அலைபாயுதே (Completed)

By Bookeluthaporen

11.7K 446 87

ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ண... More

அலை - 2
அலை - 3
அலை - 4
அலை - 5
அலை - 6
அலை - 7
அலை - 8
அலை - 9
அலை - 10
அலை -11
அலை - 12
அலை - 13
அலை - 14
அலை - 15
அலை - 16
அலை - 17
அலை - 18
அலை - 19
அலை - 20
அலை - 21
அலை - 22

அலை - 1

2K 26 2
By Bookeluthaporen




🎵🎶

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே...
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே...
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்...
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்...

இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்...
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்...
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்...
செந்தாமரை செந்தேன் மழை...
என் ஆவி நீயே தேவி...

ராஜ ராஜ சோழன் நான்...
எனை ஆளும் காதல் தேசம் நீதான்...
பூவே காதல் தீவே...

🎵🎶

வானத்து இருளானது அன்று அதிகமாய் கருமை பூசி நின்றது. நட்சத்திரங்கள் அங்கும் இங்கும் போட்டி போட்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்க, வான் அவன் அதனை தனக்கு சாதகமாக்கி தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டான்.

பாடல்கள் ஒரு பக்கம் மனதை வருடினாலும், அவள் சிந்தனை அந்த நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட பெருகி நின்றது. நாள் முழுவதும் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் அந்த சிரிப்பு, அவள் அழகிற்கு அழகு சேர்த்தது.

அவ்விருட்டிய இடத்தினில் எங்கிருந்து தான் வந்தனவோ, அந்த விட்டில் பூச்சிகள். பறந்து அவளிடம் வந்து அடைக்கலமாக, வைர வளையல்களாக மின்னின அவளது அழகிய கைகள்.

அழகிய அந்த பெரிய கண்களை, இயற்கையே கண் வைத்திடுமோ என்ற அச்சத்தில், காலையில் அவள் தீற்றிருந்த மை கலைந்து திருஷ்டி பொட்டானது.

நீண்ட நெடிய பின்னப் பட்டிருந்த அவளது ஆசை கூந்தல், காற்றின் திசைக்கெல்லாம் இங்கும் அங்கும் ஆடிக்கொண்டே இருக்க, பெண்ணின் வெண்டை விரல்கள் அதனை சுகமாக ஒதுக்கி விட்டுக் கொண்டிருந்தது.

வான் சுற்றும் திங்கள் இன்றும் அவளை பிரிய மனமே இல்லாமல், இயற்கை அன்னைக்கு அவளது முகத்தை தன்னுடைய கதிர்கள் மூலம் மிளிரச் செய்ய,

என்ன திங்கள்... அவள் அழகு அந்த திங்களையே விழுங்கிவிட்டது. வெண்ணிறமாய் மிளிரிய கன்னங்கள், உதட்டு சாயம் பூசாத அவளது செவ்விதழ்களை எடுப்பாய் காட்ட, பூங்காற்று அவள் தேகத்தையும் இதழ்களையும் வருடிச் செல்ல, சிலிர்த்து அடங்கியது அவள் மேனி.

மங்கையவளின் மேனியை கடந்து சென்ற தென்றலுக்கோ அத்தனை கர்வம். அவளை உரசி சென்றதோடு இல்லாமல், தன்னுடைய தொடுகைக்கு சிலிர்க்கவும் செய்த குதூகலத்தோடு துள்ளி ஓடியது. எழிலாய் உலகம் மறந்து அமர்ந்திருந்தவள் கால்கள் மரத்துப் போயிருக்க, அருகே இருந்த மரத்தினை பிடித்து இரண்டு அடி நொண்டியபடியே நடந்து ரத்த ஓட்டத்தினை சீராக்க முயன்றாள்.

ஓரளவிற்கு ரத்தம் கால்களில் பாய்ந்திருந்தாலும், இன்னமும் கால்கள் இருப்பதன் அடையாளமே இல்லை. கால்களை முன்னும் பின்னும் ஆட்டி ஆட்டி பார்க்க, ஒன்றுமே தெரியவில்லை. ஆனால் அதையும் ரசித்தவள், மீண்டும் அப்படியே அமர்ந்து கால் சட்டையை தூக்கி, கால்களைப் பார்த்தவள் இதழ்களில் சிரிப்பு வர, ஒற்றை விரலை வைத்து அழுத்த, ஏதோ உயிரற்ற பொருளை தொடுவது போல் உணர்ச்சியே இல்லை.

