கொற்றவை

By d-inkless-pen

5.2K 589 888

சுடும் சூரியனும், நீர் காணா நிலமும், முள் படர்ந்த செடிகளும் சூழ்ந்திருக்க , ஓயாது ஊளையிடும் ஓநாய்களுக்கும், உ... More

முன்னுரை
ஆடிக் கொடை
நடுநிசி கூட்டம்
இளவரசன்
வேட்கை
கொற்றவை

ஒற்றை கள்வன்

355 74 83
By d-inkless-pen

இளவரசனின் ஆணைக்கிணங்கி படைகள் நின்ற பொழுதில், பெரும் பிரளயம் வந்து ஓய்ந்த்ததை போல் இருந்தது. புழுதி படலங்கள் காற்றினில் கரைய, கள்வன் இப்போது தெளிவாக தெரிந்தான். படைகளிலிருந்து பாதுகாப்பான தொலைவில் நின்று விட்டிருந்தான் அவன், இருப்பினும் இளவரசனின் அம்புகள் எட்ட இயலாத தொலைவில்லை அது. இருந்தும் அவன் என்ன கூற விழைகிறான் என்பதில் இளவரசன் ஆர்வமாக இருந்த படியால், ஏதும் செய்ய வேண்டாமென தன் படைகளுக்கு உத்தரவிடிருந்தான். அனைவர் கண்களும் அந்த ஒற்றை கள்வன் மீதே இருக்க, அவர்களின் கைகள் வாளின் பிடியில் தோய்ந்து கொண்டிருந்தன. நிலையை கண்டு, இளவரசனிடம் ஏற்கனவே சரணடைந்த வெட்டூர் பாலையின் காளையன் கார்கோடன். தன் குதிரையை செலுத்தி இளவரசன் தேரின் அருகில் வந்து நின்றான்.

சட்டென ஒற்றை கள்வன் தன் வேல் கம்பை ஓங்கி பிடிக்க, படை வீரர்களின் கரங்கள் ஒரே நொடியில் "ஸ்ரிஈஈஈல்ல்ல்......" என்ற சத்தத்துடன் தன் உடை வாளை எடுத்தன. காலாட்படையின் கேடையங்கள் பேரொளியுடன் அரண் போல மாற, அவர் கைகளிலிருந்த வேல் முனைகள் கள்வனின் மார்பை குறி பார்த்து இருந்தன. இளவரசனின் ஒரு இசைவு மட்டும் கிடைத்தால் கள்வன் உடல் முழுதும் வேல்களும் வாள்களும் ஒரு நொடியில் கூறு போட்டு விடும். ஆனால் இளவரசன் இசையவில்லை இன்னும் பொறுமையே காத்தான். கள்வன் இவை எதையும் பொருட்படுத்தாமல், தன் வேல் கம்பின் கூரிய முனையால் , காலாட் படையின் ஒரு எல்லை முதல் அது நீண்டு முடியும் மறு எல்லை வரை , காற்றில் ஒரு கொடு கிழித்தான். பின் , தன் வேலை மீண்டும் மண்ணில் சட்டென ஊன்றினான்.

