காதல்கொள்ள வாராயோ...

Madhu_dr_cool द्वारा

37.5K 1.9K 1.1K

Love and love only. A refreshing read, guaranteed. अधिक

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
41
42
43
Mood boards!

40

455 34 15
Madhu_dr_cool द्वारा

தாராவின் நெஞ்சம் படபடத்தது.

தானா இப்படியெல்லாம் பேசினோமென சந்தேகம் வந்தது உள்ளுக்குள். தாராவின் கோபதாபங்கள் எல்லாம் அவளது தந்தையின் ஆளுகைக்குட்பட்டது தான். வீட்டில் அவளது கோபமெல்லாம் வெப்பமான கண்ணீர்த் துளிகளோடு முற்றுப்பெற்றிடும். தன்னுவின் கோபம் சத்தமெழும்பாத வார்த்தைகளாய் வெளிவரும். தேவியின் கோபம் மட்டும் இதுவரை யாருமே பார்த்ததில்லை. கட்டிய கணவனிடமோ, பெற்ற பிள்ளைகளிடமோ, வெளியாட்களிடமோ, எவரிடமுமே இதுவரை தன் அம்மா கோபமே பட்டுப் பார்த்ததில்லை தாரா. எத்துணை துன்பங்களை சகித்துக்கொண்டு அவர் வாழ்கிறாரென விபரம் புரிந்த வயதில் அவளுக்குக்கூட கோபம் வந்ததுண்டு; ஆனால் தேவி அமைதியின் சொரூபம். மனம் இப்போது அம்மாவை நினைத்து ஆதங்கப்பட்டது. அருகில் அவர் இல்லையே என ஏங்கியது.

எதுவுமே செய்யத் தோன்றாமல் அசதி மேலோங்கக் கட்டிலில் சாய்ந்து கண்மூடினாள் அவள்.

***

ஆதித் தன் வீட்டு நிலைப்படியில் ஸ்தம்பித்து நிற்க, ராஜீவ் செய்வதறியாது கையைப் பிசைந்தான்.

"பாஸ்.. ஏதோ டென்ஷன்ல அப்டி பேசிட்டுப் போயிட்டாங்க.. நீங்க மனசுல எதையும்--"

"வேணாம் ராஜீவ். பேசாத. கிளம்புறியா ப்ளீஸ்?"

ராஜீவ் அமைதியாகத் தலைகுனிந்தான். ஆனால் நகரவில்லை.

ஆதித் இரண்டு கைகளாலும் கேசத்தைக் கோதினான். அங்குமிங்கும் நடந்தான். தலையைப் பிடித்துக்கொண்டு சோபாவில் விழுந்தான்.

பின் கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், "லேட்டாச்சு. கம்பெனிக்குப் போலாம்" என எழுந்தான். ராஜீவ் குறுக்கிட்டுத் தடுத்தான்.

"நோ பாஸ். ஓடிப்போனா பிரச்சனைகள் சரியாகாது. பேசித் தீர்க்கணும்."

"என்ன பேசணும்? அவதான் சொன்னாளே.. எல்லாம் நடிப்புன்னு!"
ஆதித் இரைந்து கத்த, ராஜீவ் துணுக்குற்றான்.

அவனறிவான், சனிக்கிழமை ஒடிசாவிற்கு நிறுவனர் சந்திப்பிற்காக வந்துவிட்டு, இரு தினங்கள் அங்கே நிலைக்கொள்ளாமல் தவித்துவிட்டு, காலை முதல் வேலையாகக் கிளம்பி வீட்டுக்கு வந்து, அங்கே தாராவைக் காணாமல் திகைத்து, அவள் கல்லூரிக்குச் சென்றது கேட்டறிந்து அவளுக்காக ஆறு மணிநேரங்கள் குட்டிபோட்ட பூனைபோல வாசலையே வழிப்பார்த்துப் பழியாகக் கிடந்தது, நேரம் தாண்டியும் அவள் வராமல் போனதால் பயந்து, பின் அவள் நடந்து வருவதைக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஆதித்தை.

