாள்.

இணையத்தில் ஸ்வீட் என்ற பெயரிலான ப்ரிட்டிஷ் இசைக்குழுவைப் பற்றியும் இனிப்பு இனிய என்ற மாதிரி தகவல்களுமே மாறி மாறி வந்துகொண்டிருந்தன. இணையத்தில் ஒரு பெரிய தொல்லை இது. விறகு வெட்டி கோடாரி கதையில் வரும் தேவதை மாதிரி தேவை இல்லாத ஆணியாக பொறுக்கியெடுத்துத் தரும். 

எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. “மதி, கொஞ்சம் யோசிச்சுப்பாரு மதி” குறுக்கும் நெடுக்கும் தன் பெண்ணின் கல்யாணத்தில் அலையும் அப்பாக்கள் போல நடக்க ஆரம்பித்தென்.

ஒரு வழியாக மூளையிலுள்ள கைரஸ், சல்கஸ், பான்ஸ், மெடுல்லா என அனைத்தையும் தேடித் தடவித் துழாவி எடுத்துவிட்டாள். “ஆமாங்க, கெய்ரா சொல்லி இருக்கா ஒரு தடவை” என்றாள்.

ஓவர் டூ கெய்ரா. நாசா தலைமை விஞ்ஞானியின் ஒரே மகள். பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நாயகி கெய்ரா நைட்லீ பெயர் வைத்திருந்தாலும் அவள் போல் இருக்கமாட்டாள். என் மனைவியும் அவளும் ஒரே ப்ராஜக்டில் வேலை செய்வதால் தனிப்பட்ட முறையிலும் நெருங்கிய தோழிகள். அப்பா தலைமை விஞ்ஞானி என்பதால் யாருடனும் அதிகம் பேசமாட்டாள். அவள் தான் இந்த ஸ்வீட்டைப் பற்றி என் ஸ்வீட்டியிடம் கூறியிருக்கிறாள். உடனடியாக அவளை வீட்டிற்கு வரச் சொன்னாள் தண்மதி. வரட்டும். பார்க்கலாம்.
இன்று காலை 09.00 மணி:
“என்ன லின்.. வீடியோ பார்த்துவிட்டீர்களா?”

“பார்த்துவிட்டேன். மறு வாக்கெடுப்பு நடத்தவேண்டி வரும் போல் இருக்கிறது”

“ நோ…. அதெல்லாம் முடியாது. சரி அந்த மெயில் யாருக்குப்  போய் இருக்கிறது? ஹேவ் யூ காட் இட்?”

“யெஸ். அது என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்”

“பெண்ணா?” சிறிது ஏளனம் தெறித்தது.

“சிரிக்காதே. அவள் ஒரு இண்டியன். அதுவும் தமிழ் நாடு, சென்னை”

“வாஆஆஆஆட்ட்ட்ட்ட்ட்ட்? தமிழ் நாடா?? ” அலறத் தொடங்கினான்.
நேற்று இரவு 09.30 மணி:
கெய்ரா வந்துவிட்டாள். அந்த பதட்டத்திலும் லிப்ஸ்டிக் தெறி. வந்தவளிடம் நேரத்தை வீணடிக்காமல் ஸ்வீட்டைப் பற்றிக் கேட்டென் (அகர்வால் ஸ்வீட்டா என்றெல்லாம் மொக்கை போடவில்லை. அவளுக்கு அகர்வால் தெரிந்திருக்கவில்லை). உங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என்று எங்களையே விசாரிக்கத் தொடங்கினாள். சிறிது நேரம் கழித்து எங்களுக்கு வேறெதுவும் தெரியாது என்பதைப்புரிந்து சற்று நம்பிக்கை வரவைத்துக்கொண்டு கூற ஆரம்பித்தாள். (அனைவரது பேச்சையும் தமிழுக்கு மொழிமாற்றுதல் நலம் என்பதால் தமிழிலேயே கெய்ராவும்)