மீண்டும் அழுத்தி பார்க்க, கால்களின் உள்ளே ஏதோ மீன் ஊறுவது போல், மெல்ல உணர்வு பெற்று கூச்சம் உண்டானது. வாயினை திறந்து சத்தமில்லாமல் சிரிக்க, மீண்டும் அதையே செய்து மறுபடியும் சிரிப்பு வர, அந்த உணர்வை பகிர தன்னிச்சையாக பக்கம் திரும்பி பார்த்தாள்.

ஊத காற்றும் காய்ந்த இலைகளும் மட்டுமே சுழன்று கொண்டு தன்னுடைய இருப்பைக் காட்ட, கண்களில் மின்னி மறைந்த அந்த வெறுமை, இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது ஒரே நொடியில்.

நேர அலைப்புறுதலுக்கு பிறகு மெதுவாக வெளியே வந்தவள், அங்கு நின்ற தன்னுடைய வாகனத்தை எடுத்து மீண்டும் சென்னை மாநகரை நோக்கி பயணப்பட்டாள். குறைந்தது அரை மணி நேரமாவது பயணிக்க வேண்டும், சென்னை மாநகரை அடைவதற்கே. அத்தனை தொலைவில் இருக்கும், அவள் இருந்த அவ்விடம்.

வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் அவளால் அவ்விடத்திற்கு வராமல் இருக்க முடியாது. எந்நேரமானாலும், என்ன கடின வேலைகளில் இருந்தாலும், அவ்விடத்திற்கு வராமல் அவளது அந்த வாரமே ஓடாது.

மொத்தமாய் தன்னை சுற்றி நூறு பேர் வந்து அமர்ந்திடும் உணர்வு அவளுக்கு, அதற்காகவே ஓடிவிடுவாள். இதோ இன்றும் இரவு ஏழைத் தாண்டிய பிறகு தான் வந்தது, இப்பொழுது கிளம்பும் பொழுது ஒன்பதை நெருங்கியும் விட்டது.

சென்னை மாநகரின் உச்சகட்ட சாலை நெரிசலிலிருந்து தப்பித்து, விடுதி வந்து சேரவே பத்து மணிக்கு மேல் ஆகியிருக்க, வரும் பொழுது ஒரு மெடிகலில் பான்டேஜ் டேப்பை வாங்கி முழங்கையில் ஒட்டி, மீண்டும் விடுதிக்கு வாகனத்தை செலுத்தினாள்.

பரபரப்பாக விடுதியை அடைந்தவள் கதவினைத் திறந்து வாகனத்தை உள்ளே நிறுத்த, தனக்கு பக்கவாட்டில் தன்னை துளைக்கும் பார்வையை உணர்ந்து, தலையை சிறிதும் தூக்கவில்லை அவள்.

"கேடி, என்கிட்டயே உன் வேலைய காட்டுறியா நீ?" மூக்குக் கண்ணாடியை மூக்கிலிருந்து நுனி மூக்கிற்கு இறக்கி, விடுதியின் நுழைவாயிலில் ஜம்பமாக சேர் போட்டு அமர்ந்தவர் தூக்கமெல்லாம், இருந்த தடயம் தெரியாமல் மறைந்தது.

"நம்பாத பரமு, நம்பவே நம்பாத. முக்கியமா அவளோட அப்பாவியான முகத்தைப் பாத்து ஏமாந்துடாத..." நூறு அறிவுரைகள் தனக்குத் தானே கூறி, முகத்தில் மறக்காமல் கடுமையை இறுக்கமாக பற்றிக்கொண்டார்.

"மிஸ் பரமு..." குழந்தையின் மென்மையின் குரலில் வந்தவள் முகத்தை, அதீத கோவத்தோடு தலை தூக்கி பார்த்தார் அந்த பரமு, விடுதியின் வார்டன்.

'செத்தேன்டா சிவனாண்டி!' மனதினுள் புலம்பியவள் முகம் அதிகமாக சோர்ந்திருந்தது.

பார்த்தவருக்கோ அது உண்மையாகி போக, நடித்தவளுக்கு நிம்மதி. அவரும் சுதாரித்துக்கொண்டார், "என்ன, இன்னைக்கு என்ன ட்ராமா பண்ண பிளான்? நான் அசர மாட்டேன். நீ என்ன சொன்னாலும் சரி, இன்னைக்கு உனக்கு சாப்பாடும் இல்ல, ரூமுக்கும் போக பெர்மிஷனும் இல்ல. பாய் தர்றேன், இங்கையே படுத்து வாட்ச்மேன் வேலை பார்."

அதற்கு மேல் பேச்சில்லை என எழுந்து சென்றவர், கூறியது போலவே கையில் ஒரு பாயோடு வந்தார்.

'ஆத்தி! இது சொன்னதை செஞ்சிடுச்சே...' நொந்துதான் போனாள் பெண்.