தன் முன்பிருந்த, படை முழுதும் தன் பார்வையை செலுத்தியவாறு,

" நீவிர், திருக்காவூர் பாலையை அடைந்துள்ளீர்... இப்பாலையின் காளையன் , கட்டியங்கன் நான். இப்பாலையை கடக்க எண்ணினால், உங்கள் உயிர் மட்டுமே உமது சுமையாயிருக்க வேண்டும். நீர் அணிந்துள்ள ஆபரணங்கள், கவசங்கள், குண்டலங்கள் அனைத்தையும் ஒரு மூட்டையில் இட வேண்டும், நீர் கொண்டு செல்லும் கிழங்கு கீரை ஏனைய உணவு பொருள்களில் உம் தேவையை மிஞ்சிய அனைத்தையும் இரண்டாம் மூட்டையில் இட வேண்டும், அவை இந்நில மக்களுக்கு சொந்தம். நீர் சுமக்கும் கோழி, ஆடு ஏனைய கால்நடைகள் எங்கள் ஓநாய்களுக்கு சொந்தம். உம் குதிரைகளில் கால் பங்கு இந்நில புலிகளுக்கும் , நரிகளுக்கும், எச்சங்கள் வல்லூருகளுக்கும் சொந்தம். இதை நீர் பறி என்று எடுப்பீராயின் பறி, இல்லாதவர்க்கு இருப்பவர் செய்யும் நெறி என்று எடுத்தால் நெறி , அது உம் பாடு. இதற்கு நீர் ஒப்புக் கொண்டால், இப்பாலையை நீர் கடக்கும் வரை உமக்கு நாங்களே காவல். "

அவன் சொல்லி முடிக்கவும், படைஎங்கும் சிரிப்பு சத்தம் எழத் தொடங்கியது. பூபதியும் நகைத்து விட்டு தொடர்ந்தான்,

" கள்வனே, நீ இப்போதே உன் வேலை, எம் மன்னனின் காலடியில் வைத்து , மண்டியிட்டால், உன் உயிருடன் , நீ முன் சொன்ன அனைத்து உயிர்களும் பிழைக்கும். உனக்கு கண் தெரியுமென்று நினைக்கிறன். உன் முன் உள்ள படைகளை பார். இத்தேரின் மேல் பறக்கும் கொடியிலுள்ள சிங்கம், காட்டின் மன்னன். அதை சின்னமாக கொண்டு ஆண்டாண்டு காலமாய் ஆட்சி புரியும் , எங்கள் இளவரசன் இந்திராதித்தர், இந்நாட்டின் மன்னன். அவர் பாதம் பணிந்து உன் பாவம் கழுவிக் கொள்.."

பூபதியின் இந்த மிரட்டலை கேட்டு சற்றும் அசராதவனாய் கட்டியங்கன் பதிலுரைத்தான்,

" மருதபுரியாரே.. உமக்கும் கண் தெரியுமென நம்புகிறேன் , சற்று பாரும். இது சோலைகள் நிறைந்த காடும் அல்ல, கோபுரங்கள் நிறைந்த நாடும் அல்ல, இந்த பாலையில் எங்களுக்கு எவரும் மன்னனும் அல்ல. "

பூபதி சினம் கொண்டு தன் வாளெடுக்க, இளவரசன் அவனை தடுத்தான். நிலையை கண்டு சுதாரித்த வெட்டூர் காளையன் கார்கோடன் இளவரசனிடம், " மன்னா.. என்ன பேச விடுங்கள். நான் அவனிடம் தனியாக பேசி அவன் மனதை மாற்றுகிறேன்."

" கள்வர்கள் தனி சதி செய்ய நாங்களே கூடம் அமைத்து தர வேண்டுமோ.. " என்றான் பூபதி இடைமறித்து.

" நான் தான் எல்லாமே சொல்லி விட்டேனே, அவர்கள் இருப்பிடம் செல்லும் வழியை காட்டியது போதாமல் உங்களுடன் வேறு வருகிறேனே.. என்னை நம்ப மாட்டீர்களா..? "

பூபதி ஏதோ சொல்ல முன்வர, இந்திராதித்தன் முந்திக் கொண்டான், " நம்ப மாட்டீர்களா பிரபு.. என்று அழைக்க வேண்டும். நீ இன்னும் கள்வனல்ல, நாட்டின் பிரஜை நெறி தெரிந்து பேசப் பழகு.. நீ சென்று பேசலாம்.. "

" மன்னா.. தனியாக பேச வேண்டாம் இங்கிருந்த படியே நம் எல்லார் முன்னிலையில் பேச சொல்லுங்கள்.. இது என் தாழ்வான கருத்து.. " என்றான் பூபதி., அவன் இன்னும் எந்த கள்வனையும் நம்ப தயாராக இல்லை.