“SWEET- SOCIETY OF WORLDWIDE ECONOMICALLY EMPOWERED TECHNOCRATS. உலகளாவிய பொருளாதாரரீதியில் அதிகாரம்பெற்ற கோட்பாட்டாளர்களின் குழு. உலகின் தலை எழுத்தை ஒரே இடத்திலிருந்தே தீர்மானிக்கும் ரகசிய குழு அது. இன்றைய தேதியில் உலகின் அதிமுக்கிய பணக்காரர்களும் ஆட்சி அதிகாரமிக்க அதிபர்களும் வெகு சில அறிவாளிகளும் உள்ளடக்கிய, நினைத்த நேரத்தில் பொருளாதார அறிவியல் ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்தவல்ல ஒரே அமைப்பு. கூகுளில் தேடினால்கூட ஒரு சிறு துரும்பும் கிடைக்காத வெறும் 24 பேர் மட்டுமே கொண்ட மாபெரும் இரும்புக்கோட்டை. அவர்களின் கூட்டம் எங்கு எப்போது நடக்கிறது என யாருக்கும் தெரியாது. ஆனால் அவர்களிடம் இந்த உலகின் அனைத்து தகவல்களும் வந்துவிடும். ஆறு அமெரிக்கர்கள் அந்த குழுவில் உள்ளனர்.  உங்கள் நாட்டிலிருந்தும் ஒருவர் உண்டு” என்று என்னைப் பார்த்து இகழ் நகை புரிந்தாள்.

“அவரா….?” என்றேன்..

“ஆம். அவரே தான்..” என்றபடி அடுத்துப் பேச ஆரம்பித்தாள்.

“மேலும் அந்தக் குழுவில் என் தந்தையும் ஒருவர். ஒரு நாள் அவரது லேப்டாப்பை எதேச்சையாக மேய்ந்தபோது கிடைத்த தகவல். மேற்கொண்டு அவரைக்கேட்ட போது ஒரு வருடம் அலையவிட்டுப் பின் ஒரு நாள் இரவில் கூறினார் என்னிடம். அப்படிப்பட்ட ரகசியத்தை உங்களிடம் கூறிக்கொண்டிருக்கிறேன் நான் இவ்வளவு எளிதாக. எல்லாம் என் தோழிக்காக” என்று சொல்லிக்கொண்டே தண்மதியின் கையைப் பிடித்தாள்.

“ஹலோ, இதெல்லாம் நாங்க எப்போவோ பாத்தாச்சு. குழுவாம். அமைப்பாம். யார்கிட்ட. ஹெ ஹேய்” என்றேன்.

இதை எதிர்பார்க்காத அவள் என் மனைவியிடம் ”பார் தண்மதி, உங்க கணவர் எப்பவும் இப்படித்தானா? என்னைப்பற்றி உனக்கு தெரியுமல்லவா? இந்த மாதிரி நானே மறந்து கூட யாரிடமும் கூறிவிடக்கூடாது என்பதற்காகத் தான் உன்னைத் தவிர வேறு யாரிடமும் பேசுவதில்லை. இது முழுக்க முழுக்க உண்மை. கற்பனை செய்ய நான் ஒன்றும் கதை எழுதவில்லை. அதனால் தான் நானே புறப்பட்டு வந்தேன் இந்த நேரத்தில். புரிந்துகொள்ளுங்கள்” என்றாள் சற்று கோபமாக.