"வார்டன் மனசை மாத்திக்க முடியாதா?"

"முடியாது, அமைதியா படுடி. நான் சொன்னது சொன்னது தான்!" அதட்டியவர், அந்த மேஜையில் அமர்ந்து மீண்டும் வேலையைத் துவங்கினார்.

"ஆமா, அப்டியே அரிச்சந்திர பரம்பரை, சொன்ன வாக்கை மீற மாட்டாங்க..." புலம்பிக் கொண்டே தோளில் தொங்கிய பையை அதே மேஜையில் வைக்க, "என்ன புலம்பல்?" அதட்டினார் இவள் திட்டை கேட்காமல்.

"இங்க படுக்கவா இல்ல, ரோட்டுல படுக்கவானு கேட்டேன், மொத்த தெருவுக்கும் பாதுகாப்பா இருக்கும்ல..."

நக்கல் பேசியவள் மேல் பேனாவை எறிந்து, "வர வர உனக்கு வாய் கூடிப்போச்சு, அமைதியா படு." என்றார்.

"டிரஸ் மாத்திட்டு வரவா? இன்னைக்கு வேலை ரொம்பவே அதிகம்." அப்பாவியாக கேட்டாள்.

"வேணாம், ஆஃபீஸ் முடிஞ்சதும் நேரா ஹாஸ்டல் வானு எத்தனை நாள் சொல்றது? ஒரு நாளும் பேச்சை கேக்குறது இல்ல. அதுவும் இன்னைக்கு ரொம்பவே லேட்டா வந்துட்டு, குழந்தை மாதிரில நடிக்கிற...?" முகம் எல்லாம் கருத்து இருப்பவரைப் பார்த்து, சிறிதும் வருத்தம் வரவில்லை.

இவரை சமாதானம் செய்திடலாம், ஆனால் தன்னுடைய மனதினை முடியாதே.

"சரிங்க வார்டன், உங்க பேச்சை மீறுவேனா? சரி, பெட்ஷீட் தருவீங்களா?"

"எதுவுமில்லை." என்றார் கறாராக.

"ப்ச்! பரவால்ல, இன்னைக்கு எல்லாருக்கும் நான் ரத்தம் கொடுக்கணும்னு இருக்கு போல..." தியாகத்தின் செம்மல் அவள் வார்த்தை, நாற்காலியில் அந்த மனிதரை அமர விடவில்லை. பெண்ணின் கைகளைப் பிடித்து ஆராய்ந்தவர், போலியாக போடப்பட்டிருந்த அந்த சிறிய கட்டைப் பார்த்து பயந்தே போனார்.

"என்ன இது?"

"அது... அது வந்து... ஆஃபீஸ்ல யாருக்கோ ரத்தம் தேவைப்படுதுனு சொன்னாங்க. போனா லீவு கிடைக்கும்னு தெரிஞ்சு சும்மாவா இருப்பேன், ஓடிட்டேன்ல..." என்றவள், "என்ன, கொஞ்சம் மயக்கம் வர்ற மாதிரி இருக்கு. பரவால்ல பரமு, தூங்கி எந்திரிச்சா சரியாகிடும்."

அவ்வளவு தான், அவளை கைகளில் ஏந்தாத குறையாக அவளது அறையினுள் விட்டு கையோடு இரண்டு மசாலா தோசையை ஊற்றி, அதோடு சுட சுட தேநீரோடு வர பெண்ணுக்கு ஏகபோக குஷிதான்.

பரமுவுக்காக தனிப்பட்ட முறையில் தயாராகி இருந்த உணவினை தனதாக்கிக் கொண்டாள் பெண். பாவம், அந்த ஜீவனும் அவளது நடிப்பில் மயங்கிதான் போனார்.

இது அவளுக்கும் புதிதில்லை, அவருக்கும் புதிதில்லை. ஏழு வருடங்களாக தாரகையின் குணாதிசயங்களை அறிந்திருந்தும், ஒவ்வொரு முறையும் அவளது பொய்களில் தொலைந்துதான் போவார் பரமு.

"இனிமேல் இந்த மாதிரி எல்லாம் ரத்தம் கொடுக்காத கண்ணு. நீயே ரொம்ப சோர்ந்து இருக்க, இதுல இதெல்லாம் தேவையா?" அங்கலாய்த்து அவளுக்கு பல அறிவுரைகளை கூறிதான் வெளியில் சென்றார்.

புன்னகை தவழும் முகம் அவளிடம், அவள் ஆரோஹி! அவளது உலகம் மிக மிக சிறியது. ஆனால் ஆசைகள், உறவுகள் எல்லாம் வானளாவியது. சிறு விஷயங்களில் கூட, அவளுக்கு ஏன் என சொல்ல முடியாத அளவு மகிழ்ச்சி வந்துவிடும். உடைந்த கண்ணாடி துண்டில் கூட முகத்தைப் பார்த்து சிரிப்பவள்.