சில நொடி சிந்தித்த இளவரசன், " அப்படியே ஆகட்டும், நீ இங்கிருந்தே பேசலாம் " என கார்கோடகனை பணித்தான்.

வேறுவழியின்றி கார்கோடகன் அங்கிருந்த வாறே பேசினான்,

"கட்டியங்கா.. இந்த நிலத்தில் இனியும் நமக்கு வாழ்வில்லை.. உன் கௌரவத்தால் உன் இனத்தை அழித்து விடாதே. பெரும் பாலைகளே தோற்று வீழ்ந்து விட்டன..., உன்னுடையது சிறிய பாலை தான். உன்னால் பெரும் ராஜாங்கத்தை எதிர்க்க முடியாது, என் சொல்லை கேள், உன் சந்ததி தழைக்கும்."

" பாலை கள்ளி சோலையிலும் பூக்காது கார்கோடா.. பெரும் பாலைகள் நெஞ்சில் காயத்துடன் வீழ்ந்ததையும் நான் அறிவேன், நீ எங்கள் முதுகில் குத்தியதையும் நான் அறிவேன். என்ன விலை கொடுத்தார்கள்.. மருத மாட வீடுகளா.. இல்லை கொழிக்கும் களனிகளா.. எதில் உன் மனதை பறி கொடுத்தாய்.."

" நான் சொல்வது புரியாமல்.."

" நிறுத்தலாம்.. உம்முடன் என் பேச்சு இல்லை. நீ இன்னும் ஒரு காளையன், பறி முடிந்ததும் விருந்தில் கை நனைத்துக் கொள். " அவனை சிறிதும் சட்டை செய்யாமல், "என் கேள்விக்கு என்ன பதில்.. ஒத்துக் கொள்கிறீர்களா..? " என்றான் கட்டியங்கன் முன் திரண்ட படையை நோக்கி..

" ஒத்துக் கொள்ளவில்லையெனில்.....? " இளவரசன் குரல் பிரம்மாண்டமாய் ஒலிக்க.. படை வீரர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

" நீவிர்... சூறையாடப்படுவீர்ர்ரர்ர்...... " என்ற கட்டியங்கனின் முழக்கம் அந்த படை நெடுகிலும் ஒலிக்க.. அவர்களின் ஆரவாரம் அடங்கி தான் போனது. சொல்லி முடித்து விட்டு வந்த திசை நோக்கி செல்லலானான் அவன்.

" அவனை கொன்று விடுங்கள்... பிரபு.. " என்றான் கார்கோடகன்.

" ஒப்பந்தம் பேச வந்தவனை கொள்வது ராஜநீதியும் அல்ல... ராஜநீதி மீறும் அளவு இவன் அச்சுறுத்தும் பாகைவனும் அல்ல.. " என்றான் இளவரசன்.

" மன்னா.. உங்களுக்கு புரியவில்லை. இவன் மற்றவர்கள் போல அல்ல.. இவன் தந்திரக் காரன். இவனை அவ்வளவு சுலபமாக எண்ணி விடா...." சொல்லி முடிப்பதற்குள் படையின் பின் புறமாக பாய்ந்து வந்த ஒரு அம்பு கார்கொடகனின் புடதியில் இறங்கி நாவை கிழித்து வாய் வழியே வெளி வந்தது.. அவன் பிணமாக தன் குதிரையிலிருந்து சரிந்து விழ, படை எங்கும் சச்சரவு அனைவரும் பின் நோக்கி பார்க்க அங்கே கள்ளி புதர்களை தவிர ஏதுமில்லை. அனைவரின் பார்வையும் கட்டியங்கன் மேல் திரும்ப அவன் நெடுந்தொலைவு சென்று மறைந்திருந்தான்.