"பாஸ்.. உங்க மனசைப் புரிஞ்சுக்காம தாரா அப்படி பேசிட்டாங்க.. நீங்க மனசுல மறைக்கற அன்பை கொஞ்சம் அவங்க கண்ணுல தெரியுற மாதிரி காட்டுங்க; அவங்களும் புரிஞ்சுக்குவாங்க கண்டிப்பா."

"ராஜீவ், என்னைப் போலான ஆளுங்களுக்கு எல்லாம், இந்த குடும்ப வாழ்க்கை சரிப்பட்டே வராது. நான் தேவையில்லாம என்னையும் வருத்திக்கிட்டு, அவளையும் கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கேன். விதியே இதுக்கொரு முடிவை கொண்டு வந்திருக்கு. இதை நான் எதிர்க்கப் போறதில்லை."

ஆதித் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வெளியே கிளம்ப, வாசலையும் உள்ளறையையும் மாறிமாறி வேதனையுடன் பார்த்துவிட்டு தலைகுனிந்தபடி ஆதித்தைப் பின்தொடர்ந்தான் ராஜீவும்.

***

மாலையில் ராணி வந்து எழுப்பும் போதுதான் கண்விழித்தாள் தாரா. படிக்கலாமென புத்தகங்களை எடுத்துப் பிரித்து மேசையில் அமர்ந்தாள்.

"எதாச்சும் சாப்ட்டுட்டு அப்பறமா படிக்க உட்காரேன் தாரா.." என்றார் அவர் பாசமாக.

"ப்ச், இல்லக்கா.. பசிக்கல"

"பசிக்கலைன்னாலும் என் சமையலை ரசிச்சு சாப்பிடுவியே.. இப்ப என்ன இப்படி சொல்ற?"

பெங்காலியில் அவர் அபிநயித்து அழகாகச் சொல்லவும் சிரித்துவிட்டாள் அவள்.
"கரெக்டு தான்.. வாங்க, கிச்சனுக்குப் போலாம்!"

மதியம் சமைத்த உணவுகள் மேசைமீது அப்படியே இருப்பதைக் கண்டு சற்றே யோசனையாகப் பார்த்தாள் அவள்.

"என்ன ராணிக்கா, சாப்பாடு அப்படியே இருக்கு? ஏன் யாருமே சாப்பிடல? நான்தான் வெளியே சாப்பிட்டுட்டு வந்தேன்; அவருக்கு என்னவாம்? சாப்பிடலையா ஆதித்தும் ராஜீவும்?"

இந்திராணி இல்லையெனத் தலையாட்டினார்.

"முதலாளி ஐயா ஒடிசாவுல இருந்து காலை கிளம்பி வீட்டுக்கு வந்தார் பதினோரு மணிக்கு. உன்னை எங்கேன்னு கேட்டார். நீ வந்ததும் சாப்பிட்டுக்கறேன்னு சொன்னார். மூன்றரை-நாலு மணிபோல நீ வந்தபோது, நான் பின்வாசல் பக்கம் இருந்தேன். நான் திரும்ப வந்தபோது, ஐயா சாப்பிடாமலே கிளம்பிட்டார்."

தாரா திகைத்து நிமிர்ந்தாள்.

"ஏன்?"

"தெரியலம்மா, எதுவும் சொல்லல."

யோசனையுடனே வந்து ஹாலில் அமர்ந்தபோது, எதிரிலிருந்த மேசையில் சில காகிதங்கள் கிடக்க, அவற்றை எடுத்துப் படித்துப் பார்த்தாள் அவள்.

சனி, ஞாயிறு இருதினங்களும் ஒடிசாவில் நடந்த தொழில்முனைவோர் சந்திப்பைப் பற்றிய படிவங்கள் அவை. இரவு பத்து மணிவரை நிக‌ழ்ச்சி நிரல் இருக்க, அதன்பிறகும் கேளிக்கை மற்றும் விருந்து என்று நிறைய இருந்தன.