நிலைமை சீரியஸாவதைப் புரிந்துகொண்ட நான் அவளை சமாதானப்படுத்த உடனடியாக காணொளியை காணத் தொடங்கினோம். உண்மையில் அந்த காணொளி இரு தனித்தனிக் காணொளிகளை இணைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அதை முதலில் பிரித்துப் பின் அதிலுள்ள குறிப்புகளைக் கூற ஆரம்பித்தாள்.
தமிழகத்துக்கு தென்கிழக்கே பூமத்தியரேகைக்கோட்டில் 90 டிகிரியில் வடக்கு சுமத்ரா தீவுக்கு மேற்காக ஓரிடத்தில் G என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அடுத்த வரைபடத்தில் அந்த இடத்தைச் சுற்றிலுமான தங்கும் இடங்களும் அடுத்த வரைபடங்களில் சுற்றி உள்ள முக்கியமான நகரங்களும் அவற்றில் சென்னைக்கு மேல் சிவப்பு நிறத்திலும் குறியீடு இடப்பட்டிருந்தது. சில இடங்களில் கப்பல் குறியீடுகளும் விமான ஓடுதளங்களும் இடப்பட்டிருந்தன. ஆனால் உண்மையில் அந்த இடங்களெல்லாம் இணையத்தில் தேடி பார்த்த போது ஒன்றுமே இல்லை. அந்த வரைபடங்களில் தங்கும் இடமாகக் குறிப்பிடப்பட்டிருந்தவை உண்மையில் ஆட்களே வசிக்காத இடங்கள். அந்தப் பகுதிகளில் விமான சேவைகளோ விமான நிலையங்களோ இல்லவே இல்லை. பின் எதற்காக இதெல்லாம் குறிப்பிட்டு ஒரு மேப் தயாரித்து அதை இவ்வளவு பத்திரமாக நாசாவிலுள்ள ஒருவருக்கு யாருக்கும் தெரியாமல் அனுப்பி வைக்கவேண்டும். உண்மையில் உலகம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது? இதெல்லாம் யாருக்காக எதற்காக நடைபெறுகிறது? இதனால் யாருக்கு என்ன லாபம்? எண்ணற்ற கேள்விகள் மூவரையும் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தன.

இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடியவர் ஒருவரே. அவரது பெயர் தாமஸ் லின்.
இன்று காலை 10.00 மணி:

காலையிலேயே கதிர் பள்ளிக்கு சென்றுவிட்டான். மாலை ஆறு மணிக்கு வருவான். இரவு லேட் ஆகிவிட்டதால் காலையில் அப்போதுதான் எழுந்திருந்தேன். எழுந்தவுடன் அவளைத் தேடினேன். ஆளைக்காணோம். உடனடியாக அவள் ஃபோனுக்கு அழைத்தேன். எடுக்கவில்லை. பதட்டம் அதிகமானது. வீட்டின் எல்லா அறைகளிலும் தேடத் தொடங்கினேன். 

மதீ! மதீ!! மதீ !!!

பொதுவாகவே எனக்கு சற்று சன்னமான குரல். உச்சஸ்தாயில் கத்த முயற்சிக்கையில் அது வேறொருவர் குரல் போல் ஆகிவிட்டது. அதனால் பாதகமில்லை. எப்படியாவது அந்தக் குரல் அவள் செவிப்பறையைக் கிழிக்க.. வேண்டாம் வேண்டாம் தட்டினாலே போதும். 

படியிலிருந்து வேகமாக 

     ற

          ங்

               கித் திரும்புகையில் கதவில் மோதி அந்த அறைக்குள்ளேயே விழப்போனேன். நல்ல வேளையாக பழைய கதவென்பதால் முழுவதும் இலகுவாகத் திறக்கவில்லை. உள்ளே சாவகாசமாக புத்தகமூட்டைகளுக்கு நடுவில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள் தண்மதி. 

“பாவி. கொலைகாரி. ஐந்து நிமிடத்தில் என்னை அலைய வைத்துவிட்டாயே. உன் புருஷனுக்கு இன்னொரு அழகான பொண்டாட்டி கிடைக்கட்டும்” என சபி(சபலித்தேன்)த்தேன்.

“ம்ம்கும். நேத்து அந்த கெய்ராவப் பாத்ததுக்கே சார் இப்ப தான் எழுந்திரிக்குறீங்க. இதுல ஏழு வேணுமா?” என்றாள். அவளுக்கு தெரியும் நான் நல்லவன் என்று. (இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் நான் அடுத்த கதையில் கூறுகிறேன். இப்போது உலகத்தை வேறு காப்பாற்றியாக வேண்டும்.)

“சரி சரி என்ன செய்ற இங்க? ஃபோன வேற எடுக்கல” என்று கேட்டேன்.

“நீங்க நேத்து தூங்கப்போனப்றம் நானும் கெய்ராவும் எங்க பர்சனல் தீஸிஸ் பத்தி பேசிட்டிருந்தோம். அது கிட்டத்தட்ட முடியப்போகுது. அந்த பேப்பர்ஸ எடுத்துட்டிருந்தேன். உங்க கால் கவனிக்கல” என்றாள்.