பரமு வெளியில் சென்ற நொடி, மெத்தையிலிருந்து எழுந்து அந்த அறையின் கதவை அடைத்தவள், படபடவென அனைத்து விளக்குகளையும் உயிர்ப்பித்து, உறங்குவது போல் பாவனை செய்யும் தோழிகள் மூவரையும் அடித்து எழுப்பினாள்.

"ஏன்டி, நீ ரத்தம் குடுத்தியாக்கும்?" போர்வையை உடலோடு ஒட்டி, தரையில் அமர்ந்து கேட்டாள் ஒரு பெண்.

"அதையும் நம்புது அந்த ஜீவன்." வேறொருத்தி அங்கலாய்த்தாள்.

"அதுக்கெல்லாம் முகராசி வேணும். சரி, இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் ஐட்டம் கடை கடையா ஏறி, இறங்கி வாங்கி வந்துருக்கேன். எல்லாரையும் இழுத்துட்டு வாங்க, நான் தேவையானது எல்லாம் எடுத்து வைக்கிறேன்."

ஆறு பெண்களையும் வட்டமாக அமர வைத்து மெழுகுவர்த்தி, சில்லறை காசு எடுத்து வைத்து, அந்த அறையின் அனைத்து ஜன்னலையும் இழுத்து சாற்றி, கையில் ஒரு பேனா, பேப்பர், அட்டையோடு வந்து அமர்ந்தவளிடம், "இந்த கேன்டில் தான் நீ சொன்ன ஸ்பெஷல் ஐட்டமா?"

"ஹீ... ஹீ... மறக்காம எல்லாரும் உங்க பங்கு காசை தந்துடுங்க."

"அடியே கஞ்சமே... இந்த அஞ்சு ரூபாய்கும் உனக்கு பங்கு வேணுமா?"

"அதெல்லாம் தெரியாது, எனக்கு வேணும்."

அடமாய் கூறியவளைப் பார்த்து, அந்த ஆறு பெண்கள் இருந்த கூட்டம் பார்த்து சிரிக்கத்தான் செய்தது. அதை எல்லாம் சுத்தமாக காதில் வாங்காதவள், எடுத்த பேப்பரை அட்டையில் ஒட்டி அதில் ஏதேதோ எழுத துவங்கினாள்.

முதலில் புரியாமல் விழித்த கூட்டம், நேரம் செல்ல செல்ல புரிந்து போக பயத்தில் நடுங்க துவங்கினர்.

"ஏய் கொலைகாரி, என்னடி பண்ற?" வேர்க்க துவங்கியது ஒரு பெண்ணுக்கு.

ஆரோஹியிடமிருந்து விஷம சிரிப்பு எதிரொலிக்க திகிலடைந்தது அனைவருக்கும்.

"க்ராதகி, என் பொறந்த நாள்டி இன்னைக்கு..."

ஆரோஹி, "எத்தனை பேருக்கு பொறந்த அன்னைக்கே இறக்குற வரம் கிடைக்கும்?"

நெஞ்சே வெடித்தது அந்த பெண்ணுக்கு. எடுத்த வேலையை முடித்தவள், எழுந்து அறையின் தாழிட்டு அருகில் நின்று, "கேன்டில் லைட் பண்ணி வை, நான் சுவிட்ச் ஆஃப் பண்றேன்."

ஆரோஹி நிற்க, சிலர் முடியவே முடியாது என்றனர். அதிலும் ஒரு பெண் மட்டும், "இன்னைக்கு பேய் கூட பேசியே ஆகுறோம்." என்றவள் மெழுகுவர்தியை ஏற்ற, ஆரோஹி மின்விசிறி, மின் விளக்கு என அனைத்தையும் அணைத்துவிட்டு தோழிகளோடு அமர்ந்து கொண்டாள்.

"ரோஹி..." ஆரோஹியின் காலில் ஒரு பெண் சுரண்டி, "பயமா இருக்குடி, நிறுத்திடலாமா? நான் மட்டும் கூட வெளிய ஓடிடுறேன்."

ஆரோஹி, "லைட் ஆஃப் பண்ணா அவ்ளோ தான், இனி பாதில எந்திரிச்சு போனா பெரிய பிரச்சனை உனக்குத்தான்." ஏதோ ஒரு பொய்யை கூறி, அவளது கையைப் பற்றி கோர்த்துக் கொண்டாள்.