கூட்டத்தில் குறிப்பெடுக்கக் கொடுக்கப்பட்ட குறிப்பேடு ஒன்றும் மேசையில் இருக்க, அதில் விமான நேரங்களைத் தேடி எழுதியிருந்த ஆதித்தின் கையெழுத்தைக் கண்டாள் அவள்.

நேற்றிரவு ஒடிசாவிலிருந்து கிளம்பும் விமானங்கள் எதுவும் இல்லாதிருக்க, அதிகாலை கிடைக்கும் முதல் விமானத்திற்காக இரண்டு மணிநேரங்கள் பேருந்தில் பயணித்து புவனேஷ்வர் விமான நிலையத்தை அடைந்து காலை உணவேதும் அருந்தாமல் கிளம்பி வந்திருந்தது தெரிந்தது. ஆதித் விமானத்தில் உணவருந்த மாட்டான் என்பதை அவள் பார்த்திருந்தாள்; ராஜீவ் சொல்லக் கேட்டுமிருந்தாள்.

ஏனோ மனது கனத்தது. கொஞ்சம் கண்ணும் கலங்கியது.

'எதற்காக இதையெல்லாம் செய்யவேண்டும்? எதற்காக சாப்பிடாமல் வரவேண்டும்? எதற்காக சாப்பிடாமல் செல்ல வேண்டும்? நானா கேட்டேன், என்னைப் பார்க்க நான்கு மணிநேரம் பசியோடு பயணம் செய்து வரவேண்டுமென? இவனாகவே அதையெல்லாம் செய்வான்.. நாம் ஆற்றாமையில் கத்தித் தீர்த்தபின்னர் இதெல்லாம் நமக்குத் தெரியவந்து இப்போது நம்மீதே நமக்குக் கோபம் வரும்! என்ன சூழ்ச்சி இது?? வார்த்தைகளில் ஒருதுளி அன்பைக் காட்டாமல், நினைத்தால் நெருங்கி, நினைத்தால் விலகி நம்மைப் பைத்தியமாக்கினான். ஆனால் நியாயம் கேட்ட நேரத்தில் தவறெல்லாம் நம்மீதா??'

ஆற்றாமையும் அழுகையுமாய் கூடத்தில் அவள் அமர்ந்திருக்க, தட்டில் சிற்றுண்டியுடன் வந்த இந்திராணி கரிசனமானார்.

"தாரா, கி ஹோலோ?" (என்ன ஆச்சு)

பதில்தராமல் எழுந்து அறைக்கு வந்துவிட்டவள், அவசரமாக அம்மாவை அழைத்தாள் அழுகை வருமுன்.

"அம்மா.. நான் தாரா பேசறேன்.."

"தாராக்குட்டி!! அம்மாவே கூப்பிடணும்னு நினைச்சேன்.. நீ குடுத்துவிட்ட பட்சணமெல்லாம் பர்வதம்மா கொண்டுவந்து தந்தாங்க! எல்லாத்தையும் உன் தம்பி பிரிச்சு ருசிபார்த்துட்டான்! இன்னும் என்னென்ன வேணும்னு லிஸ்ட்டு வேற போட்டு வெச்சிருக்கான்!!"

மட்டற்ற சிரிப்புடன் அவர் கதைக்க, இங்கோ தொண்டையை அடைத்த அழுகையைத் தடுக்கத் தெரியாமல் கேவியழுதாள் அவள்.

"அ--அம்மா--அம்மா... நான் வீட்டுக்கு வர்றேன்மா.. நான் இங்க இருக்கல.. எனக்கு வீட்டுக்கு வரணும்போல இருக்கு.."

தேவியின் குரலில் இப்போது சிரிப்பு அறவே மறைந்துவிட்டது. பதற்றத்தோடு என்னவென அவர் வினவ, அவளோ சொன்னதையே திரும்பச் சொன்னாள்.