“இப்ப இருக்க பிரச்சனைல இந்த தீஸிஸ் முக்கியமா?”

“இருக்கு. சம்பந்தம் இருக்கு. அந்த தீஸிஸ்க்கும் இந்த மேப்க்கும் சம்பந்தம் இருக்கு” என பைரவா விஜய் போலக் கூறவும் அவளது ஃபோன் அடிக்கவும் சரியாக இருந்தது.

எதிர்முனையில் கெய்ரா சற்றே பதட்டமாக”தண்மதி, அப்பா இன்னும் வீட்டுக்கு வரல. ஃபோனும் எடுக்கல. கொஞ்சம் வரமுடியுமா வீட்டுக்கு” என்றாள்.

திடீரென தம் தம் என சத்தம் கேட்க ஆரம்பித்தது. முன் கதவிற்கு ஓடினேன். வாசலில் ஒரு நான்கு அல்லது ஐந்து பேர் துப்பாக்கி சகிதம் எங்களை அழகு வார்த்தைகளால் அழைத்துக்கொண்டிருந்தார்கள். பதிலுக்கு சண்டை போடவெல்லாம் நேரமில்லாததால் ஓடிச் சென்று பின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த என் மனைவியின் லம்போர்கினியில் இருவரும் கிளம்பினோம்.
இன்று நண்பகல் 12.00 மணி
கெய்ரா வீடு. அழுதுகொண்டிருந்திருப்பாள் என நினைக்கிறேன். வஞ்சிரமீனாய் சிவந்திருந்தன விழிகள். 

“என்னாச்சு?. எங்க வீட்டுக்கு வேற ஆள் வந்துட்டாங்க. இந்நேரம் வீட்டையே உடைச்சிருப்பானுக. என்ன நடக்குது கெய்ரா?” கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டாள் தண்மதி. 

“அப்பாட்ட பேசிட்டேன். எல்லாத்தையும் சொன்னேன். விஷயம் கைமீறிப் போய்ட்டிருக்கு. நீ அவங்களக் கூட்டிட்டு இங்க வானு சொன்னார். ஏதோ புதையல். பாத்து பத்திரமா வாங்கனு வேற சொன்னார்” என்றாள் திருக்குறள் போல சுருக்கமாக. 

எனக்கென்னவோ இன்னும் ஏதேனும் ஒன்று இருப்பதாகத் தோன்றியது.  நடந்த ஒவ்வொன்றையும் நான் கோர்க்கத் தொடங்கினேன். 

நாசா தலைமை விஞ்ஞானிக்கு மெயிலில் ஒரு மேப் வருகிறது. அந்த மேப்பை அனுப்பியவர்கள் உலகின் முக்கியமான ஒரு ரகசியக்குழு. அந்த மேப்பைப் பற்றி தெரிந்தவர்களைத் துரத்துகிறார்கள். அப்படி அந்த மேப்பில் இருப்பது என்ன? இவற்றை இயக்குவது யார்? இதற்கும் அந்த தீஸிஸ்கும் என்ன தொடர்பு? இவற்றின் ஒட்டு மொத்த தீர்வு என்ன? 

“மதீ.. உன் தீஸிஸ் பத்தி சொல்லு. அதோட பேர் என்ன?”

“மீப்பேருயிரி”

“என்ன, கதைத் தலைப்ப சொருகுறீங்களா இடையில” என்றேன்.

முறைத்தாள்.

“ஹா ஹா ஹா கோவமா குட்டிமா” என்றேன்.

தலையில் அடித்துக்கொண்டே “தூ” எனக்கூறிவிட்டு நகர்ந்தாள்.
இன்று இப்போது பகல் 02.25 மணி
நாசா மையத்திற்குள் நுழைந்தோம். என்னை உள்ளே அழைத்துச் செல்வதற்குள் அரை மணி நேரமாகிவிட்டது.

ஒரு சின்ன அறை. நான், என் மனைவி, கெய்ரா மற்றும் அவளது தந்தை மிஸ்டர் தாமஸ் லின். ஆம் அந்த தொலைபேசி ஆள் தான். 