"எல்லாரும் கை கோர்த்துக்கோங்க. சில ரூல்ஸ் இருக்கு, காயின் மேல எல்லாரும் விரல் வைக்கணும். ரொம்ப அழுத்தி பிடிக்க கூடாது, பயப்பட கூடாது. முக்கியமா இடத்தை விட்டு அசைய கூடாது, ஆவிகளை அவமதிக்க கூடாது."

விதிகளை கூறி முடிக்க, "ரோஹி சுத்தி இப்போ யாரும் இல்லையே?"

ஆரோஹி, "பேசாதடி, அனகோண்டா குரங்கே!"

"இப்ப என்னை பாம்புனு சொல்றியா? குரங்குனு..."

"மூடிட்டு கை வை பாலு..." மற்றொரு பெண் திட்ட, அனைவரது விரலும் அந்த ஒற்றை காயினில் வந்து நின்றது.

மங்கிய வெளிச்சத்தில் அனைவரது முகமும் பயத்தில் சிவந்திருக்க, ஆரோஹி முன் நின்று ஆட்டத்தைத் துவங்கினாள்.

"We call upon the spirit world and welcome any good spirits to talk with us." (ஆவிகளின் உலகத்திலிருந்து நல்ல ஆவிகளை எங்களோடு பேச அழைக்கிறோம்.)

முற்றும் முழுதாய் மூடிய அறையில் சில்லென்ற காற்று வீச அரண்டு போயினர் அனைவரும், "என்னடி காத்தடிக்கிது?" தந்தியடித்தது பேச்சு.

"பேய் வந்துடுச்சோ?" பீதியோடு ஒரு பெண் கேட்க,

மற்றொரு பெண், "அதுக்கு ஏன் வர்ஷா என் தோளை சுரண்டுற?"

அந்த வர்ஷாவுக்கோ கண்கள் வெளியே வந்து விழுந்துவிடும் அளவு பயம், "கீர்த்தி, என் கை காயின்ல தானே இருக்கு. நான்... நான்... எப்... எப்டி உன்னை தொடுவேன்?"

மற்றவர்களைப் பார்த்து பார்வையை சுழலவிட்ட ஆரோஹி, "பேய் வந்துடுச்சு." என்றாள் கண்களில் பயத்தோடு.

"Is there anyone here now?" (இங்கு யாராவது இருக்கீங்களா?) குரல் கேட்டு பத்து நொடிகள் அமைதி நிலவ, அவர்கள் தொட்டிருந்த காயின் தன்னாலே, 'எஸ்' என்ற எழுத்தை நோக்கி நகர்ந்த நொடி, படாரென ஜன்னல் ஒன்று அடித்து திறக்க, மெழுகும் அணைந்து போக அந்த ஆறு பெண்கள் அடித் தொண்டையிலிருந்து கத்த அவ்விடமே நடுசாமத்தில் கபளீகரமாகியது.

அடித்து பிடித்து ஒவ்வொருவரும் ஒரு பக்கம் ஓடப் பார்க்க கதவும் தென்படவில்லை, பயத்தில் சுவிட்ச் போர்டும் சிக்கவில்லை. அதோடு நில்லாது, காற்று பலமான சத்தத்தோடு வீச, சொல்லவே வேண்டாம் அவ்வளவு தான்! மொத்த விடுதியும் கூடியதோடு இல்லாமல், அந்த தெருவையே எழுப்பி விட்டிருந்தனர்.

பிறகு என்ன, அந்த பெண்கள் அனைவரும் அன்று இரவே காய்ச்சலில் விழ, ஆரோஹிக்கு கிடைத்த கூடுதல் பாராட்டில் ஒரு வாரம் காய்ச்சல் தான்.

***

கண்களுக்கு முன்னே தன்னை நோக்கி ஓடி வந்த அந்த உருவம் கண்ணில் துல்லியமாக தெரிய, அதனை மங்க செய்ய நெற்றியிலிருந்து வியர்வை, ஹெல்மட்டை விட்டு மழைத் துளி போல் பூமியை தொடர்ச்சியாக சென்றடைய, அவன் பார்வையோ சிறிதும் கவனம் சிதறவில்லை.

அவன் எண்ணமெல்லாம் தன்னை நோக்கி எரிகல்லை போல் தீயென வரும், அந்த சிறிய பந்தின் மீதே அவன் பார்வை நிலைத்திருந்தது. மணிக்கு நூற்றி நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் பறந்து வந்த பந்தினை, துல்லியமாக கையாண்டவன் சிம்ம பலத்தினால், அரங்கத்தின் நூறடி உயரத்தில் வீற்றிருந்த அந்த ப்லட்லைட் எனப்படும், விளக்கின் மையப்பகுதியை அடித்து நொறுக்க சில விளக்குகள் சில்லு சில்லாய் சிதறி விழுந்தது.