இளவரசன் கண்கள் சினத்தில் சிவந்தன.. இப்போதே இந்த பாலையை தரை மட்டமாய் நசுக்க வேண்டுமென தோன்றியது அவனுக்கு. அவன் அடுத்த அடி முன்வைக்க கட்டளை இட்ட வேளை, " டம்ம்ம்..." என ஒரு பறையோசை பின் பக்கமிருந்து கேட்டது, அந்த இடத்தை நோக்கி பூபதி அம்பு எய்ய.. மீண்டும் மௌனமானது.. அடுத்த நொடி கிழக்கு திசையில், "டம்ம்ம்ம்.. " என மற்றொரு பறையோசை கேட்க பல அம்புகள் சத்தம் வந்த திசையை துளைத்தன, ஆனால் அங்கு கள்ளி புதர்களை தவிர வேறு ஏதுமில்லை. அடுத்த சில நொடிகளில் எல்லா திசைகளிலும், பறையின் ஓசை காதை கிழிக்க தொடங்கிற்று, கொடும் பறை கேட்டிராத அந்த மருத நில மக்களின் மனம் காரணமின்றி பதறிற்று.. கோபம் தலைக்கேற.. இளவரசன் சில வீரர்களை இறங்கி சென்று , பார்க்கும் படி பணித்தான்.. வீரர்கள் சத்தம் கேட்ட புதர்களை வேல் முனையில் நெருங்கவும் , ஒரே நொடியில் அனைத்து சத்தங்களும் அடங்கி நிசப்தமானது,, வீரர்கள் புதர்களை சல்லடை போட்டு வெட்டி அப்புறப்படுத்த.. புதர்களின் கீழே இருந்த பதுங்கு குழிகள் தெரிந்தன.. அவற்றினுள் பறைகளும் குச்சிகளும் மட்டும் கிடந்தன..

"தளபதியாரே.. இங்கு பதுங்கு குழிகள் உள்ளன.. அவை சுரங்கன்களாய் இருக்குமென நினைக்கிறேன், நாங்கள் வந்ததும் எல்லாவற்றையும் போட்டு விட்டு ஓடி விட்டனர்.. இந்த சுரங்கம் எங்கு கொண்டு சேர்க்கும் என தெரியவில்லை.. " என கத்தினான் வீரன் ஒருவன்.

" நேரில் நின்று மோத தெரியாத பேடி பயல்கள்.. " என முனகினான் மற்றொருவன், முனகியவன் முடிப்பதற்குள் அவன் கண்ட காட்சி அடுத்த வார்த்தையை தொண்டையிலேயே உறைய வைத்தது.

அவர்களுக்கு நேர் எதிரில் சற்று தொலைவில், பாலை கள்ளர்கள் அணிவகுத்து நின்றனர். அவர் கைகளின் வேல்கம்புகள் வான் நோக்கி நீண்டிருந்தன.. இவர்களை நோக்கி அவர்கள் வெறியுடன் ஓடி வந்து கொண்டிருந்தனர். அத்தனை நேரம் தங்களை பதறடித்த கள்வர்களின் மேல் வீரர்கள் கொலை வெறியில் இருந்தனர், தங்கள் மன்னரின் கட்டளைக்கே காத்திருந்தனர்.

இளவரசன் இதழிலும் புன்னகை தவழ்ந்தது.
" பூபதி .. எலிக் கூட்டம் வருகிறது பார்.. " என கூறி விட்டு தன் கையை உயர்த்த.. சங்கு "பூம்ம்மம்மம்ம்ம்ம்....." என ஒலித்தது. காலாட்படையினர் அடுத்த கணம் தங்கள் வேலுடன் கள்வர்களின் இதயம் கிழிக்க மின்னலென பாய்ந்தனர்.. அவர்களுடன் ஒப்பிடும்போது கடுகளவே ஆயினும் கள்வர்களும் சளைக்காமல் அவர்களை நோக்கி ஓடினர். இரு புறமும் கோசங்களும் வீராவேசங்களும் விண்ணை பிளந்தன.

