கொற்றவை

By d-inkless-pen

5.2K 589 888

சுடும் சூரியனும், நீர் காணா நிலமும், முள் படர்ந்த செடிகளும் சூழ்ந்திருக்க , ஓயாது ஊளையிடும் ஓநாய்களுக்கும், உ... More

முன்னுரை
ஆடிக் கொடை
நடுநிசி கூட்டம்
ஒற்றை கள்வன்
வேட்கை
கொற்றவை

இளவரசன்

417 72 111
By d-inkless-pen

பாலை மண்ணை பொன்னென உருக்கிடும் வேட்கையில் கதிரவன் வான் வெளியின் உச்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தான், நிழலில் மட்டுமே வளரும் பாலை மரங்களின் இலை இழந்த கிளைகளின் மேல் வல்லூறு கூடமாய் அமர்ந்து இளைப்பாரிக் கொண்டிருந்தன, கொடும் வெயிலிலும் கொடியது கொடும் பசி ஆயிற்றே, விரையும் சூரியன் உச்சத்தை அடையும் முன்னே தேடினால் தான் இரை, இல்லையேல் இவர்களே மாலை நரிகட்கும் நாய்கட்கும் இரையாக வேண்டியது தான். ஆனால் அவர்கள் வாழ்விலே சிறந்தது இந்நாள் என்று அந்த வல்லூறுகள் அறிந்திருக்கவில்லை. உண்ண தெகட்டும் அளவு உடல்கள் இன்று இன்நிலத்தில் குவியப் போகின்றன , உதிரத்தின் மழையில் நனைய போகிறோம் என்று அவை அறிந்திருக்கவில்லை. பசியின் எச்சத்தை மட்டுமே தின்று வளர்ந்த அவற்றிற்கு மனித இச்சைகளின் எச்சம் எவ்வளவு ருசிகரம் என்பது இன்னும் சில கணங்களில் தெரிந்துவிடும். உணவு தேடி அவை புறப்பட எத்தனித்த வேளை, அவர்கள் காதை பிளந்தது அந்த சங்கின் நெடிய ஒலி. பறைகளுக்கு மட்டுமே பழக்கப்பட்ட அந்த நிலம் சங்கின் கூசிடும் ஒலியில் பதறிற்று , அதனை தொடர்ந்த அந்த காலடி சத்தம் , குறிஞ்சியின் குன்றுகளில் ஒன்று எழுந்து பாலையை நோக்கி விரைவதை போன்று இருந்தது . நகரும் நொடிகளில் அந்த சத்தம் "தொம்....... தொம்....." என பெருகிக்கொண்டே வந்தது, அறுநூறு கால்கள் ஒரே பொழுதில் பூமித் தாயின் வயிற்றில் ஓங்கி மிதித்ததால் நிலமே சிறிது அதிர்ந்தது. கண் எட்டிய தொலைவில் தெரிந்த கானல் நீர், எழும் புழுதியில் கலந்து காவி வெள்ளமென மாறி கரையெங்கும் பெருகியது. அந்த புழுதி புனலில் மூழ்கியவாறு காலாட்படை கண் எட்டும் தூரம் எங்கும் நிறைய , அவர்களுக்கு பின்னே குதிரை படை மெல்ல வெளிவர தொடங்கியது, குதிரைகள் காலாட்படையின் கேடயங்களால் மறைக்கப்பட, குதிரைவீரர்கள் காலாட்படையின் தோலில் ஏறி மிதந்து வருவது போல தோன்றினர். இவற்றையெல்லாம் கண்டு மெய்மறந்த கண்களுக்கு மோட்சம் கொடுப்பது போல இருந்தது குதிரை வீரர்களை தொடர்ந்து வெளிப்பட்ட அந்த தங்க ரதம், எட்டு குதிரைகள் இழுத்து வர, வெண்ணிலவை வார்த்து எடுத்ததை போன்ற ரதத்தில், தங்கமும் ரத்தினங்களும் சுட்டெரிக்கும் சூரிய ஒளியில், பகல் பொழுதில் வழிதவறிய விண்மீன்களாய் ஜொலித்தன.