"நெருப்பா இருக்கடா அஸ்வின்." அவனுக்கு பந்து வீசிய வேக பந்து வீச்சாளர், மூச்சிரைக்க அவனைப் பார்த்து பாராட்ட, சிரிப்போடு மீண்டும் பேட்டிங் செய்ய நின்றான்.

"போதும் அஸ்வின், ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாத."

அவனது பர்ஸ்னல் கோச் அவனைத் தடுத்து கையில் ஒரு துவாலையைக் கொடுக்க, மனமே இல்லாமல் ஹெல்மட்டை அவிழ்த்து தலையைத் துடைத்தான். ஏனோ மனம் இன்னும் இன்னும் வேணும் என்றது, நிறுத்தவே மனம் வரவில்லை.

"ஏன்டா இவ்ளோ அவெர்சன்?"

சிரிப்போடு தலையாட்டியவன் கண்களில் ஒரு பிடிவாதம், "மூணு மாசம் சாலிட் ரெஸ்ட் எடுத்துட்டு, இப்ப கைல பேட் எடுக்கவும் நிறுத்த மனசு வரல டேவிட். ப்ளீஸ், இன்னும் ஒரு ஒன் ஹவர் மட்டும் ப்ராக்டிஸ் பண்ணிக்கிறேன்."

"டேய் எனக்கு டைம் ஆச்சு, பொண்ணு பர்த்டே வச்சுட்டு இவ்ளோ நேரம் இருந்ததே பெருசு." என்றார், அவர் தன்னுடைய பொருட்களை எல்லாம் கிட் பையில் அடக்கியபடி.

"ஓ... சாரி மறந்துட்டேன், நீங்க போங்க." என்றான் இன்னும் நகராமல்.

"வாய்ப்பே இல்ல அஸ்வின், கையோட உன்னை கூட்டிட்டு வரதான் எனக்கு ஆர்டர் வந்துருக்கு, வாடா."

"டேவிட் ப்ளீஸ்... நீங்க முன்னாடி போங்க, நான் கேக் கட் பண்ற டைம்க்கு கரெக்ட்டா வந்துடுவேன்." அவரை கெஞ்சி அனுப்பி வைத்தவன், அடுத்த ஒரு மணி நேரம் இடைவிடாது பயிற்சியில் இருந்தான்.

சந்திக்கும் விமர்சனங்கள் அத்தகையது. ஒரு மாதம் இடைவேளை விட்டாலே, அவன் இடத்தை பிடிக்க நூறு மனிதர்கள் காத்திருக்க, இவனோ மூன்று மாதம் இடைவேளை எடுக்க வேண்டிய நிலை. உடும்பாக விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் வேகம் அவனிடம்.

ஒருவன் மீண்டும் வந்து டேவிட் கூறியதை நினைவுபடுத்தி செல்லவும் தான் மட்டையை விடுவித்தான். மைதானத்தில் இருந்த ட்ரெஸ்ஸிங் ரூமிலே குளித்து தயாரானவன், தன்னுடைய மெஷராட்டி ஜிப்லியை எடுத்து அவனுடைய பயிற்சியாளரின் வீட்டிற்கு விரைந்தான்.

அவன் அஸ்வின், அஸ்வின் நாராயண்! இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவன். ரசிகர்களால் செல்லமாக ரன் டயனமைட் (கொடூரமாக வெடிக்கக்கூடிய வஸ்து) என அழைக்கப்படுபவன்.

மைதானத்தினுள் இறங்கிவிட்டால் அவனைத் தடுப்பார் இல்லை. முதலில் ரசிகர்களிடம் ஆக்ரோஷத்தாலும் விளையாட்டின் மேல் உள்ள தீவிரத்தாலும் அறியப்பட்டவன், பிற்காலத்தில் அவனது வளர்ச்சியின் மூலம் தன்னுடைய இருப்பை உலகிற்கே தெரிவித்தான்.

ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் அவனது ஆட்டத்திற்கும் ஆடும் முறைக்கும் அடிமையானர். சாதாரண பந்தை எதிர்கொண்டால் கூட, அதிலும் ஒரு நேர்த்தி இருக்குமென முதல்முறை பார்ப்பவர்களுக்கே புரியும்.

எங்கு திரும்பினாலும் ரசிகர்களின் படையெடுப்பு, தன்னை முதன்மையாய் வைத்து தன் வழியில் பயணிக்கும் ரசிகர்களுக்காக, ஒரு நாளும் தேங்கிடவோ தோற்றிடவோ கூடாதென, முனைப்பாய் இருந்துள்ளான்.