இளவரசன் நடப்பதை தன் ரதத்திலிருந்து பார்த்த வாறே இருந்தான்,
" இளவரசே ஏன் குதிரை வீரர்களை அனுப்பாமல் நம்முடன் வைத்திருக்கிறீர்கள்.." என்றான் பூபதி..

" இந்த சொற்ப படைக்கு காலாட்படையே போதும் தளபதி, குதிரை வீரர்கள், தம் பங்கிற்கு ஒரு அஸ்திர மழை பொழிந்தால் மட்டும் போதும் ' எனக் கூறி சமிக்சை செய்ய., குதிரை வீரர்கள் அனைவரும் தன் வில்லில் அம்புகளை ஏந்தி, வான் பார்த்தவாறு இளவரசன் கட்டளைக்கு காத்திருந்தனர்.

" மன்னா அம்புகளை விட்டால், நம் வீரர்களும் வீழ்வார்களே.. "

" இல்லை நண்பா.. என் கணக்கு படி, இந்த அம்புகள் நம் வீரர்களை கடந்து கள்வர்களின் தலையிலே பொழியும் நடப்பதை பார்.."

அவன் சொல்வது சரியாக தான் இருக்குமென்று பூபதி உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். இளவரசனும் பாலை கள்வர்கள், அவன் மனதில் வரைந்த எல்லையை மிதிக்க காத்திருந்தான், எல்லையை அவர்கள் தொட்டதும் அம்பு மாரி பொழியும். கள்வர்கள் அந்த எல்லையை நெருங்கி விட்டிருந்தனர், அவன் கை விரல்கள் ஆணையிட தயாராயிருந்தன. அந்த கணம், அவன் வாழ்விலே கண்டிராத ஒரு விசித்திர சம்பவம் நடந்தது.. உத்வேகமாய் ஓடிவந்த கள்வர்கள், சட்டென நின்றனர், பின் களைந்து வந்த திசை நோக்கி புற முதுகிட்டு ஓட தொடங்கினர்.. அவர்கள் ஓடுவதை பார்த்து உற்சாகமடைந்த காலாட்படையும் இன்னும் வேகமாக துரத்திக் கொண்டு ஓடினர், கள்வர்கள் பல்வேறு திசைகளில் பிரிந்து ஓட , படையும் பலவாய் பிரிந்து அவர்களை துரத்திற்று..

" மன்னா.. பயன்தோனிகள்.. எப்படி ஓடுகிறார்கள் பாருங்கள். உங்கள் அம்பு மழைக்கு இன்று வேலையில்லை.. " என்றான் பூபதி நகைத்த படியே.