மூன்று புறமும் எதிரிகள் தாக்கா வண்ணம் ரதம் மூடப்பட்டு இருந்தது, இளவரசனை முன் நின்று சாய்க்கும் வீரன் இல்லாத படியால் முன் புறம் மட்டும் திறந்திருந்தது. சந்திரன் மானுடனாய் அவதரித்தால் இவனை போன்றுதான் இருப்பான் என சொல்லலாம், அத்தனை அழகு இளவரசன் இந்திராதித்தன், அவன் சிகை தோள்களில் பரவி இருக்கும் நெற்றியில் திலகம், செவ்வானில் சூரியன் போல அவன் தேகத்தின் நிறத்துக்கு எடுப்பாய் அமைந்திருக்கும். வாள் போன்ற நெடிய புருவங்களின் கீழ் கருநீல கண்கள் , மங்கையரை மயக்கிடும், பகைவர்களை எரித்திடும். அவன் நண்பனும் தளபதியுமான பூபதி ஒருபுறம், அவன் அரணாய் அமைந்திட , நிமிர்ந்த நெஞ்சுடன் இன்னுமொரு யுத்தத்திற்கு இல்லை வெற்றிக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தான். இப்பெரும் வீரர்களின் மத்தியில் அவர்களுக்கு சற்றும் சம்பந்தமிலாத ஒரு சிறுவனும் வந்துகொண்டிருந்தான், அவன் தேரோட்டியின் உதவியாளன், குதிரைகளுக்கு கொள்ளு வைப்பதும் உணவு சமைப்பதுமே அவன் வேலை. இளவரசனுடன் இவன் கிளம்பி இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது. பல போர்களை கடந்து விட்டான், ஆனால் எந்த போரையும் பார்த்ததில்லை. போர் சங்கு ஊதியதும் ரதத்தின் பின்புறமுள்ள உணவு கொண்டு செல்லும் வண்டிக்குள் ஒளிந்துக்கொள்வான். வெளிவரும்போது போர் முடிந்து இளவரசன் தோலில் வாகையுடன் திருமால் போல நின்று கொண்டிருப்பான். இதுவே வாடிக்கை. இந்த பயணங்களில் இவனது ஒரே பொழுது போக்கு இளவரசன் தளபதியுடன் பேசுவதை ஒட்டு கேட்பது தான். இன்றும் அப்படிபட்ட ஒரு உரையாடல் நிகழ, காதை தீட்டியவாறு அமர்ந்திருந்தான் அவன்.

" இளவரசே.. கள்வன் சொன்ன பாதையில் வெகு தூரம் வந்தாயிற்று இன்னும் ஒரு உயிரை கூட காண முடியவில்லையே .. கள்வன் ஏதும் சூழ்ச்சி செய்கிறானா.. அவனை நம்பலாமா.." என்றான் தளபதி.

சூழ்ச்சி செய்யும் அளவு இந்த கள்வர்கள் புத்தி சாலிகள் இல்லை பூபதி.. கடந்த யுத்தத்தில் தான் பார்திருபீரே.."

" ஆமாம் ஆமாம், செம்மறி ஆட்டு கூட்டங்களாய் நாம் விரித்த வலையில் வந்து விழுந்தனர் மூடர்கள். இருபுறமெங்கும் நம் குதிரை வீரர்கள் சோளக் கட்டைகளை கொயவதை போல் அவர்களை கொய்து விட்டனர். " என்றதும் இருவரும் சிரித்தனர்.

" எனினும் உங்கள் போர்த் திறன் அருமை பிரபு.. நான்காயிரம் கள்வர்களை வெறும் ஆயிரம் பேர்கொண்டு வென்று விட்டீர்களே.. இதை காண நான் கொடுத்து வைத்திருக்கிறேன் பிரபு.."

" ம்ஹும்.." நமட்டு சிரிப்புடன் தொடர்ந்தான் இந்திராதித்தன்,

" ஆயிரம் முயல்களை அடிப்பது சிறு நரிக்கு வேண்டுமானால் சாதனையாய் இருக்கலாம். சிங்கத்துக்கு சாதனை என்ன தெரியுமா.. மதங்கொண்ட யானையின் உச்சந்தலை ஏறி , முழு பலம் திரட்டி ஓங்கி நச் என்று அடிக்கையில் பொடதி நரம்பறுந்து , சதை பிண்டமாய் மண்ணில் விழுமே, அந்த யானையின் தலைக் கறியை மட்டும் தின்று விட்டு எச்சத்தை கழுதை புலிகளுக்கு விருந்தளிக்குமே அந்த வீரம் தான். "

அவன் கண்களில் சுடர் விட்ட கனலை பார்த்த பூபதி, " ஏன் இத்தனை கோபம் மன்னா. " சிறிது தயங்கியவன், மன பலம் முழுதும் திரட்டி தொடர்ந்தான், " நான் கேட்பது உரிமை மீறல் தான், இருந்தும்.. "

"கேட்டு விடும்.. "

" மன்னர் தாங்கள் மீது மிக்க கவலை கொண்டுள்ளார், தங்கள் தமையனார் பட்டாபிசேகம் குறித்து எத்தனையோ ஓலை அனுப்பியும் , நீங்கள் பதிலேதும் அளிக்கவில்லை. படை உதவி அளிக்க உங்கள் தமையனார் முன் வந்தும் அவருக்கும் நீங்கள் பதில் அனுப்பவில்லை, ஏன் இத்தனை கோபம் மன்னா.. யார் மேல்.."