அதற்கு பயந்தே சிறு எலும்பு முறிவால் மூன்று மாதம் இடைவேளை விட்டு, மீண்டு வந்து தீவிரமான பயிற்சியில் இறங்கிவிட்டான்.

பிடித்த காரியத்தின் மேல் இயல்பிலே வரும் பிடித்தம் வேறு அவனைத் தூண்டிவிட, இன்னும் தன்னுள் இழுத்துக்கொண்டது கிரிக்கெட். அதில் விரும்பியே மூழ்கினான் அஸ்வின் நாராயண்.

இதோ அவனுக்கு சிறு வயதிலிருந்து பயிற்சி கொடுத்த பயிற்சியாளரின் வீட்டிற்கு வந்தவனை, ஒரு ரசிகர் பட்டாளமே சூழ்ந்து கொள்ள, அதனை ஓரமாய் நின்று பார்த்த அவன் வீட்டினருக்கு அத்தனை பெருமிதம். கூட்டத்தைத் தாண்டி தான் பெற்றோரையும் உடன் பிறந்தவனையுமே சந்திக்க முடிந்தது.

"இப்போவாவது உன் கண்ணுக்கு நாங்க தெரியுறோமே..."

இளையவன் பார்க்க, மூத்தவன் அவனது காலரை சரி செய்து, "எப்பவோ கவனிச்சிட்டேன்." கண்ணடித்து அஸ்வின் சிரிக்க, சிறியவனுக்கோ அப்பொழுதும் பெருமை தான்.

அஸ்வின் குடும்பம் இயற்கையிலேயே வசதி வாய்ந்த குடும்பம் தான். இரண்டு தலைமுறைக்கு முன்னர்தான் ஏற்றுமதி தொழில் செய்து, அதில் அதீத வளர்ச்சி அடைந்திருந்தனர்.

தந்தையின் தொழிலில் அதிகம் ஆர்வம் காட்டாத அஸ்வின், தனக்கென ஒரு பாதையை உருவாக்கி சென்றுவிட, சிறியவனான ஜெயந்த் தந்தையின் தீவிரத்தை மிஞ்சி தொழிலில் தீவிரம் காட்ட, பெரியவர்களுக்கு பாரம் நீங்கிய உணர்வு.

அது அஸ்வின், சிதம்பரத்திற்கு சாதகமாகி போக மகிழ்ச்சியாக வளைய வந்தான். ஆனாலும் தந்தையின் கிடுக்கு பிடியில் அவ்வப்போது தொழிலையும் எட்டி பார்ப்பான்.

இப்பொழுது வந்த வேலை முடிய, அன்னையின் கைகளால் விருப்பமானவற்றை வயிறார உண்டவன், தன்னுடைய வீட்டிற்கு செல்கிறேன் என சொன்ன பொழுது, குடும்பத்தினர் முகமே வாடி போனது.

"போடா படவா, இதுக்குத்தான் என்னை ஊட்டி விட சொன்னியா நீ?" சோகமாக முகத்தைத் திருப்பினார், அவன் அன்னை மதிவர்தினி.

"ம்மா கெரீயரையும் பாக்கணும் ம்மா. மூணு மாசம் உங்க கைக்குள்ள தான இருந்தேன், அடுத்த ரெண்டு மாசம் சாப்பாட்டுல கண்ட்ரோல் கொண்டு வரணும்னா இது அவசியம் ம்மா."

தலை சாய்த்து அன்னை முகம் பார்த்து மகன் கேட்க, அவனுக்காக மட்டுமே யோசித்து சரி என்றார் மதி.

🎶🎵

பூக்களுக்குள்ளே
தேன் உள்ள வரையில்
காதலர் வாழ்க

பூமிக்கு மேலே
வானுல வரையில்
காதலும் வாழ்க

காற்றே என் வாசல்
வந்தாய் மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய்

🎵🎶

அனைவரிடமிருந்தும் விடைபெற்று தன்னுடைய வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தவன் காரில், இனிமையான இசைப்புயல் இன்னிசையில் இரவை இன்னும் ரம்யமாக்கிக் கொண்டிருந்தார். அந்த நேரம் தன்னுடைய கைப்பேசி இசைக்க எடுத்து பார்த்தவன் இதழில் சிறு புன்னகை.

யவ்னிகா என்னும் பெயரை தாங்கி நின்றது அந்த அழைப்பு.

மெல்லிய சிரிப்போடு கைப்பேசியை எடுத்துப் பேச, அந்த பக்கம் ஆசையின் அழைப்பு வந்தது.

"மிஸ் யு சோ மச் அஸ்வின்!" கீதமாய் இனித்தது அவளது குரல். நாயகனுக்கோ சிரிப்பு தான், அவள் இந்த வார்த்தையை கடந்த மூன்று மாதங்களில், இன்றுதான் வாயைத் திறந்து கூறியுளாள்.