"எனக்கு இங்க இருக்க வேணாம். பிடிக்கலை. வீட்டுக்கு வரேன்."

"தாராம்மா.. நீயும் மாப்பிள்ளையும் சந்தோஷமா இருக்கறதா பர்வதம்மா சொல்லிட்டுப் போயி ஒரு நாள்கூட ஆகல. நீ என்னடா இப்படி என் வயித்துல புளியைக் கரைக்கிற? என்ன பிரச்சனைன்னு சொல்லு, அம்மா இருக்கேன்ல..?"

என்ன சொல்வதெனத் தெரியாமல் விழித்தாள் தாரா.

இருபத்திரண்டு வருடங்களாய் ஏச்சுக்களும் பேச்சுக்களும் சிலநேரம் அடிகளும் கூட பெற்றும் இன்னும் குடும்பம் நடத்தும் தாயிடம், பொய்க் கல்யாணம் செய்தவன் தன்னிடம் பேசாமல் இருப்பதால் வருத்தமெனச் சொன்னால்...?

"அம்மா.. உங்களை, அப்பாவை, தன்னுவை எல்லாம் பார்க்கணும்போல இருக்கும்மா. நான் அங்க வரேன்"

மறுமுனையில் தேவியும் விசும்பினார் சத்தமாக.

"அம்மாவுக்கும் உன்னைவிட்டு இருக்கக் கஷ்டமா தான்டா இருக்கு. ஆனா எத்தனை கஷ்டமா இருந்தாலும் கட்டிக்குடுத்த பொண்ணை திரும்ப வீட்டுக்கு கூப்பிட்டுக்க முடியுமா? கொஞ்சம் யோசிம்மா.."

அவள் அமைதியாக இருக்கவும் தேவி சற்றுப் பதற்றமானார்.

"தாரா!? தாரா?? கேட்குதா..? என்னடா பதில் பேச மாட்டேங்கற?"

"அம்மா. வைக்கறேன்."

கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து வந்தவள், வாசற்படியில் சென்று அமர்ந்தாள். பொழுது சாய்ந்துவிட, வானில் கரும்பச்சை நிறம்மாறி காரிருள் சூழ, வீதி விளக்குகள் விழித்தெழ, பேதை மனம் கலங்க வாசற்காலோடு சாய்ந்து வழிப்பார்த்திருந்தாள் தாரா.

***

சுமார் பத்தரை மணிக்குக் கணினியை அணைத்துவிட்டுக் கண்களைக் கசக்கினான் ஆதித், தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தவாறு.

களைப்பான குரலோடு ராஜீவ், "பாஸ்.. நீங்க காலைல இருந்து சாப்பிடலை. கேண்ட்டீன்ல வாங்கிட்டு வந்த டிபனையும் தொடவே இல்லை. இப்படி கம்ப்யூட்டரையே கொட்டக் கொட்டப் பார்த்திருந்தா உங்க உடம்பு என்னத்துக்காகும்? போலாம் வாங்க பாஸ்.." என அழைத்தான்.

"நீ போ மேன், எனக்கு வேலை இருக்கு."

"வொர்க்கஹாலிஸம்-னா என்னன்னு தெரியுமா பாஸ்?"

"ப்ச், ராஜீவ்--"

"தாரா தூங்கியிருப்பா. தயவுசெய்து வீட்டுக்கு போங்க. அவளோட பேசுங்கன்னு சொல்லல. போய் கொஞ்சம் சாப்பிட்டுத் தூங்கி ரெஸ்ட் எடுங்க. ப்ளீஸ் பாஸ்."

"ஐ டோன்ட்--"

"ஸாரி பாஸ், எனக்கு வேற வழி தெரியலை. இப்ப நீங்க கிளம்பலைன்னா, நான் பர்வதம் மேடத்துக்கு ஃபோன் பண்ண வேண்டியிருக்கும்."