" என் மேல் கோபம் பூபதி, தலை மகனாய் பிறவாது போனேனே என் மேல் கோபம். வயதில் மட்டும் என்னை முந்திய அவனுக்கு பட்டாபிசேகம் செய்ய துடிகிறாரே என் தந்தை அவரின் மேல் கோபம், திறமைக்கு மதிப்பளிக்காமல் வயதுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த சட்டத்தின் மேல் கோபம்."

" இளவரசே.. உங்கள் எண்ணம் அரியனையாயின் உம்மை தடுக்க இந்நாட்டில் எவர் உள்ளார்."

" நண்பா.. என்னை, தமையனை கொன்று தந்தையை சிறையிலடைக்கும் அளவு அரியணை மோகம் கொண்டவன் என்று எண்ணினாயா..?"

" இளவரசே நான் அவ்விதம் கூற வில்லை.... நான்.. ... என்னை மன்னியுங்கள்.."

" பிறப்பால் கிடைக்கும் அந்த அரியணை எனக்கு வேண்டாம், என் அரியணையை நானே உருவாக்கிக் கொள்வேன், இந்த பிரபஞ்சம் முழுதும் வென்று, அளப்பரிய பல சாதனைகள் கண்டு , இன்னும் ஆயிரமாண்டுகள் அழியாத வரலாற்றின் அரியணையில் முடி சூடா மன்னனாய் திகழ்வேன், அதுவே என் வேட்கை, அது முடியும் வரை ,எவர் முகத்திலும் நான் விழிப்பதாய் இல்லை. "

அங்கு ஒரு சிறு அமைதி நிலவியது, நிலையை மாற்ற விரும்பி பூபதி, " விடுங்கள் இளவரசே.. எங்கள் மனதிலே நீங்கள் மட்டுமே மன்னர். நீங்கள் இம்மூவுலகையும் கட்டி ஆள்வீர், எனக்கு நம்பிக்கை இருக்கிறது.. " எனக் கூறி முடிக்கையில்

" நீ என் அருகில் இருந்தால் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கும் உள்ளது நண்பா.. " என இளவரசன் புன்னகைத்தான்.

" அந்த யுத்தமாவது முயல் வேட்டையாயிருந்தது, இன்று எலி வேட்டை போலவே.. கள்வர்களை தேடி அலைய வேண்டும் போலவே.." பூபதி நகைத்தான், ஆனால் இளவரசன் முகத்தில் சிரிப்பில்லை, அவன் கண்கள் எதையோ நிலைகுத்தி பார்த்துக் கொண்டிருந்தன. அவன் கைகள் எதோ சமிக்ஜை செய்ய, படையை நிறுத்த சொல்லி சங்கு ஓங்காரமாய் ஒலித்தது.

இதுவரை இவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த சிறுவன் திடீரென ஒலித்த சங்கு ஒலியால் பதறி, எதிரி படைகள் வந்து விட்டனவோ என நோக்கினான். அங்கே படை ஏதுமில்லை, ஒரே ஒரு கள்வன் தான் தொலைவில் வந்து கொண்டிருந்தான். முகமெங்கும் மறைத்திருந்தான், அடேயப்பா என்னே உயரமாயிருக்கிறான், ராஜ குதிரைகளை விட உயரமாஇருப்பான் போல.. கவசம் ஏதும் அணியாமலே நல்ல கருங்கல்தூன் போல இருக்கிறானே, கவசம் மட்டும் அணிந்தால் .. அது சரி இவன் உடலை போர்த்த கவசங்கள் ஏது.. இவன் எதற்காக தனியாக வந்திருக்கிறான், சரணடைய போகிறானோ.. நல்ல வேளை, இன்று போர் இல்லை போலும், என்று எண்ணியவாறு . நடப்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான் அந்த சிறுவன்.

P.s: hi guys .. hope you like this update, please share your thoughts on the comments, thank u so much for the support.

Continue Reading

You'll Also Like

2 0 1
பரத்தையர் வீடு தங்கிய பேகனை, கபிலர் மீட்டு வந்த புறநானூற்று கதை
882K 86.9K 158
Arjun and shalini tie the knot in an arranged marriage. what surprises does the life has for them . How do they find their love for each other ? or W...
555K 39.8K 136
Hey Bookworms!!!❤️ This Story was about a Arrange Marriage....Who got Married on Unusual Circumstances as One was excited about new Beginnings and...