முதலில் தாமஸ் லின் பேசலானார்.

“வணக்கம், என் பொண்ணு உங்களப்பத்தி சொல்லிருக்கார் அகில். ஆனா நாம இப்படி ஒரு சூழ்நிலையில மீட் பண்றோம். ஆல்ரைட். ஸ்வீட் பத்தி உங்களுக்கு ஏற்கனவே என் பொண்ணு சொல்லிட்டானு தெரியும். உங்களுக்கு தெரிஞ்சதால தான் நாம இப்படி இங்க பேசிட்டிருக்கோம் முதல்ல. டூ தி பாய்ண்ட், எங்க குழு மிக வலிமையானது. ஆனாலும் எங்கள் குழுவில் இருந்த சிலர் மேலும் செல்வத்தைக் குவிக்க வேண்டி பல வழிகளிலும் முயற்சித்தனர். துருவகரடிதோட்டமான அலாஸ்காவிலுள்ள் தங்கத்தைத் தோண்டி எடுக்க திட்டம் போடப்பட்டது. அப்போது எங்களுக்குள் நடந்த வாக்குப்பதிவில் திட்டம் தோல்வியடைந்தது. ஏனெனில் அதிலிருந்த ஆறு பேர் அமெரிக்கர்கள். எனவே மூன்றாம் நாடுகள் மற்றும் அவற்றின் கடல்பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் G POINT என்றழைக்கப்பட்ட இடத்தில் ஒரு தங்கப்படுகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னொரு காலத்தில் அந்த இடம் லெமூரியாக் கண்டம் என இப்போது மருவி அழைக்கப்படும் குமரிக்கண்டத்தின் ஒரு முக்கியத் துறைமுகமாகும். அப்போது தரைக்கு வெகு அருகில் கிடைத்த  தங்கம் காலப்போக்கில் கட்ற்கோள்களால் அழிந்து போனது. அந்த தங்கத்திற்காக அப்போதே பல போர்கள் நடந்திருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் கிடைத்த தங்கத்தைக் கொண்டே தமிழகம் முழுவதும் மிகச் செழிப்பாக வாழ்ந்து வந்தனர் எனவும் அறியப்படுகிறது. அதன் அருகில் உள்ள தீவிற்கு ஸ்வர்ணத் தீவு(தற்போதைய சுமத்ரா) என்ற பெயர் பிற்காலத்தில் வழங்கப்பட்டது. அந்த இடம் அழிந்து போனாலும் அந்த இடத்தைப்பற்றிய குறிப்பு காலகாலமாக பாண்டியமன்னர்களால் பாதுகாக்கப்பட்டு இப்போதைய மதுரை அருகில் உள்ள இடத்தில் புதைக்கப்பட்டிருந்தது. அங்கிருக்கும் புதையலை வெளியே எடுத்தால் அந்த நாடே உலகின் வல்லரசாக மாறும். உலகமே அந்த நாட்டின் கீழே போகவும் வாய்ப்பு இருக்கிறது.” என்று சொல்லிக்கொண்டிருக்குபோதே இடைமறித்தாள் கெய்ரா.

“அதெப்படி ஒரு புதையலை வைத்து வல்லரசாக முடியும்?” என்றாள்.

“ஏன் முடியாது? அமெரிக்கா முந்நூறே ஆண்டுகளில் வல்லரசானது. இத்தகைய புதையல் இல்லாமலேயே. மேலும் இந்த புதையலைத் தோண்டி எடுப்பதற்குள் உலகமே ஒரு பெரிய புவியியல் மாற்றத்திற்கு உண்டாகும். அவ்வளவு வலிகளை இந்த பூமியுருண்டை அனுபவிக்கப்போகிறது இந்தப் புதையல் கனவால். 2004 லேயே இதை முயற்சித்தபோது சுனாமி விளைந்தது. அந்த மேப்ல சென்னைக்கு மேல சிவப்புக்குறியப் பாத்திருப்பீங்க. இந்தத் திட்டத்துக்கு தடை ஏதாவது வந்தா அது தமிழர்களால தான் இருக்கமுடியுமென்று எங்களின் எதிர்பார்ப்பு. ஆனால் இப்போ தமிழர்களே ஏகப்பட்ட சிக்கலில் இருப்பதால் இதுவே சரியான தருணம் என முடிவெடுக்கப்பட்டது. அதனால் பொறுத்திருந்து பல்வேறு முன்னேற்பாடுகளுடன் இந்தப் பணி மீண்டும் துவங்க இருக்கிறது” 