ராஜீவை நன்றாக முறைத்துவிட்டு எழுந்து வெளியேறினான் ஆதித்.

கொல்கத்தா சாலைகள் பெரும்பாலும் வெறுமையாகவே இருந்தன. எனினும் வேகம் எடுக்காமல் மெல்லமாகத்தான் காரை செலுத்தினான். பெங்காலிப் பாடல்கள் ஸ்டீரியோவில் இனிமையாக இசைத்தன. வேறொரு நாளென்றால் ரசித்திருப்பானோ என்னவோ, இப்போது கவனம் எங்கோ இருந்தது. அதனாலோ என்னவோ வீட்டை அடைந்தபோது வாசல் திறந்து இன்னும் வெளிச்சம் வந்துகொண்டிருந்ததை சில நிமிடங்கள் கழித்தே கவனித்தான்.

காரை நிறுத்தவிட்டுப் படியேற வரும்போது தாரா எழுந்து வந்தாள் எதிரில்.

அழுது சிவந்திருந்த அவளது கண்கள், களைப்பால் சிவந்திருந்த அவனது கண்களை நோக்கின.

"தாரா--" என்று ஏதோ சொல்ல வந்தவனை இடையிட்டு, "ஸாரி" என்றாள் அவள்.

அவன் மறுப்பாகத் தலையசைத்தான்.
"ஸாரி நான்தான் சொல்லணும். மறுபடி மறுபடி உன்னை கஷ்டப்படுத்தறது நான்தானே? ஐம் ஸாரி. ரொம்பவே."

இருவரும் நெடுநேரம் வார்த்தையில்லாமல் வாசலிலேயே நின்றனர்.

தாராதான் முதலில் சுதாரித்து, "சாப்பிட்டீங்களா?" என்றாள்.

அவன் தலையை அசைத்தான் இடவலமாக.

"சாப்பிடலாமா? சேர்ந்து?"

கனிவு பொங்கும் கண்களுடன் நிமிர்ந்து அவள் கேட்க, ஏனோ வார்த்தையின்றி நின்றான் அவன்.

....

ஹலோஓஓஓஓஓஓஓஓ........!!!!

யாராவது இருக்கீங்களா......???

கடைசியா ஏப்ரல் மாசம் பார்த்தது. இப்ப ஜூன் வந்துடுச்சு. எல்லாரும் செம்ம கடுப்புல இருப்பீங்கனு தெரியுது.

ஒரு நல்ல சேதி சொல்லவா?

நான் பாஸாகிட்டேன்! எம்.பி.பி.எஸ் டிகிரி முடிவடைந்தது!!! மே மாசத்துல ஹவுஸ் சர்ஜனா வேலைக்கும் சேர்ந்தாச்சு!!!

வேலை கழுத்துவரை இருக்கு. அதுவும் ஹாஸ்பிடல் என்பதால் முழுக்கவனமும் வேலையில் தேவை. உயிர் சம்பந்தமான விஷயமில்லையா? அதான், இராப்பகலா மருத்துவ புத்தகங்களை மறுபடியும் தூசிதட்டி படிக்க ஆரம்பிச்சாச்சு. முதல் முறை தேர்வுகளுக்காக; இம்முறை நிஜமாவே உயிரைக் காப்பாற்ற!

எனவே வாட்பேட் பக்கம் வருவது கொஞ்சம் அரிதுதான். என்னைக் காணாமல் கமெண்ட் செக்சனில் குரல்கொடுத்த கருணை நெஞ்சங்களுக்கு நன்றி. இன்பாக்ஸில் வந்து நலம் விசாரித்த இனிய நண்பர்களுக்கும் நன்றி. கதை எப்போதாவதுதான் எழுத முடியும். சிரமத்திற்கு வருந்துகிறேன்.

அன்புடன்,
மது.



पढ़ना जारी रखें

आपको ये भी पसंदे आएँगी

58.7K 3.2K 53
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்...
18.9K 1.7K 44
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
62.8K 4.2K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...