"ஆஹான்...! அப்டியா?" என்றான் கேலி இழைந்தோடிய குரலில்.

"சந்தேகமே வேணாம். எப்போதான் இந்த டூ வீக்ஸை கடந்து வர போறேனோ தெரியல பேபி, பேசாம மும்பை வாயேன் நீ..."

"பாசிபிள் இல்ல யவ்னி, இன்னைக்கு தான் ப்ராக்டிஸ் ஸ்டார்ட் பண்ணிருக்கேன்." என்றவன் கைகளில், வாகனம் இரவைக் கிழித்து சுலபமாக ஓடியது.

அந்த பக்கம் பெண்ணுக்கோ முகமே சூம்பிவிட்டது, "நானாவது வர்றேனே..."

தன்னுடைய அன்னையை நினைத்து ஒரு நொடி யோசித்தவன், உடனே அந்த எண்ணத்தை தூர வைத்துவிட்டான். "கனவுல கூட நினைச்சு பாத்துடாத, நான் கேம்ல மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணணும் நினைக்கிறேன்."

"ஸ்டாப் லையிங் அஸ்வி, யார்கிட்ட பொய் சொல்ற நீ? உன்னை பத்தி எனக்கு தெரியாதா? என்ன நீ மிஸ் பண்ணவே இல்ல?"

இவனும் சிரிப்பை மெல்ல உதட்டில் படரவிட்டு அமைதியாக இருக்க, அவளுக்கு அதன் உண்மையும் புரிந்தது. இருந்தும் ஆசையை, காதலை விட முடியவில்லை. அவன் மேல், அவன் குணத்தின் மேல், அவன் உறுதியின் மேல் வர வேண்டிய ஆசைக்கு அதிகமாகவே பிரியம் உள்ளது.

அதற்கு சுற்றம் கேட்டு காதல் என்னும் பெயரை சூடி, அதிலே கட்டுண்டு கிடக்க இருவர் மனமும் மல்லுக்கட்டி நிற்கவில்லை. போகிற போக்கில் நிதானமாக தடயத்தை எடுக்க மௌனமாக முடிவெடுத்திருந்தனர்.

"ம்ம், சொல்லு ட்ரெயினிங் எல்லாம் எப்படி போகுது?"

"எல்லாம் சூப்பர்ப் தான்" என்றான் திருப்தியான புன்னகையோடு.

"டிபிகல்டீஸ் எதுவும் இருந்ததா ப்ராக்டிஸ் பண்றப்போ?"

இதமான சூழலில் தேசிய நெடுஞ்சாலையின் கிளைப் பகுதியில், மிதமான வேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்த வாகனத்தில் இருந்த அஸ்வினின் பார்வை, முகத்தை  ஒரு குடத்தினுள் விட்டு எங்கு நடக்கிறோம் என்பதே தெரியாமல், சாலையில் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்த ஒரு நாயைக் கண்டு, யவ்னிகாவிடம் பிறகு பேசுவதாக கூறி அழைப்பைத் துண்டித்து வாகனத்தை விட்டு இறங்கினான்.

அந்த வாயில்லா ஜீவன், அருகே ஒரு மனிதனின் வாசனையை உணர்ந்து வேகத்தை அதிகரிக்க பார்க்க, அஸ்வின் மின்னல் வேகத்தில் அதனை பிடித்து முழு வீச்சில், அதன் முகத்தில் மாட்டியிருந்த குடத்தினை அவிழ்க்க பார்க்க, அந்த நாயோ அதிகமாக திமிறி அந்த சாலையில் மறு பக்கத்திற்கே அவனையும் இழுத்து வந்துவிட்டது.

"ஒன்னுமில்லடா, கொஞ்சம் பொறு." அதன் முதுகில் தடவி ஆறுதல் கூற பார்த்தும், அது அசையவே இல்லை.

குழந்தை முகமறியா மனிதனிடம் சென்று அழுவது போல், பிடி கொடுக்காமல் திமிறி நிற்க, அதன் போக்கிலே சென்று குடத்தை இழுக்க, அந்த நாயோ மறுபக்கம் தன்னை இழுத்து ஒருவழியாக தலை தப்பித்த மகிழ்ச்சியில் ஓடிவிட, பாவம் அஸ்வின்தான் கால் தடுமாறி பின்னால் இருந்த அந்த வாகனத்தோடு மோதி விழுந்தான்.

***

Continue Reading

You'll Also Like

14.7K 776 26
"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியே சந்த...
67.1K 3.6K 65
உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுப...
25.4K 797 44
கல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும்...
2.7K 339 10
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...