இளவரசன் இதழ் நகைத்தாலும், அவன் மனம் ஏற்கவில்லை, இதில் ஏதோ விஷயம் இருப்பதாகவே தோன்றியது, பயந்து ஓடுமளவு கோளைகளாக கள்வர்கள் இருபரபார்கள் என அவனுக்கு தோன்றவில்லை. அவனுக்கு ஊகம் போலவே நடக்கவும் செய்தது, சில நொடிகளில், குதிரை வீரர்களின் குதிரைகள் ஏதோ ஆபத்தை உணர்ந்தது போல, சப்தமிட ஆரம்பித்தன. எஜமானர்களின் பேச்சை கேட்க மறுத்தன. குதிரை வீரர்கள அவற்றை கட்டுக்குள் கொண்டு வர எண்ணிய வேளை, அவர்களை சுற்றிய பதுங்கு குழிகளில் இருந்து ஓநாய்கள் சரசரவென வெளி வர தொடங்கின.. அவற்றின் தொங்கிய நாக்கும் ஓலமும் குதிரைகளை நிலை குலைய செய்தன, வீரர்கள் அம்புகளால் ஓநாய்களை குறி வைத்த வேளை, ஒநாய்களுக்கு பின் வெளி வந்த கள்வர்கள் வீரர்களின் மார்பை குறி வைத்தனர், ஓநாய்களை தாக்கவா, அல்லது கள்வர்களை தாககவா என யோசிப்பதற்குள், ஓநாய்கள் தாவி குதிரைகளின் குரல் வலைகளை கடித்து எறிய, நிலமெங்கும் குருதி புனலாய் பெருக்கெடுத்து குதிரைகள் ஆங்காங்கே பொத்தென விழுந்தன, மற்ற குதிரைகள் உயிரை காப்பாற்றிக் கொள்ள, பல திசைகளிலும் சிதறி ஓடின.. தேன் கூட்டில் கல்லெறிந்ததை போல, குதிரைப் படை சிதறியது, பாதி குதிரைகள் வீரர்களையும் தங்களுடன் சேர்த்து இழுத்து சென்றன, மீதி அவர்களை தள்ளி விட்டு தெறித்து ஓடின.. அந்த இடம் முழுதும் நடப்பது தெரியாத வண்ணம் புழுதி எழுந்து, புகை மூட்டமாக மாறியது. ஆங்காங்கே மரண ஓலமும், ஓநாய்களின் ஊழையும் அம்புகளும் வாள்களும் சதைகளை பிளக்கும் ஓசைகளும் கேட்டவாறே இருந்தன. சில ஓநாய்கள் இளவரசனின் தேர்களை இழுத்த குதிரைகளை தாக்க , தேரோட்டி நிலை தெறிந்து தேரை கிளப்பி சிறிது தூரம் சென்று விட்டான். இறந்த குதிரைகளை தேரிலிருந்து பூபதி சாமர்த்தியமாக வெட்டி விட்டான். இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் இளவரசன் தன் உடை வாளுடன் தேரிலிருந்து இறங்கி, புழுதி மூட்டத்தை நோக்கி ஓடினான். அவன் பின்னே பூபதியும் ஓடினான். அவர்கள் சென்ற சில நொடிகளில் அங்கு எல்லாம் ஓய்ந்துவிட்டது. புழுதி மூட்டமும் நீங்கியது, ஆங்காங்கே வீரர்கள், குதிரைகள் ஓநாய்களின் உடல்கள் குவிந்து கிடந்தன ஆனால் ஒரு கள்வனையும் பிணமாக கூட காண முடியவில்லை. இளவரசனுக்கு சினம் பொங்கி கண்ணை மறைத்தது. தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற வெறி கண்ணீராய் மாறி சினத்தில் சிவந்த கண்களை குளிர்வித்தது. அப்போது தான் தன் காலில் பட்ட ஈரத்தை கவனித்தான். பின்னால் இருந்த உணவு வண்டியை பார்த்தான், அங்கே இருந்த தண்ணீர் கலன்கள் கள்வர்களால் சூறையாடப்பட்டு உடைந்திருந்தன.. தண்ணீர் நிலம் முழுதையும் நனைத்திருந்தது. அவனுக்கு எல்லாம் விளங்கிற்று.

அவன் இதழ்களில் தானாக சிரிப்பும் உதயமானது, அவனது இத்தகைய விசித்திர செயல் கண்டு குழம்பிய பூபதி, " மன்னா.. என்ன ஆயிற்று ஏன் சிரிக்கிறீர்கள் ..? " என்றான் பதற்றத்துடன்.

" இது எலி வேட்டை அல்ல பூபதி, மதங்கொண்ட யானை வேட்டை, ஆம் மதங்கொண்ட ஆனை வேட்டை .." மேலும் சிரித்தான்.

P.s: hi guys .. thank u so much for your support, pls share your thoughts about this update on comments, if u have any logical doubts about the war incidents please feel free to ask. Happy fathers day to all :)

Continue Reading

You'll Also Like

195K 8.7K 41
கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தா...
7.9K 89 22
பொன்னியின் செல்வன்
2 0 1
பரத்தையர் வீடு தங்கிய பேகனை, கபிலர் மீட்டு வந்த புறநானூற்று கதை
12 0 1
காதல் ஜாதி மதம் நிறம் காலம் அனைத்திற்கும் அப்பாற்பட்டது