“அப்படித் துவங்கினால் அழியப்போவது ஒட்டு மொத்த மனித இனமுமே. சுனாமி ஒரு விளைவு அல்ல. எச்சரிக்கை” இதுவரை அமைதியாக இருந்த தண்மதி உரத்த குரலில் வெம்மதி ஆனாள். 

“இப்போது நீ கூறியது தெளிவாக உனது ஆராய்ச்சியிலேயே இருக்கிறது. எனவே அதை நீயே இவர்கள் எல்லாருக்கும் கூறலாம்” என்று சட்டென கையில் இருந்த ரிமோட்டை அழுத்தினார் அறிஞர் லின். அந்த அறையே பிளந்தது போல் திறந்தது கதவு. நீளமான கலந்தாய்வு அரங்கம். வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கவே முடியாத உலகின் மிகப்பெரிய மனிதர்கள் எல்லோரும் அமர்ந்திருந்தனர். இவை எல்லாம் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என்பதை உணர ஆரம்பித்தோம் நானும் அவளும். ஆக எங்கள் மகன் கதிருக்கும் எந்த பாதிப்புமில்லை. வீட்டுக்கும் ஆபத்தில்லை. முன்கூட்டியே இவை அனைத்தும் பல்வேறு மூளைகளால் முடிவு செய்யப்பட்டு ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது.  அப்படி என்ன ஆராய்ச்சி செய்துவிட்டாள் இவள் என அவளைப் பார்த்தேன்.

ஒருமுறை கண்களை மூடி யோசித்துவிட்டு நிதானமாகப் பேசத்தொடங்கினாள் என் மதி.

“வணக்கம், நீங்கள் நினைப்பது போல் உலகிற்கு மனிதன் முதலாளியல்ல. உலகிற்கு மனிதன் முக்கியமும் அல்ல.  ஏனெனில் ஏற்கெனவே பாதி வாழ்நாளுக்கு மேல் கடந்துவிட்ட உலகிற்கு உலகே முக்கியம். இது போன்ற சூழ்நிலைகளில் உலகம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும். உருமாற்றிக்கொள்ளும். தகவமைத்துக் கொள்ளும்.”

“அப்படி என்றால்?”

“ஆம். உலகிற்கு உயிர் உள்ளது. அதுவே இவ்வுலகின் மீப்பேருயிரி.”

அதிர்ச்சியில் உறைந்தேன் நான். எல்லோரும் கூடவே.

“இதென்ன கட்டுக்கதை. உலகத்துக்கு உயிராம். விட்டாக் கிள்ளுனா அழும்னு சொல்லுவீங்க போல. இந்த ப்ராஜக்ட நிறுத்த இப்படி ஒரு புரளியா? இது எங்க கனவுத்திட்டம். எத்தனை கோடிகளைக் கொட்டி இருக்கிறோம் தெரியுமா?” பணக்காரக் கேள்விக்கணைகள் கிளம்பின.

“இன்னும் நிறைய கேள்விகளை எதிர்பார்க்கிறேன். ஆனால் என் பதில் மாறாது. இதைப்பற்றி 1970 களிலேயே கேயாஸ் தியரியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நிரூபிக்கப்படவில்லை. அதைப்பற்றிய ஆராய்ச்சியில் தான் நானும் கெய்ராவும் கடந்த 4 வருடங்களாக ஈடுபட்டுவருகிறோம். இதைப்பற்றிய தரவுகள் அறிஞர் தாமஸ் லின் மற்றும் ஜான் வில்லியம்ஸிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த உலகம் கடல் பாசிகள் மற்றும் சில உயிரினங்கள் வழியாக உயிரினங்களுக்கே உரித்தான டைமெத்தில் சல்பேட் மற்றும் அதன் இணைகூறான டைமெத்தில் சல்ஃபோனியோ ப்ரொபியோனேட் இணைந்த கந்தக சுழற்சியில் நேரடியாக பங்கேற்கிறது. எங்கள் ஆராய்ச்சியின் இறுதி வடிவத்தை எட்டியுள்ளோம். இந்த நேரத்தில் நீங்கள் பூமியைக் கொலை செய்ய முயற்சி செய்கிறீர்கள். இதை உடனடியாக நிறுத்த வேண்டும்” 

“அதெப்படி இதை ஏற்றுக்கொள்ளமுடியும்? இந்த அறிவியல் சமாச்சாரங்களெல்லாம் சுத்த பேத்தல்” என்றார் இந்தியாவைச் சேர்ந்த அவர்.

தற்போது நான் எழுந்தேன்.

“இது பழைய சித்தர் பாடல்களிலேயே உள்ளது. புதிதாக ஒன்றும் கூறவில்லை” என்றேன். 

“எந்த மொழி? தேவ பாஷை சமஸ்கிருதம் தானே” என்றார் அவர் ஆர்வத்துடன்.

 “இல்லை. தமிழ். 

அண்டத்திலுள்ளதே பிண்டம்.

பிண்டத்திலுள்ளதே அண்டம்.

இது தமிழ் சித்தர் பாட்டு. மனித உயிருக்கு உண்டான அனைத்துக் கூறுகளும் இந்த அண்டத்திற்கு உரியது என்று பொருள். பிறத்தல், வளர்தல், தேய்தல் அழிதல் என அத்தனை நிலைகளும் இந்த பேரண்டம் முழுவதும் உண்டு. பேரண்ட மாவெடிப்பிற்குப் பின் உண்டான பால்வழி அண்டமும் அதனிலிருந்து பிரிந்து அதனைச் சுற்றி வரும் ஆதவனும் அதனிலும் பிரிந்து அதனைச் சுற்றி வரும் பூமி உள்ளிட்ட அத்தனை உயிர்களும் மீப்பேருயிரிகளே. அந்த வகையில் சூரியனின் ஆயுள் இன்னும் ஐந்நூறு மில்லியன் வருடங்களே. அவர் ஏற்கனவே நடுத்தர வயதைத் தாண்டிவிட்டார்.” என்றாள் தண்மதி.

“கொஞ்சம் எளிமையாகக் கூறவேண்டுமே” என்றார் ஒருவர். சைனா அல்லது ஜப்பானாக இருக்கக்கூடும்.

“நம் உடலில் ஒரு நாடாப்புழு ஒன்று உயிர் வாழ்கிறது. நம்மை விட சிறிய உயிர். அதன் உடலில் ஒரு பாக்டீரியா வாழ்கிறது. நாடாப்புழுவிற்கு அது சிற்றுயிர். நாடாப்புழு நம் உடலுக்குள்ளேயே பிறந்து உண்டு வளர்ந்து மடியக்கூடும். ஒரு பாக்டீரியா அந்த நாடாப்புழுவுக்குள்ளேயே பிறந்து உண்டு வளர்ந்து மடியக்கூடும். நாடப்புழு போன்ற சிற்றுயிருக்கு நம்மைப்பற்றியோ நம் பழக்கவழக்கங்கள் உணவுமுறை வேறுபாடுகள் தோற்றம் மறைவு குறித்தோ ஒன்றும் தெரியப் போவதில்லை. ஆனாலும் அது நம்மில் பிறந்து நம்மிலேயே மடியும். அதனைப் பொறுத்தவரை நமக்கு உயிர் இல்லை. நாம் ஒரு வாழ்விடம் மட்டுமே. அதே போல் அந்த பாக்டீரியாவிற்கு நாடாப்புழு ஒரு வாழ்விடம் மட்டுமே. இது பாக்டீரியாவிற்கு பாக்டீரியோபேஜ் போன்ற வைரஸ்கள் எனத் தொடரும்.

ஆக நாம் வாழ்விடம் மட்டுமே என்றெண்ணிக்கொண்டிருக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் நிலவுக்கும் உயிருண்டு. ஒரு கொசுவை நாம் தேடிப்போய் கொல்வதில்லை. நாம் தூங்கும்போது நம் உடலில் ஒரு பூச்சி ஏறினாலும் நாம் எதிர்வினையாற்றுவதில்லை. ஆனால் நமக்கு உறுத்தும் போதோ அல்லது வலிக்கும் போதே ஒரே அடியில் அவற்றைக் கொன்றுவிடுகிறோம். அதேபோல் தான் இந்த பூமியும். டைனோசரோ டிரைனோசரோ மாம்மூத் யானையோ வரலாற்றில் அளவுக்கு மீறிய அதிகாரம் புரியும் அத்தனை உயிரினங்களையும் காலப்போக்கில் அழித்துவிட்டிருக்கிறது இந்த உலகம்.ஏனெனில் புவியின் ஆயுளை ஒப்பிடும்போது எந்த உயிரினத்தின் மொத்த காலகட்டமும் மீச்சிறு அளவே. மனிதனும் அப்படியே. நீங்கள் கடந்த முறை அந்த இடத்தைத் தகர்த்த போது விடப்பட்ட எச்சரிக்கையே சுனாமியாகும். அடுத்த முறை எச்சரிக்கை வராது. தண்டனை மட்டுமே.

வாழ்வித்தலே வாழும் வழி. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே இயற்கைக்கு பிடித்த ஒரே வழி. அதை விடுத்து பூமிக்கு சொந்தமானவற்றை சுரண்டினால் விளைவுகளுக்கு வேறு யாரும் பொறுப்பல்ல. தீதும் நன்றும் பிறர் தர வாரா. ஏனென்றால் நம் எல்லோரையும் விட மீப்பேருயிரி இந்தப் புவியே” உறுதியாகக் கூறிமுடித்தேன் நான். எழும்பிய  கரவொலியில் அனைவரும் ஆமோதித்தது போல் தெரிந்தது. 

ஒருவர் எழுந்தார்”நாங்கள் உலகின் அதிபுத்திசாலி மற்றும் பணக்கரர்கள், அதிகாரம் மிக்கவர்கள். ஏதோ இரு தமிழர்கள் கூறுவதை நாங்கள் ஏன் கேட்கவேண்டும்” என்றார்.

“யூ டோன்ட் ஹேவ் சாய்ஸு” என்று மனதிற்குள் பாடிக்கொண்டே அவரைப் பார்த்து சிறியதொரு புன்னகையை மட்டும் வீசிவிட்டு வந்துவிட்டேன். 

இந்நேரம் அவர்கள் கூடிப் பேசி அந்தத் திட்டத்தைக் கைவிட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் இந்நேரம் தமிழகத்தில் சுனாமி வந்திருக்கக் கூடும். இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நொடிவரை வரவில்லை என்றால் திட்டம் நிறைவேறவில்லை என்று அறிக. எதற்கும் வானிலைச் செய்திகளைப் பார்த்துக்கொள்ளவும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

வே. கார்த்திகேயன்.

@BlitzkriegKk

पढ़ना जारी रखें

आपको ये भी पसंदे आएँगी

lucci's life itxtismrsrsk द्वारा

कल्पित विज्ञान

9 0 1
My dream
173 5 7
அதியக் கோளுடனான தமது தலைமுறைப் பகைக்கு ஒரு முடிவு கட்டிவிடுவது என்ற தீர்மானத்தோடு தொடிமக் கோளின் படைகள் அதியத்தின் நிலவில் முற்றுகையிட்டுள்ளனர். தூது...
325 49 3
இயற்பியல் பேராசிரியன் ர.ரா-வும் அவனது உதவியாளன் வசந்தும் வடிவமைக்கும் இயந்திரம் காலத்தோடு விளையாடக்கூடியது! அந்த விளையாட்டு நல்லதா? கெட்டதா? இக்கதையை...
215 14 3
குழந்தையின் மூளைக்குள் நேரடியாக அறிவைப் புகுத்தும் ழ-கதிர்... எதிர்காலத்தின் தொழில்நுட்பம் வளர்ச்சியா? வீழ்ச்சியா? (கதையைப் படித்த பின் உங்கள் விமர்...